ஐ.பி.எல். விதிமுறையை மீறிய ரோஹித் சர்மாவுக்கு மீண்டும் அபராதம்

164
iplt20.com

ஐ.பி.எல். தொடரில் நேற்று (28) ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது, ஐ.பி.எல். விதிமுறையை மீறிய குற்றச்சாட்டுக்காக மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ரோஹித் சர்மாவுக்கு போட்டி கட்டணத்தில் 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

ஈடன் கார்டன் மைதானத்தை சிக்ஸர்களால் அலங்கரித்த ரசல், பாண்டியா

ஐ.பி.எல். தொடரில் நேற்று (28) நடைபெற்ற ……….

ரோஹித் சர்மா LBW முறையில் ஆட்டமிழந்த நிலையில், எதிர் முனையில் இருக்கும் விக்கெட்டுகளை (Stumps) தனது துடுப்பாட்ட மட்டையினால் தட்டி விட்டு மைதானத்திலிருந்து வெளியேறினார். இவ்வாறு, ஐ.பி.எல். தொடரின் முதலாம் மட்ட விதிமுறையை மீறிய குற்றச்சாட்டின் காரணமாக அவருக்கு போட்டி கட்டணத்தில் 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.

கொல்கத்தா அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 233 என்ற மிகப்பெரிய வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதனை நோக்கி களமிறங்கிய மும்பை அணி குயிண்டன் டி கொக்கின் விக்கெட்டினை இழந்திருந்தது.

எனினும், ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான ரோஹித் சர்மா மூன்று பௌண்டரிகளை விளாசி சிறந்த ஆரம்பத்தினை பெற்றிருந்தார். இந்த நிலையில்,  கொல்கத்தா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹெர்ரி கெர்னியால் வீசப்பட்ட 4வது ஓவரில், சர்மா பந்தினை அடித்தாட தவற, பந்து அவரது வலது காலில் பட்டது. இதன் போது கொல்கத்தா அணி வீரர்களால் ஆட்டமிழப்பு கோரிக்கை விடுக்கப்பட LBW முறையில் ஆட்டமிழந்ததாக நடுவர் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து ஆட்டமிழப்பினை மீள் பரிசீலனை செய்யுமாறு (DRS) ரோஹித் சர்மா நடுவரிடம் கோரிக்கை விடுத்தார். பின்னர், மூன்றாவது நடுவர் குறித்த ஆட்டமிழப்பை பரிசீலனை செய்ய, பந்து இடது பக்க விக்கெட்டை தொட்டுச் சென்றது. கள நடுவரின் முடிவின் படி, மூன்றாவது நடுவர் ரோஹித் சர்மா ஆட்டமிழந்ததாக அறிவித்தார்.

சொந்த மைதானத்தில் முதல் தோல்வியை சந்தித்த சென்னை

ஐ.பி.எல். தொடரில் நேற்று (26) நடைபெற்ற ……….

பின்னர், களத்தில் இருந்து வெளியேறிய ரோஹித் சர்மா, கள நடுவரிடம் கடுமையான சொற்களை பயன்படுத்திவிட்டு, தனது துடுப்பாட்ட மட்டையால், எதிர் முனையில் இருந்த விக்கெட்டினை தட்டிவிட்டுச் சென்றார். சர்மாவின் இந்த செயலானது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தது.

போட்டி நிறைவடைந்த பின்னர் போட்டி மத்தியஸ்தர் மேற்கொண்ட விசாரணையில் ரோஹித் சர்மா தனது குற்றத்தை ஓப்புக்கொண்ட நிலையில், ஐ.பி.எல். சட்டக்கோவையின் 2.2 சரத்தின் படி, அவருக்கு போட்டி கட்டணத்தில் 15 சதவீதம் அபராத தொகையாக அறவிடப்பட்டது.

இதேவேளை, இந்த பருவகாலத்தில் ரோஹித் சர்மாவுக்கு இரண்டாவது முறையாக ஐ.பி.எல். விதிமுறையை மீறியதாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 30ம் திகதி (மார்ச்) கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், பந்து வீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொண்ட காரணத்துக்காக இந்திய ரூபாயில் 12 இலட்சம் ரூபா ரோஹித் சர்மாவுக்கு அபராதமாக விதிக்கப்பட்டிருந்ததுடன், தற்போது போட்டி கட்டணத்தில் 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<