குல்தீப் சுழல், ரோஹித்தின் அதிரடி சதத்தால் இந்தியாவுக்கு முதல் வெற்றி

396

இந்திய சுழல்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்வின் அபார பந்துவீச்சு, ரோஹித் சர்மாவின் அதிரடி சதம் மற்றும் விராட் கோஹ்லியின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியுடனான முதலாவது ஒரு நாள் போட்டியை வென்றது.

இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரை இந்திய அணி வென்ற நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நேற்று (12) ஆரம்பமாகியது.  

ரோஹித் சர்மாவின் அதிரடி சதத்தால் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா

நொட்டிங்ஹமில் நடைபெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி பந்துவீச்சை தேர்வு செய்தார்.இந்திய அணியில் 32 மாதங்களுக்குப் பிறகு சுரேஷ் ரெய்னாவும், 10 மாதங்களுக்குப் பிறகு கே.எல் ராஹுலும் இடம்பிடித்தனர். வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் கவுல் ஒரு நாள் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்டார்.

இதேநேரம், வலைப் பயிற்சியின்போது இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் உபாதைக்குள்ளாகிய காரணத்தால் இப்போட்டியில் விளையாடவில்லை.

ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இங்கிலாந்து பவர் பிளேயான முதல் 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 71 ஓட்டங்களைக் குவித்தது.

குல்தீப் வீசிய 11ஆவது ஓவரின் இரண்டாவது பந்தில் ஜேசன் ரோய் ஆட்டமிழந்தார். அவர் 35 பந்துகளில் 38 ஓட்டங்களை எடுத்திருந்தார். குல்தீப்பின் இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் ஜோ ரூட் LBW முறையில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் ஐந்தாவது பந்தில் பேர்ஸ்டோவும் LBW முறையில் விக்கெட்டை இழந்தார்.  

பாகிஸ்தான் வீரர் அஹமட் ஷேசாத் ஊக்கமருந்து பயன்படுத்தியது நிரூபணம்

அதன் பின்னர் 5ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் மிகவும் நிதானமாக ஆடினர். ஒரு பக்கம் ஸ்டோக்ஸ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த மற்றொரு பக்கம் பட்லர் 45 பந்தில் அரைச்சதத்தைப் பூர்த்தி செய்தார். ஒரு நாள் போட்டிகளில் பட்லர் தொடர்ச்சியாக அடிக்கும் மூன்றாவது அரைச் சதம் இதுவாகும். ஆட்டத்தின் 39ஆவது ஓவரில் குல்தீப் யாதவ் பந்தில் டோனியிடம் பிடியெடுப்பை கொடுத்து பட்லர் ஆட்டமிழந்தார்.

மிகப் பொறுமையாக விளையாடிய ஸ்டோக்ஸ் 102 பந்துகளில் அரைச்சதத்தை பூர்த்திசெய்தார். 17 ஆண்டுகளுக்கு முன்னர் கொலிங்வுட் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக 108 பந்துகளில் அரைச்சதம் அடித்திருந்தார். அதன்பின்னர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியொன்றில் இங்கிலாந்து வீரர் ஒருவர் பெற்றுக்கொண்ட மந்தமான அரைச்சதம் இதுவாகும். எனினும், அரைச்சதம் அடித்த கையோடு குல்தீப் யாதவ்வின் பந்தில் ஸ்டோக்ஸ் ஆட்டமிழந்தார். தனது கடைசி ஓவரின் கடைசி பந்தில் டேவிட் வில்லியின் விக்கெட்டையும் வீழ்த்திய குல்தீப், 10 ஓவர்கள் பந்துவீசி 25 ஓட்டங்களை மட்டும் விட்டுக்கொடுத்து ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒரு நாள் போட்டியில் இந்திய வீரர் ஒருவர் பெற்றுக்கொண்ட நான்காவது சிறந்த பந்துவீச்சுப் பெறுதியாகவும் இது இடம்பெற்றது.

அத்துடன், இடது கை மணிக்கட்டு சுழற் பந்துவீச்சாளர் ஒருவர் ஒரு நாள் போட்டியில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்துவது வரலாற்றில் இதுவே முதல்முறையாகும். இதற்கு முன் பிராட் ஹோக், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக, 2005ஆம் ஆண்டு 32 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார்.

மேலும், இங்கிலாந்து மண்ணில் ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்துவீச்சாளர் எனும் பெருமையையும் குல்தீப் பெற்றார். முன்னதாக 2004இல் அப்ரிடி 11 ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை எடுத்த சுழற்பந்துவீச்சாளர் எனும் பெருமையையும் குல்தீப் நேற்றைய போட்டியில் பெற்றார்.

ஒரு நாள் போட்டியில் குல்தீப் யாதவ்வின் அதி சிறந்த பந்துவீச்சு (25/6)

அதன்பின் வந்த மொயின் அலி 23 பந்துகளில் 24 ஓட்டங்களையும், ஆடில் ரஷித் 16 பந்துகளில் 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ள இங்கிலாந்து அணி 49.5 ஓவரில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 268 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 10 ஓவரில் 25 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் சாய்த்தார். உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுக்களையும், யுஸ்வேந்திர சாஹல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

வெற்றியை நோக்கி முன்னேறுகின்றது இலங்கை அணி

சுழல் வீரர்களின் சாகசம் மற்றும்…

இதையடுத்து, 269 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக் காரர்களாக ரோஹித் சர்மாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர். இருவரும் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கை 59 ஆக இருந்தபோது ஷிகர் தவான் 40 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய விராட் கோஹ்லி, ரோஹித்துடன் இணைந்து பொறுப்பாகவும், அதிரடியாகவும் விளையாடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.

ஒருபுறம் ரோஹித் சர்மா சதமடிக்க, மறுபுறம் அணித் தலைவர் விராட் கோஹ்லி அரைச் சதமடித்து அசத்தினார். 82 பந்துகளில் ரோஹித் சர்மா சதம் விளாசினார். இது அவரது 18ஆவது ஒரு நாள் சதமாகும்.

  • 82 பந்துகளில் சதமடித்த ரோஹித் சர்மா

இருவரும் இணைந்து 167 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றுக் கொண்டனர். கோஹ்லி 75 ஓட்டங்களை எடுத்து ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து கே.எல்.ராகுல் களமிறங்கினர். இருவரும் சேர்ந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

சந்திமால், ஹதுருசிங்க, குருசிங்கவுக்கு ஐ.சி.சியினால் போட்டித் தடை

இறுதியில், இந்தியா 40.1 ஓவரில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 269 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா 137 ஓட்டங்களுடனும், ராகுல் 9 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதனால், 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது.  

இந்திய அணியின் தலைவராக கோஹ்லி பொறுப்பேற்று விளையாடிய 50 போட்டிகளில் நேற்றைய வெற்றியுடன் 39ஆவது வெற்றியைப் பதிவுசெய்தார்.

அத்துடன், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் அவர்களின் சொந்த மண்ணில் ஒரு நாள் போட்டியில் விக்கெட் எடுக்காமல் திரும்பிய நிகழ்வு வரலாற்றில் நேற்றைய போட்டியோடு சேர்த்து மூன்றாவது முறையாகப் பதிவாகியது.

குல்தீப் யாதவ் நேற்றைய போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருதை வென்றார்.

இந்தியாஇங்கிலாந்து இடையேயான இரண்டாவது போட்டி நாளை (14) லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க