நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரிலிருந்து விலகிய பிராவோ

223
Bravo

நியூசிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள மேற்கிந்திய தீவுகள் குழாத்தில் இணைக்கப்பட்டிருந்த டுவைன் பிராவோ அணியிலிருந்து விலகியுள்ளார்.

ஐ.பி.எல். தொடரில் விளையாடிவந்த டுவைன் பிராவோ இடுப்பு பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக, மீதமுள்ள போட்டிகளில் விளையாடமாட்டார் என சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் நேற்றைய தினம் (21) அறிவித்திருந்தது. 

>> சென்னை அணியிலிருந்து வெளியேறும் பிராவோ!

அத்துடன், இன்றைய தினம் (22) மேற்கிந்திய தீவுகளுக்கு டுவைன் பிராவோ புறப்படுவார் எனவும் நேற்றைய தினம் வெளியிடப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையில், உபாதையிலிருந்து குணமடைவதற்கு நீண்ட காலம் தேவைப்படும் என்ற காரணத்தினால் பிராவோ, நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடமாட்டார் என கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

தன்னுடைய உபாதை மற்றும் விலகல் குறித்து கருத்து வெளியிட்ட டுவைன் பிராவோ, “நான் நியூசிலாந்துக்கு எதிரான தொடரை மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தேன். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான தொடரின் போது, மேற்கிந்திய தீவுகளுக்காக விளையாடியிருந்தேன். அதேநேரம், நாம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள T20I  உலகக் கிண்ணத் தொடரில் மீண்டும் கிண்ணத்தை வெல்வதற்கான அணியை உருவாக்கி வருகின்றோம்.

ஆனால், துரதிஷ்டவசமாக ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக ஐ.பி.எல். தொடரிலிருந்து மாத்திரம் இல்லாமல், நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலிருந்தும் விலகும் நிலை ஏற்பட்டுள்ளது. நான் தற்போது ட்ரினிடட்டுக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றேன். அங்கு சென்று உபாதையிலிருந்து குணமடைவதற்கான சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள உள்ளேன். நான் மேற்கிந்திய தீவுகளுக்காக விளையாட எதிர்பார்ப்புடன் உள்ளேன். ஆனால், தற்போது என்னை பலமானவனாக மாற்றிக்கொள்ள வேண்டும்” என்றார்.

>> Video – டோனி ஏன் நடராஜனிடம் விக்கெட்டினை கொடுத்தார்? | Cricket Galatta Epi 41

டுவைன் பிராவோ, நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலிருந்து விலகியுள்ள நிலையில், அவரின் இடத்துக்கான மாற்று வீரராக ரொமாரியோ ஷெப்பர்ட் இணைக்கப்பட்டுள்ளார் என்பதை மேற்கிந்திய தீவுகள் உறுதிசெய்துள்ளது.

ரொமாரியோ ஷெப்பர்ட் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக இரண்டு T20I போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், இந்த வருடத்தின் ஆரம்பத்தில் அறிமுகமாகியிருந்தார். அதேநேரம், நடைபெற்றுமுடிந்த கரீபியன் ப்ரீமியர் லீக்கில் அமெஷன் வொரியர்ஸ் அணிக்காக விளையாடிய இவர், 7.31 என்ற ஓட்ட விகிதத்தில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<