இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடாத்தும் 2017/18 பருவகாலத்துக்கான பிரதான உள்ளுர் கழகங்களுக்கு இடையிலான டி20 தொடர் கடந்த வியாழக்கிழமை நிறைவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து உள்ளுர் கழகங்களுக்கிடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட கிரிக்கெட் போட்டி கடந்த 9ஆம் திகதி ஆரம்பமாகியது. 23 கழகங்களின் பங்குபற்றலுடன் நடைபெற்று வருகின்ற இம்முறை போட்டித் தொடர் A, B, C, D என நான்கு பிரிவுகளாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், போட்டித் தொடரின் 4ஆவது நாளான இன்று (12) ஒன்பது போட்டிகள் நடைபெற்றதுடன், இதில் 4 போட்டிகள் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டு முடிவுகள் இன்றி நிறைவுக்கு வந்ததுடன், கொழும்பு, ராகம, இராணுவப்படை, தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் பதுரெலிய ஆகிய கிரிக்கெட் கழகங்கள் வெற்றிகளைப் பதிவுசெய்தன.
நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் ராகம கிரிக்கெட் கழகம்
D குழுவுக்காக நடைபெற்ற மற்றுமொரு போட்டியில் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகத்தை எதிர்கொண்ட ராகம கிரிக்கெட் கழகம் ரொஷேன் சில்வாவின் அபார துடுப்பாட்டத்தின் உதவியினால் 2 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டி, இத்தொடரில் தமது இரண்டாவது தொடர்ச்சியான வெற்றியை அவ்வணி பெற்றுக்கொண்டது.
சுதந்திர கிண்ணத் தொடரில் போட்டித் தடையைப் பெறும் சந்திமால்
கதிரான கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் நாண சுழற்சியில் வெற்றிபெற்ற ராகம கிரிக்கெட் கழகம் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதன்படி களமிறங்கிய நீர்கொழும்பு அணிக்காக 4ஆம் இலக்கத்தில் களமிறங்கிய அகீல் இன்ஹாம் 127 பந்துகளில் 89 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். இதன் மூலம் அந்த அணி 49.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 233 ஓட்டங்களைப் பெற்றது.
பந்துவீச்சில் ராகம அணிக்காக சஹன் நாணயக்கார மற்றும் இஷான் ஜயரத்ன தலா 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.
தொடர்ந்து 234 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராகம கிரிக்கெட் கழகம் 49.2 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியைப் பதிவுசெய்தது.
அவ்வணிக்காக இறுதிவரை ஆட்டமிழக்காது துடுப்பெடுத்தாடிய ரொஷேன் சில்வா 81 ஓட்டங்களையும், லஹிரு மிலந்த 78 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொடுத்தனர்.
போட்டியின் சுருக்கம்
நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் – 233 (49.3) – அகீல் இன்ஹாம் 89, தரிந்து வீரசிங்க 29, பிரவீன் பெர்னாண்டோ 27, சஹன் நாணயக்கார 3/31, இஷான் ஜயரத்ன 3/51
ராகம கிரிக்கெட் கழகம் – 234/8 (49.2) – ரொஷேன் சில்வா 81*, லஹிரு மிலந்த 78, நிஷான் பீரிஸ் 22*, செவ்விந்த சில்வா 2/37, ஷெஹான் வீரசிங்க 2/40
முடிவு – ராகம கிரிக்கெட் கழகம் 2 விக்கெட்டுக்களால் வெற்றி
தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் எதிர் இலங்கை கடற்படை விளையாட்டுக் கழகம்
வெலிசரை கடற்படை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை கடற்படை அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகத்துக்கு வழங்கியது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய தமிழ் யூனியன் கழகத்திற்கு மத்திய வரிசையில் களமிறங்கிய அனுபவமிக்க வீரரான தரங்க பரணவிதாரனவின்(118) சதம் மற்றும் சிதார கிம்ஹானின்(53) அரைச்சதத்தின் உதவியுடன் 8 விக்கெட்டுக்களை இழந்து 262 ஓட்டங்களைப் பெற்றது.
தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய இலங்கை கடற்படை விளையாட்டுக் கழகம் 46 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டப் போட்டியில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 161 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. இதன்படி, டக்வத் லூவிஸ் முறைப்படி தமிழ் யூனியன் கழகம் 88 ஓட்டங்களால் வெற்றியைப் பதிவுசெய்தது.
போட்டியின் சுருக்கம்
தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் – 262/8 (46) – தரங்க பரணவிதாரன 118, சிதார கிம்ஹான் 53, குசல் எடுசூரிய 2/34, இஷான் அபேசேகர 2/44, நுவன் சம்பத் 2/55
இலங்கை கடற்படை விளையாட்டுக் கழகம் – 161 (34) – புத்திக ஹசரங்க 36, குசல் எடுசூரிய 34, தினுக் விக்ரமநாயக்க 3/43, பிரமோத் மதுஷான் 2/33, ரமித் ரம்புக்வெல்ல 2/37
முடிவு – தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் 88 ஓட்டங்களால் வெற்றி (டக்வத் லூவிஸ் முறை)
கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் பொலிஸ் விளையாட்டுக் கழகம்
C குழுவுக்காக கொழும்பு கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டி சீரற்ற காலநிலையால் 25 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.
இலங்கை அணியின் தலைவராக மீண்டும் திசர பெரேரா
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட கொழும்பு அணி ஆரம்பம் முதலே சற்று தடுமாறியது. எனினும், மத்திய வரிசையில் துடுப்பெடுத்தாடிய வனிந்து ஹசரங்க டி சில்வா 39 பந்துகளில் 5 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 40 ஓட்டங்களையும், அஷான் பிரியஞ்சன் 28 பந்துகளில் 6 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 37 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொடுக்க அந்த அணி 24.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பொலிஸ் அணியின் விக்கெட்டுகள் ஆரம்பம் முதல் அடுத்தடுத்து வீழ்த்தப்பட 87 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியைத் தழுவியது.
பந்துவீச்சில் கொழும்பு கிரிக்கெட் கழகத்திற்காக அஷான் பிரியஞ்சன் மற்றும் மாதவ வர்ணபுர ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.
போட்டியின் சுருக்கம்
கொழும்பு கிரிக்கெட் கழகம் – 169 (24.5) – வனிந்து ஹசரங்க 40, அஷான் பிரியஞ்சன் 37, சச்சித் பத்திரன 24, ஹசித லக்மால் 3/02, மஞ்சுல ஜயவர்தன 2/22, சமோத் பியுமால் 2/27
பொலிஸ் விளையாட்டுக் கழகம் – 87 (20.1) – மஞ்சுல ஜயவர்தன 29, அஷான் பிரியஞ்சன் 3/18, மாதவ வர்ணபுர 3/28, லக்ஷான் சந்தகன் 2/11
முடிவு – கொழும்பு கிரிக்கெட் கழகம் அணி 82 ஓட்டங்களால் வெற்றி
லங்கன் கிரிக்கெட் கழகம் எதிர் இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகம்
B குழுவுக்காக நடைபெற்ற இப்போட்டியில் லங்கன் கிரிக்கெட் கழகத்தை எதிர்கொண்ட இராணுவப்படை விளையாட்டுக் கழகம் போட்டியை 5 விக்கெட்டுகளால் வென்றது.
பனாகொடை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி இராணுவப்படை அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது.
இதன்படி, சீரற்ற காலநிலையால் 26 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய லங்கன் கிரிக்கெட் கழகம் 21.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 98 ஓட்டங்களுக்கு சுருண்டது.
பந்துவீச்சில் இராணுவப்படை அணியின் இடதுகை சுழல் பந்துவீச்சாளர் ருச்சிர தரிந்து சில்வா 14 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி அசத்தினார்.
பதிலுக்கு 99 ஓட்டங்கள் என்ற இலகுவான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இராணுவப்படை அணி 16.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. அவ்வணி சார்பாக டில்ஷான் டி சொய்சா ஆட்டமிழக்காது 34 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டார்.
போட்டியின் சுருக்கம்
லங்கன் கிரிக்கெட் கழகம் – 98 (21.5) – நவீன் கவிகார 19, யஷான் சமரசிங்க 18, சஷின் பெர்னாண்டோ 18, ருச்சிர தரிந்து 5/14
இராணுவப்படை விளையாட்டுக் கழகம் – 99/5 (16.4) – டில்ஷான் டி சொய்சா 34*, லக்ஷித மதுஷான் 27, நவீன் கவிகார 3/22, தினுஷ்க மாலன் 2/26
முடிவு – இராணுவப்படை விளையாட்டுக் கழகம் 5 விக்கெட்டுகளால் வெற்றி
இலங்கை விமானப்படை விளையாட்டுக் கழகம் எதிர் பதுரெலிய கிரிக்கெட் கழகம்
கட்டுநாயக்க விமானப்படை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற விமானப்படை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய அவ்வணி, SL பெர்னாண்டோ(75) மற்றும் ரொஸ்கோ தட்டிலின்(71) அரைச்சதங்களின் உதவியுடன் 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 263 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பதுரெலிய கிரிக்கெட் கழகம், 49.5 ஓவர்கள் நிறைவில் 267 ஓட்டங்களைப் பெற்று வெற்றியிலக்கை அடைந்தது. அந்த அணிக்காக பெதும் நிஸ்ஸங்க 58 ஓட்டங்களையும், சஞ்சய சதுரங்க 48 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்று வலுச்சேர்த்திருந்தனர்.
போட்டியின் சுருக்கம்
இலங்கை விமானப்படை விளையாட்டு கழகம் – 263/8 (50) – SL பெர்னாண்டோ 75, ரொஸ்கோ தட்டில் 71, சொஹான் ரங்கிக 28*, திலிப் தாரக 25, அசங்க சில்வா 2/47, திலேஷ் குணரத்ன 2/54
பதுரெலிய கிரிக்கெட் கழகம் – 267/8 (49.5) – பெதும் நிஸ்ஸங்க 58, சஞ்சய சதுரங்க 48, நதீர நாவெல 36, ஷிரான் ரத்னாயக்க 32, டில்ஹான் குரே 30, சொஹான் ரங்கிக 2/53
முடிவு – பதுரெலிய கிரிக்கெட் கழகம் 2 விக்கெட்டுக்களால் வெற்றி