மிர்புரில் பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிக்காட்டி ஆட்ட நாயகன் விருது வென்ற இலங்கை அணி வீரர் ரொஷேன் சில்வா ICC யின் சர்வதேச டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் தொடர்ந்து முன்னெற்றம் கண்டுள்ளார்.
[rev_slider LOLC]
சில்வாவின் பொறுப்பான ஆட்டத்தால் குறித்த டெஸ்டில் இலங்கை அணி 215 ஓட்டங்களால் வென்று 1-0 என தொடரையும் கைப்பற்றியது. இந்த டெஸ்ட் போட்டியில் சில்வா முதல் இன்னிங்ஸில் 56 ஓட்டங்களைப் பெற்றதோடு இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டமிழக்காது 70 ஓட்டங்களைக் குவித்தார். இந்த ஆட்டத்தின் மூலம் 29 வயதான ரொஷேன் அதிரடியாக 29 இடங்கள் முன்னேறி முதல் 50 இடங்களுக்குள் வந்தார். அதாவது அவர் முதல் முறை தரவரிசையில் 49ஆவது இடத்திற்கு வந்துள்ளார்.
இலங்கையுடனான T-20 தொடரில் இருந்து விலகும் சகிப் அல் ஹசன்
இலங்கை மற்றும் பங்களாதேஷ்..
சில்வா பங்களாதேஷுடனான முதல் டெஸ்ட் போட்டியில் 109 ஓட்டங்களை பெற்றபோது தரவரிசையில் 106ஆவது இடத்தில் இருந்து 76ஆவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டார். இந்நிலையில் அவரது தற்போதைய முன்னேற்றம் மூலம், அதிக தரைநிலையை பெற்ற இலங்கை டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் சில்வா 7ஆவதாக உள்ளார். இதில் தினேஷ் சந்திமால் 12ஆவது இடத்தை பிடித்து முதலிடத்தில் இருந்தபோதும் புதிய தரவரிசையில் மூன்று இடங்கள் பின்தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று குசல் மெண்டிஸ் இரண்டு இடங்கள் முன்னேறி 21ஆவது இடத்திலும் அஞ்செலோ மத்திவ்ஸ் 24ஆவது இடத்திலும், நான்கு இடங்கள் பின்தள்ளப்பட்ட திமுத் கருணாரத்ன 32ஆவது இடத்திலும் தனஞ்சன டி சில்வா 38ஆவது இடத்திலும் நிரோஷன் திக்வெல்ல 4 இடங்கள் பின்தள்ளப்பட்டு 45ஆவது இடத்திலும் காணப்படுகின்றனர்.
மிர்பூர் டெஸ்டில் துடுப்பாட்டத்தில் சோபிக்கத் தவறிய பங்களாதேஷ் வீரர்கள் தரவரிசையிலும் சரிவை சந்தித்தனர்.
மறுபுறம் மிர்பூர் டெஸ்டில் தனது கன்னி போட்டியிலேயே மொத்தமாக 8 விக்கெட்டுகளை வீழ்த்திய அகில தனஞ்சய ICC டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் அதிரடியாக நுழைந்துள்ளார். அவர் 58ஆவது இடத்தில் இருந்து தனது தரவரிசை நிலையை ஆரம்பித்துள்ளார். இதில் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மால் மூன்று இடங்கள் முன்னேறி 30ஆவது இடத்தை பிடித்தார்.
அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இடதுகை பந்துவீச்சாளர் என்ற சாதனையை முறியடித்த அனுபவ சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் தொடர்ந்து இலங்கையின் உச்ச தரநிலையில் உள்ள பந்துவீச்சாளராக தம்மை தக்கவைத்துக் கொண்டுள்ளார். மிர்புர் டெஸ்டில் அவர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியபோதும் அவர் ஒரு இடம் சரிந்து எட்டாவது இடத்தில் உள்ளார்.
>> தனஞ்சயவின் மாய சுழலோடு பங்களாதேஷுடனான டெஸ்ட் தொடர் இலங்கை வசம்
பங்களாதேஷ் அணிக்கு திருப்தி அடையும் செய்தியாக இடதுகை சுழற்பந்து வீச்சாளர் தைஜுல் இஸ்லாம் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகியோர் தரவரிசையில் முன்னேற்றம் கண்டதோடு நீண்ட இடைவேளைக்கு பின் அணிக்கு திரும்பிய சுழற்பந்து வீச்சாளர் அப்துர் ரஸ்ஸாக் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி தரவரிசையில் 95ஆவது இடத்தில் உள்ளார்.
இதில் மொத்தம் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய தைஜுல் இரண்டு இடங்கள் முன்னேறி தனது சிறந்த தரநிலையாக 34ஆவது இடத்தை பிடித்ததோடு முஸ்தபிசுர் 10 இடங்கள் பாய்ந்து 49ஆவது இடத்திற்கு வந்தார். அவர் மிர்புர் டெஸ்டில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியமை நினைவுகூறத்தக்கது.
டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான வரிசையில் அவுஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்தில் இருப்பதோடு இந்தியாவின் விராட் கோஹ்லி இரண்டாவது இடத்திலும் இங்கிலாந்தின் ஜோ ரூட் மூன்றாவது இடத்திலும் காணப்படுகின்றனர். அதேபோன்று பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஜேம்ஸ் அண்டர்ஸன் முதலிடத்தில் இருப்பதோடு தென்னாபிரிக்காவின் ககிசோ ரபாடா இரண்டாவது இடத்திலும் இந்தியாவின் ரவின்திர ஜடேஜா மூன்றாவது இடத்திலும் காணப்படுகின்றனர்.
டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசை (முதல் 10)
நிலை | (+/-) | வீரர் | அணி | புள்ளிகள் | சராசரி |
1 | ( – ) | ஸ்டீவ் ஸ்மித் | அவுஸ் | 947! | 63.75 |
2 | ( – ) | விராத் கோலி | இந் | 912! | 53.40 |
3 | ( – ) | ஜோ ரூட் | இங்கி | 881 | 53.28 |
4 | ( – ) | கேன் வில்லியம்சன் | நியு | 855 | 50.62 |
5 | ( – ) | டேவிட் வார்னர் | அவுஸ் | 827 | 48.77 |
6 | ( – ) | சி. புஜாரா | இந் | 810 | 50.51 |
7 | ( – ) | ஹாஷிம் அம்லா | தென். ஆ | 771 | 49.08 |
8 | ( – ) | அஸ்ஹர் அலி | பாகி | 755 | 46.62 |
9 | (+1) | அலஸ்டெயர் குக் | இங்கி | 742 | 46.35 |
10 | (+1) | ரொஸ் டெய்லர் | நியு | 739 | 48.04 |
டெஸ்ட் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை (முதல் 10)
நிலை | (+/-) | வீரர் | அணி | புள்ளிகள் | சராசரி |
1 | ( – ) | ஜேம்ஸ் அண்டர்சன் | இங் | 887 | 27.40 |
2 | ( – ) | கஜிஸோ ரபாடா | தென் | 875 | 22.04 |
3 | ( – ) | ரவீந்திர ஜடேஜா | இந் | 844 | 23.73 |
4 | ( – ) | ஜோஷ் ஹஸ்ல்வுட் | அவு | 814 | 25.77 |
5 | ( – ) | ரவிச்சந்திரன் அஷ்வின் | இந் | 803 | 25.56 |
6 | ( – ) | வெர்னான் பிலண்டர் | தென் | 791 | 21.85 |
7 | ( – ) | நீல் வாக்னர் | நியு | 784 | 27.87 |
8 | (-1) | ரங்கன ஹேரத் | இல | 777 | 28.18 |
9 | ( – ) | மோர்னி மோகல் | தென் | 773 | 28.08 |
10= | ( – ) | நாதன் லியோன் | அவு | 769 |
31.64 |