அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத்தில் பங்கெடுக்கவிருக்கும் ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் அணியின் (UAE) 15 பேர் அடங்கிய அணிக்குழாம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
>> T20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை குழாம் அறிவிப்பு!
இதன்படி அறிவிக்கப்பட்டிருக்கும் உலகக் கிண்ண குழாத்தில் ஐக்கிய அரபு இராச்சிய அணியினை அதிக ஒருநாள் மற்றும் T20I போட்டிகளில் பிரதிநிதித்துவம் செய்த ரோஹான் முஸ்தபா நீக்கப்பட்டிருக்கின்றார்.
33 வயது நிரம்பிய முஸ்தபா ஐக்கிய அரபு இராச்சிய அணி விளையாடிய ஆசியக் கிண்ண தகுதிகாண் T20 தொடரில் மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்தியதனை அடுத்தே, T20 உலகக் கிண்ணத்தில் ஆடும் வாய்ப்பினை இழந்திருக்கின்றார்.
இதேநேரம் வெறும் 16 வயதே நிரம்பிய அறிமுக சகலதுறை வீரர் அயான் கான் ஐக்கிய அரபு இராச்சிய அணியில் ஆடும் சந்தர்ப்பத்தினை முதல் முறையாகப் பெற்றிருக்கின்றார். அயான் கான் கடைசியாக நடைபெற்றிருந்த 19 வயதின் கீழ்ப்பட்டோருக்கான உலகக் கிண்ணத்தில் அபார ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தது அவர் சிரேஷ்ட அணி மூலம் உலகக் கிண்ண வாய்ப்பினைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் அணியின் தலைவராக அஹ்மட் ரஷாவிற்குப் பதிலாக CP ரிஸ்வான் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்.
>> மஹேலவின் பதவிக்கு வரும் மார்க் பௌச்சர்!
இதேவேளை ஆசியக் கிண்ணத்தில் விளையாடியிருந்த சுல்தான் அஹமட் மற்றும் பஹாட் நவாஸ் ஆகியோருக்கும் T20 உலகக் கிண்ண அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனினும் இந்த வீரர்கள் விஷ்னு சுகுமாரன், அதித்யா செட்டி மற்றும் சன்ஜித் சர்மா ஆகியோருடன் இணைந்து மேலதிக வீரர்களாக அவுஸ்திரேலியா பயணமாகவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய அரபு இராச்சிய அணி T20 உலகக் கிண்ணத்தில் விளையாட முன்னர் பங்களாதேஷ் அணியுடன் இம்மாதம் 25ஆம் திகதி இரண்டு போட்டிகள் கொண்ட T20 தொடரில் ஆடவிருப்பதோடு, T20 உலகக் கிண்ணத்தின் முதல் சுற்றில் குழு A இல் நெதர்லாந்து, இலங்கை மற்றும் நமீபியா ஆகிய நாடுகளுடன் பங்கேற்கவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
T20 உலகக் கிண்ண அணி
CP ரிஸ்வான் (அணித்தலைவர்), விரித்யா அரவின்த் (உப தலைவர்), சீராக் சூரி, முஹம்மட் வஸீம், பசீல் ஹமீட், ஆர்யன் லக்ரா, ஸவார் பரீட், காசிப் தாவூத், கார்திக் மெய்யப்பன், அஹமட் ரஷா, ஸஹூர் கான், ஜூனைத் சித்திக், சபீர் அலி, அலிசான் சரபு, அயான் கான்
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<