நூலிழையில் தங்கப் பதக்கத்தை தவறவிட்ட இலங்கை வீரர் ரொஷான்

184

தாய்லாந்தில் பெங்கொக் நகரில் நடைபெற்ற தாய்லாந்து பகிரங்க மெய்வல்லுனர் போட்டித் தொடரின் கடைசி நாளான நேற்றைய தினம் (21) இலங்கைக்கு மேலும் ஒரு பதக்கத்தை ரொஷான் தம்மிக்க பெற்றுக் கொடுத்தார்.

இதன்படி, கடந்த நான்கு நாட்களாக நடைபெற்ற இம்முறை தாய்லாந்து பகிரங்க மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பங்குபற்றியிருந்த இலங்கை அணி, ஒரு தங்கம். ஒரு வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்றது.

இந்த நிலையில் போட்டிகளின் கடைசி நாளான நேற்று (21) நடைபெற்ற ஆண்களுக்கான 110 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய இலங்கையின் ரொஷான் தம்மிக்க ரணதுங்க தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை மயிரிழையில் தவறவிட்டார்.

தாய்லாந்து பகிரங்க மெய்வல்லுனர் தொடரில் ஷ்யாமா துலானிக்கு தங்கம்

தாய்லாந்தின் பெங்கொக் நகரில் நடைபெற்றுவருகின்ற …………

இந்தப் போட்டியில் லாஓஸ் வீரர் அனுசோன் ஸாய்சாவும், ரொஷான் தம்மிக்கவும் ஒரே நேரத்தில் (14.22 செக்.) போட்டியை நிறைவு செய்திருந்தனர். எனினும், நிழற்பட முடிவின் அடிப்படையில் ஸாய்சா முதலாம் இடத்தைப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

21 வயதான ரொஷான், ஆரம்ப காலத்தில் உயரம் பாய்தல் போட்டியில் பங்குபற்றி வந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெற்ற கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரிலும், அதே ஆண்டு சமோவா தீவுகளில் நடைபெற்ற பொதுநலவாய இளையோர் விளையாட்டு விழாவிலும் வெள்ளிப் பதக்கங்களை வென்றிருந்தார்.

இந்த நிலையில், அண்மைக்காலமாக தேசிய மட்டப் போட்டிகளில் சட்டவேலி ஓட்டத்தில் பங்குபற்றி வருகின்ற அவர், சட்டவேலி ஓட்டத்தில் தேசிய விளையாட்டு விழா சாதனையும் படைத்தார். இது இவ்வாறிருக்க. தான் பங்குபற்றிய முதலாவது சர்வதேச மெய்வல்லுனர் போட்டித் தொடரில் சிறந்த நேரப் பெறுமதியுடன் பதக்கமொன்றை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், குறித்த போட்டியில் மலேஷியாவின் ரிஸுவா முஹம்மத் (14.42 செக்.) வெண்கலப் பதக்கத்தை வெற்றி கொண்டார்.

இதேவேளை, இப்போட்டிக்குப் பிறகு நடைபெற்ற பெண்களுக்கான 100 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் பங்குகொண்ட லக்ஷிகா சுகன்தி ஐந்தாவது இடத்தைப் பெற்று ஏமாற்றம் அடைந்தார்.

இதன்படி, இம்முறை தாய்லாந்து பகிரங்க மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பங்குபற்றியிருந்த 7 இலங்கை வீரர்களில் நான்கு பேர் பதக்கங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<