தேசிய அணியுடன் இணைந்த ரூமி, தேவசகாயம்

880

ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகவுள்ள SAFF சம்பியன்ஷிப் தொடருக்காக இலங்கை தேசிய அணியின் பயிற்றுவிப்பாளர் குழாத்தில் இலங்கையின் முன்னணி பயிற்றுவிப்பாளர்களான மொஹமட் ரூமி மற்றும் தேவசகாயம் ராஜமனி ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.

SAFF சம்பியன்ஷிப் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் 16ஆம் திகதி வரை மாலைத்தீவுகளில் இடம்பெறவுள்ளன. இம்முறை தொடரில் இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், நேபாளம் மற்றும் மாலைத்தீவுகள் என 5 அணிகள் மட்டுமே பங்கேற்கவுள்ளன. 

இலங்கை தேசிய கால்பந்து குழாத்திற்கு புதிய வீரர்கள் இணைப்பு

இந்நிலையில், SAFF சம்பியன்ஷிப் தொடருக்காக இலங்கை ஆரம்பகட்ட குழாத்திற்கான வீரர்கள் அண்மையில் தெரிவு செய்யப்பட்டு, தற்போது அவர்கள் களனியவில் வதிவிடப் பயிற்சி முகாமிட்டு தயார்படுத்தல்களை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், குறித்த தொடருக்கான இலங்கை பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் உதவியாளர்கள் குழாத்தினை இலங்கை கால்பந்து சம்மேளனம் இன்று வெளியிட்டிருந்தது. இதில், மொஹமட் ரூமி தொழில்நுட்ப பயிற்றுவிப்பாளராகவும் (Technical Coach), தேவசகாயம் ராஜமனி அணியின் உதவிப் பயிற்றுவிப்பாளராகவும் இணைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஏற்கனவே இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக உள்ள அமிர் அலர்ஜிக், கோல் காப்பு பயிற்றுவிப்பாளராக உள்ள அமிர் டக்சொனல்டிக் மற்றும் அணியின் முகாமையாளராக உள்ள ஆசிப் அன்சார் ஆகியோர் தொடர்ந்தும் குறித்த பதவிகளில் உள்ளனர். 

மிக நீண்ட காலமாக இலங்கையின் முன்னணி கழகமான கொழும்பு கால்பந்து கழகத்தின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக ரூமி உள்ளார். அவர் அவ்வணிக்கு டயலொக் சம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை மூன்று முறையும், FA கிண்ணம் மற்றும் FFSL தலைவர் கிண்ணம் என்பவற்றை தலா ஒரு முறையும் வென்று கொடுக்க முக்கிய காரணமாக இருந்துள்ளார். 

இலங்கை தேசிய அணியின் முன்னாள் வீரராகவும் தற்போது நாட்டின் முன்னணி பயிற்றுவிப்பாளர்களில் ஒருவராகவும் உள்ள ரூமி பயிற்றுவிப்பு நுட்பத்தில் இலங்கையில் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

அதேபோன்று தேவசகாயம், சுபர் லீக்கில் ஆடும் மற்றொரு முன்னணி கழகமான களுத்தறை புளூ ஸ்டார் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக இருந்து வருகின்றார். பல முன்னணி கழகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், இதற்கு முன்னரும் இலங்கை தேசிய அணியுடன் இணைந்து பணியாற்றிய அனுபவத்தையும் கொண்டவர். 

நாவலபிடிய அப் கண்ட்ரி லயன்ஸ் அணியினை சிறந்த முறையில் வழிநடாத்தியமை மற்றும் கம்பளை கிறிஸ்டல் பெலஸ் அணியை பிரிவு ஒன்றில் இருந்து டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடருக்கு தரமுயர்த்தியமை போன்ற தொடர்ச்சியான பயிற்றுவிப்பு திறமை வெளிப்படுத்தலின் பலனாக அவர் கடந்த 2016 மற்றும் 2017ஆம் அண்டுகளில் இலங்கை தேசிய அணியின் உதவிப் பயிற்றுவிப்பாளராகவும் செயற்பட்டுள்ளார். 

வெளிநாட்டு பயிற்றுவிப்பாளர்களைக் கொண்ட இலங்கை தேசிய குழாத்திற்கு இவ்விருவரினதும் ஒத்துழைப்பு மிக சிறந்த பலனான அமையும் என்று நாமும் எதிர்பார்க்கின்றோம். 

இலங்கை பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் உதவியாளர்கள் குழாம்

அமிர் அலர்ஜிக் – தலைமைப் பயிற்றுவிப்பாளர் 

ஆசிப் அன்சார் – முகாமையாளர்

அமிர் டக்சொனல்டிக் – கோல் காப்பு பயிற்றுவிப்பாளர்

தேவசகாயம் ராஜமனி – உதவிப் பயிற்றுவிப்பாளர் 

மொஹமட் ரூமி – தொழில்நுட்ப பயிற்றுவிப்பாளர் 

ருவன் பெர்னாண்டோ – அணியின் வைத்தியர் 

சன்க ஜயமின – Performance Analyst

ஈஸா இப்ராஹிம் – உதவி முகாமையாளர் 

கிஷான் சுரங்க – Physiotherapist 

ஜீவன கல்டெர – Masseur

மொஹமட் பாஹிம் – Kitman

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க…<<