பங்களாதேஷ் அணியுடனான போட்டியை வெற்றி பெறுவதற்கு கடுமையாகப் போராட வேண்டி ஏற்பட்டதாகத் தெரிவித்த இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி, ரோஹித் சர்மாவின் சதத்தின் உதவியுடன் அரையிறுதியில் விளையாடுவதற்கு தகுதிபெற்றமை மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார்.
கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் நேற்று (02) நடைபெற்ற 40ஆவது லீக் போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின.
உலகக்கிண்ண அரையிறுதிக்கு இரண்டாவது அணியாக தெரிவான இந்தியா
கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 40ஆவது………
இதில் பங்களாதேஷ் அணி சவாலான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த போதிலும் இறுதியில் இந்திய அணி 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கிக் கொண்டது.
இதன்மூலம் 8 போட்டிகளில் 6 போட்டிகளில் வென்று, ஒரு போட்டி மழையால் தடைப்பட்டு, ஒரு போட்டி தோல்வி என்று இந்தியா 13 புள்ளிகளை பெற்று இரண்டாவது அணியாக அரையிறுதிக்கு நுழைந்துள்ளது.
இந்த நிலையில், பங்களாதேஷ் அணியை வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதிபெற கிடைத்தமை தொடர்பில் மகிழ்ச்சியடையவதாக போட்டியின் பிறகு அளித்த பேட்டியில் கோஹ்லி தெரிவித்தார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
”இதில் வெற்றிபெற பலத்த போட்டியைக் கொடுத்த பங்களாதேஷ் அணிக்கு முதலில் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இம்முறை உலகக் கிண்ணத்தில் பங்களாதேஷ் அணி சிறந்த முறையில் விளையாடியிருந்தது. உண்மையில் இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதற்கு கடைசி வரை அவர்கள் பலத்த போட்டியைக் கொடுத்திருந்தனர்.
எனவே, வெற்றிக்காக எமக்கு கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது, ஆனால், இப்போது புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்ற அணிகளில் ஒன்றாக இருப்பதைப் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது” எனத் தெரிவித்தார்.
அதேபோல, இந்தப் போட்டியில் சதமடித்து 300 என்ற ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றுக் கொடுப்பதற்கு காரணமாக இருந்த ரோஹித் சர்மாவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த கோஹ்லி, ரோஹித்தை சிறந்த ஒருநாள் வீரர் என பாராட்டியிருந்தார்.
”ரோஹித் விளையாடுவதை நான் பல வருடங்களாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவருடைய ஆட்டத்தைப் பற்றி நான் பகிரங்கமாகக் கூறி வருகிறேன். எனது கருத்துப்படி ரோஹித் சர்மா சிறந்த ஒருநாள் வீரர். அவர் விளையாடும்போது நாங்கள் மிகப் பெரிய ஓட்டங்களை நோக்கி செல்கிறோம், அவர் விளையாடும் விதத்தில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், அவர் தனது வாழ்க்கையின் ஒரு முக்கிய போட்டித் தொடராக இதில் விளையாடி வருகிறார். அதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
இதுபோன்ற இன்னிங்ஸ் தான் உடைமாற்றும் அறையில் ஏனைய வீரர்களுக்கு ஊக்கத்தைக் கொடுக்கும். அவர் விளையாடுவதைப் போலவே ஏனைய வீரர்களும் முதல் பந்திலிருந்து அடித்தாடுவதற்கு தயாராகுவார்கள். எனவே, உண்மையில் அவருடைய இன்னிங்ஸ் குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
அதேபோல, இன்னும் மூன்று போட்டிகளில் விளையாடும் போது அவர் இன்னும் அதிக ஓட்டங்களைக் குவிப்பார் என்று நம்புகிறோம்” என குறிப்பிட்டார்.
இதேநேரம், இம்முறை உலகக் கிண்ணத்தில் இந்தியா முதல்தடவையாக ஐந்து பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது. ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், மொஹமட் ஷமி, பும்ரா மற்றும் சாஹல் ஆகியோர் அணியில் இடம் பெற்றனர்.
எட்ஜ்பெஸ்டன் மைதானத்தின் குறுகிய பௌண்டரி எல்லைகள் மற்றும் ஆடுகளத்தின் தன்மை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, ஐந்து பந்து வீச்சாளர்களுடன் விளையாடியதாக கோஹ்லி கூறினார்.
”ஐந்து பந்து வீச்சாளர்களுடன் விளையாடுவது ஒரு சூதாட்டம். ஆனால் ஆடுகளத்தின் தன்மை காரணமாக எங்களுக்கு இறுதி பதினொருவரை மாற்ற வேண்டியிருந்தது. இது இந்தப் போட்டிக்காக குறிப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அணியாக இருந்தது. மேலும் குறுகிய பௌண்டரிகளைக் கொண்ட மைதானங்களில் விளையாடும்போது ஒரு சரியான அணியுடன் விளையாட முயற்சிக்க விரும்பினோம். ஏனெனில் ஒவ்வொரு ஆடுகளத்திற்கும் நாம் விளையாடும் ஒவ்வொரு போட்டிக்கும் ஒரே அணியுடன் விளையாடுவதில் பிடிவாதமாக இருக்க முடியாது”.
இந்த உலகக் கிண்ணத் தொடரில் இந்திய அணிக்கு மற்றுமொரு முக்கிய கதாபாத்திரமாக இருக்கும் ஹர்திக் பாண்டியா குறித்து குறிப்பிட்ட கோஹ்லி, ”இந்தத் தொடர் முழுவதும் ஹர்திக் பாண்டியா நெருக்கடியான போட்டிகளில் நிறைய அழுத்தங்களைக் கொடுத்திருந்ததை காணமுடிந்தது. அவர் ஓட்டங்களைக் கட்டுப்படுத்தவும், விக்கெட்டுகளைப் பெறவும் ஒரு வழியைக் கண்டுபிடிப்பார். அவர் அணிக்காக விடயங்களைச் செய்ய எதிர்பார்த்திருக்கிறார். அது உண்மையில் அவரது கிரிக்கெட்டுக்கு உதவுகிறது. அவர் பந்துவீச வரும்போது அவர் ஒரு துடுப்பாட்ட வீரராக நினைக்கிறார். அது அவருக்கு சிந்திக்க உதவுகிறது. துடுப்பாட்ட வீரர்களால் என்ன செய்ய முடியும் என்று சிந்திக்க வைக்கிறார்.
குலசேகரவுடன் இணைந்து ஓய்வுபெற விரும்பும் மாலிங்க
இணைப்பு என்பது கிரிக்கெட்டில் எப்போதும் ……….
உங்கள் அணியில் இதுபோன்ற ஒருவர் இருக்கும்போது நீங்கள் எப்போதுமே அந்த கூடுதல் நம்பிக்கை வைத்திருப்பீர்கள், அவர் உண்மையில் பந்து வீச விரும்புகிறார், இதனால் அவருக்கு துடுப்பாட்ட வீரர்களின் உடல் மொழியை பரிசீலனை செய்து பார்க்க முடியும்” என தெரிவித்தார்.
இறுதியாக, ஜஸ்பிரித் பும்ராவின் இறுதி ஓவர்கள் போட்டியின் முடிவில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக கோஹ்லி ஒப்புக் கொண்டார். அதனால்தான் அவரை ஆரம்பத்தில் பந்துவீச பயன்படுத்தவில்லை எனவும் குறிப்பிட்டார்.
”பும்ராவின் ஓவர்கள் எப்போதுமே முக்கியமானதாக இருக்கும். அவர் இப்போது உலகின் முதல்நிலை ஒருநாள் பந்து வீச்சாளர், அந்த ஒரு காரணத்திற்காக. அவருக்கு தனது திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த முடியும்.
இந்தப் போட்டித் தொடரில் இதுவரை நாங்கள் செய்த அதே விடயங்களைச் செய்வதற்கான ஒரு வாய்ப்பாக இந்தப் போட்டி அமைந்திருந்தது. அரையிறுதிக்குச் செல்லும் கட்டமைப்பில் இது நம்மை வைத்திருக்கும் என்று நான் நினைக்கிறேன். எனவே, இன்னும் ஒரு போட்டி எஞ்சியிருக்கின்ற நிலையில், அரையிறுதிக்கு தகுதிபெற கிடைத்தமை ஒரு தலைவராகவும் ஒரு அணியாகவும் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்” என தெரிவித்தார்.
இதேவேளை, இந்திய அணி, தமது கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை எதிர்வரும் சனிக்கிழமை (06) சந்திக்கவுள்ளது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<