இலங்கை 19 வயதிற்குட்பட்டோர் அணியின் பயிற்சிவிப்பாளர் ரோய் டயஸ் 2018ஆம் ஆண்டு நியூசிலாந்தில் நடைபெறவுள்ள 19 வயதிற்குட்பட்டோர் உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு அனுபவம் ஒரு முக்கிய காரணியாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தென் ஆபிரிக்க 19 வயதிற்குட்பட்டோர் அணி தற்போது இலங்கை மண்ணில் இலங்கை 19 வயதிற்குட்பட்டோர் அணியோடு கிரிக்கட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் இலங்கை 19 வயதிற்குட்பட்டோர் அணியில் கடந்த சில மாதங்களுக்கு முன் பங்களாதேஷில் நடைபெற்று முடிவடைந்த 19 வயதிற்குட்பட்டோர் உலக கிண்ண கிரிக்கட் போட்டிகளில் இலங்கை அணி சார்பாக விளையாடிய சம்மு அஷான், தமித சில்வா, அவிஷ்க பெர்னான்டோ மற்றும் விஷாட் ரந்திக்க ஆகிய அனுபவமுள்ள வீரர்கள் விளையாடி இருந்தார்கள். இதனை வைத்து புதிய வீரர்களின் முன்னேற்றத்துக்கு அனுபவம் வாய்ந்த வீரர்களின் உதவி அவசியம் என்று ரோய் டயஸ் கூறி உள்ளார்.
அவர் பேசுகையில் “தென் ஆபிரிக்க 19 வயதிற்குட்பட்டோர் அணிக்கு எதிரான இலங்கை 19 வயதிற்குட்பட்டோர் அணியில் 4 அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். மற்ற அனைத்து வீரர்களும் சர்வேதேச அளவில் தமது முதலாவது 19 வயதிற்குட்பட்டோர் போட்டியில் பங்கு கொள்கின்றனர். அவர்கள் மிகவும் சிறப்பாக விளையாடுகிறார்கள். அவர்களுக்கு நிறைய போட்டிகளில் வாய்ப்பு வழங்கி அவர்களது திறமைகளை வெளிக்கொண்டு வரவேண்டும். தனது திட்டம் அவர்களை 2018ஆம் ஆண்டு நியூசிலாந்தில் நடைபெறவுள்ள 19 வயதிற்குட்பட்டோர் உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு தயார் செய்வதாகும்.
தற்போது நாம் 19 வயதிற்குட்பட்டோர் கிரிக்கட் போட்டிகளில் விளையாடுகின்றோம். ஆனால் அந்த அணியில் 17வயதிற்கு மேலான வீரர்களே அதிகமாக உள்ளனர். அதனால் அவர்களுக்கு அனுபவத்தை வழங்க வேண்டும். அது தான் முக்கியம். எமது அணியில் அனுபவம் உள்ள வீரர்கள் விளையாடுகின்றனர். இதன் மூலம் இளைய புதுமுக வீரர்கள் படிப்பினை பெற வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்