திரித்துவக் கல்லூரியை வீழ்த்திய ரோயல் கல்லூரி

270
75th Bradby - 1st Leg

ரோயல் மற்றும் திரித்துவக் கல்லூரிகளுக்கிடையில் 75ஆவது முறையாக நடைபெற்ற ப்ரெட்பி (Bradby) கிண்ணத்திற்கான ரக்பி போட்டியில், சகல துறைகளிலும் பிரகாசித்த, கொழும்பு ரோயல் கல்லூரி 34 – 17 என்ற புள்ளிகள் அடிப்படையில் முதல் கட்டப் போட்டியில் வெற்றியை பெற்றுக்கொண்டது.

இலங்கையில் காணப்பட்ட பயங்கரவாத நிலைமை காரணமாக நியமித்த திகதியில் இருந்து பிற்போடப்பட்ட ப்ரெட்பி கிண்ண போட்டியானது, பலத்த பாதுகாப்பின் மத்தியில் நேற்று ஜூன் 1 ஆம் திகதி பல்லேகல திரித்துவக் கல்லூரி ரக்பி மைதானத்தில் நடைபெற்றது. நாட்டின் தற்போதைய இக்கட்டான நிலைமை காரணமாக முன்னைய போட்டிகளை விடவும் ரசிகர்களின் வரவில் சற்று குறைவு காணப்பட்டது.

இலகு வெற்றியுடன் உலகக் கிண்ண பயணத்தை தொடங்கியிருக்கும் அவுஸ்திரேலியா

இப்போட்டியானது ரக்பி லீக் போட்டிகளின், இரண்டாவது சுற்றின் முதல் போட்டியாகவும் காணப்பட்டது. திறமை மிக்க இரண்டு அணிகள் மோதிக்கொண்டமையால், இறுதி நிமிடம் வரை இரண்டு அணிகளும் எதிரணிக்கு பலத்த சவால் விடுத்தது. இறுதியில் போட்டியை நிதானமாகவும், பக்குவமாகவும் கையாண்ட ரோயல் கல்லூரி வெற்றியை தனதாக்கிக்கொண்டது.

போட்டி ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே சொந்த மண்ணில் விளையாடும் திரித்துவக் கல்லூரி, டெவின் கருணாநாயக்காவின் மூலம் ட்ரை வைத்து முதலாவது புள்ளிகளை பெற்றுக்கொண்டது. ரோயல் அணி வீரரின் உதையை பெற்றுக்கொண்ட கருணாநாயக்க, இரண்டு எதிரணி வீரர்களை தாண்ட ட்ரை கோட்டை கடந்தார். மிரங்க சுபசிங்கவின் கொன்வெர்சன் செய்வதற்கான முயற்சி தவற திரித்துவக் கல்லூரி 5 புள்ளிகளை மாத்திரமே பெற்றுக்கொண்டது. (ரோயல் கல்லூரி 00 – 05 திரித்துவக் கல்லூரி)

முதல் சில நிமிடங்களிலேயே புள்ளிகளை ரோயல் கல்லூரி விட்டுக்கொடுத்தாலும், தொடர்ந்து இரண்டு ட்ரைகளை அதன் பின்னர் வைத்து போட்டியில் முதல் தடவையாக முன்னிலை பெற்றது. தலைவர் துலைப் ஹஸன்  ரோயல் கல்லூரியின் சார்பாக முதலாவது ட்ரையை வைத்தார். அதை தொடர்ந்து அச்சித்த ரதீஷான் ரோயல் கல்லூரி சார்பாக இரண்டாவது ட்ரை வைத்து, தமது அணியை முன்னிலைக்கு அழைத்து சென்றார். முதலாவது கொன்வெர்சன் செய்வதற்கான வாய்ப்பை துலான் குணவர்தன தவறவிட்டபோதும், இரண்டாவது வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கோல் கம்பத்தின் நடுவே பந்தை பந்தை உதைத்து தமது அணிக்கு 2 புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார். (ரோயல் கல்லூரி 12 – 05 திரித்துவக் கல்லூரி)

திரித்துவக் கல்லூரி தொடர்ந்து நிதானமற்ற விளையாட்டை வெளிப்படுத்தியது, இதன் காரணமாக திரித்துவக் கல்லூரி பல பெனால்டிகளை ரோயல் கல்லூரிக்கு வாரி வழங்கியது. இதை பயன்படுத்திக்கொண்ட ரோயல் கல்லூரி துலான குணவர்தன மூலமாக கம்பங்களின் நடுவே உதைத்து 3 புள்ளிகளை பெற்றுக்கொண்டது. (ரோயல் கல்லூரி 15 – 05 திரித்துவக் கல்லூரி)

எனினும் முதலாவது பாதி முடிவைடய முன்னர் தனது திறமையை வெளிப்படுத்திய திரித்துவக் கல்லூரி திறேன் ரத்வத்த மூலமாக தமது இரண்டாவது ட்ரையை வைத்து தமது ரசிகர்களுக்கு நம்பிக்கையளித்தது. சுபசிங்க இம்முறை சிறப்பாகாக ட்ரையை கொன்வெர்சன் செய்ததன் மூலம், திரித்துவக் கல்லூரி வெறும் 3 புள்ளிகள் பின்னடைவில் முதலாவது பாதியை முடித்துக்கொண்டது. (ரோயல் கல்லூரி 15 – 12 திரித்துவக் கல்லூரி)

முதல் பாதி: ரோயல் கல்லூரி 15 – 12 திரித்துவக் கல்லூரி

இரண்டாம் பாதி ஆரம்பத்திலேயே ரோயல் கல்லூரிக்கு அதிர்ச்சி கொடுத்த திரித்துவக் கல்லூரி, ஹர்ஷ சமரசிங்க மூலமாக ட்ரை வைத்து மீண்டும் ஒரு முறை போட்டியில் முன்னிலையை பெற்றது. இம்முறை சமரசிங்க 50 மீட்டர் தூரம் பந்தை தனியாக எடுத்து சென்று ட்ரை வைத்து அசத்தினார். எனினும் இதன் மூலம் கிடைத்த கொன்வெர்சன் திரித்துவக் கல்லூரி அணியினரால் தவறவிடப்பட்டது. (ரோயல் கல்லூரி 15 – 17 திரித்துவக் கல்லூரி)

போட்டியின் புகைப்படங்களைப் பார்வையிட…

இரண்டாம் பாதியில் தனது முன் வரிசைக்கு மாற்று வீரர்களை ரோயல் கல்லூரி களம் இறக்கி திரித்துவக் கல்லூரிக்கு கடும் அழுத்தத்தை கொடுத்தது. இதன் மூலம் முன் வரிசையின் பலத்தை பயன்படுத்தி முன் நகர்ந்த ரோயல் கல்லூரி லெஹான் குணரத்ன மூலமாக ட்ரை வைத்து தமது ரசிகர்களுக்கு விருந்தளித்தது. (ரோயல் கல்லூரி 20 – 17 திரித்துவக் கல்லூரி)

மீண்டும் ஒரு முறை சிறப்பான யுக்தியை கையாண்ட ரோயல் கல்லூரி, லெஹான் குணரத்ன மூலம் மற்றுமொரு ட்ரையை பெற்றுக்கொண்டது. மலீஷ பெரேரா எவ்வித தடையுமின்றி கொன்வெர்சனை பூர்த்தி செய்து, ரோயல் கல்லூரிக்கு மேலும் இரண்டு புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார். (ரோயல் கல்லூரி 27 – 17 திரித்துவக் கல்லூரி)

போட்டி முடிவடைய முன்னர் மீண்டும் ஒரு ட்ரை வைத்த ரோயல் கல்லூரி, தமது பலத்தை வரலாற்றில் மற்றுமொரு முறை பதித்தது. இம்முறை கெவின் சமரசேகரவின் ட்ரை உடன் போட்டியை 17 புள்ளிகள் முன்னிலையில் ரோயல் கல்லூரி முடித்துக்கொண்டது.

முழு நேரம்: ரோயல் கல்லூரி 34 (5T, 3C,1P )  – 17 (3T,1C) திரித்துவக் கல்லூரி

இன்னும் இரண்டு கிழமைகளில் நடைபெறவுள்ள ப்ரெட்பி இரண்டாம் கட்ட போட்டியில், 18 புள்ளிகளை மேலதிகமாக பெற்று ப்ரெட்பி கிண்ணத்தை திரித்துவக் கல்லூரி மலையகத்திற்கு எடுத்து செல்லும்மா என்று மலையக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

ThePapare.com போட்டியின் சிறந்த வீரர் – நிப்புன யசோஜன

புள்ளிகள் பெற்றோர் விபரம்

ரோயல் கல்லூரி
ட்ரை – லெஹான் குணரத்ன(2), கெவின் சமரசேகர(1), துளைப் ஹசன்(1), அச்சித்த ரதீஷான்(1)
கொன்வெர்சன் – துலான் குணவர்தன(1), மலீஷ பெரேரா(2)

திரித்துவக் கல்லூரி
ட்ரை – ஹர்ஷ சமரசிங்க(1), டிரெண் ரத்வத்த(1), டெவில் கருணாநாயக்க(1)
கொன்வெர்சன் – மிரங்க சுபசிங்க(1)

>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<