இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ள பாகிஸ்தான் இளையோர் அணியின் தலைவராக 17 வயதான விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான ரொஹைல் நாசிர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணிக்கும், பாகிஸ்தான் 19 வயதுக்குட்பட்ட அணிக்கும் இடையிலான கிரிக்கெட் தொடர் எதிர்வரும் மே மாதம் இலங்கையில் ஆரம்பமாகவுள்ளது. நான்கு நாட்கள் கொண்ட 2 டெஸ்ட் தொடரிலும், 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ள பாகிஸ்தான் 19 வயதுக்குட்பட்ட அணி இன்று (17) அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் இளையோர் அணி மே மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம்
இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கும், பாகிஸ்தான் 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கும்….
இப்பருவகாலத்தில் பாகிஸ்தான் உள்ளூர் முதல்தரப் போட்டிகளில் இஸ்லாமாபாத் யுனைடட் அணிக்காக விளையாடி சதமடித்த 17 வயதுடைய வலதுகை துடுப்பாட்ட வீரரும், விக்கெட் காப்பாளருமான ரொஹைல் நாசிர் பாகிஸ்தான் 19 வயதுக்குட்பட்ட அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்ற பாகிஸ்தானின் குவைட் ஈ அசாம் முதல்தரப் போட்டித் தொடரில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்காக அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட ரொஹைல், லாகூர் அணிக்கெதிராக சதமடித்திருந்தார். அத்துடன், குறித்த தொடரில் 3 போட்டிகளில் விளையாடியிருந்த அவர், 300 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டதுடன், விக்கெட் காப்பில் 13 ஆட்டமிழப்புக்களையும் மேற்கொண்டிருந்தார்.
இதேநேரம், கடந்த வருடம் நியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணத்தில் 3ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட பாகிஸ்தான் அணியின் உப தலைவராகவும் ரொஹைல் நாசிர் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும், அதன்பிறகு பங்களாதேஷில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் 19 வயதுக்குட்பட்ட பாகிஸ்தான் அணியின் தவைராகவும் அவர் செயற்பட்டிருந்தார்.
இதனிடையே, நியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய மொஹமட் தாஹா இலங்கை அணிக்கெதிரான போட்டித் தொடரில் அந்த அணியின் உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், கடந்த முறை உலகக் கிண்ணத்தில் விளையாடிய மணிக்கட்டு சுழல் பந்துவீச்சளரான சுலேமான் சப்காத் மற்றும் பாகிஸ்தான் 16 வயதுக்குட்பட்ட அணியின் தலைவராகச் செயற்பட்ட சைம் அய்யும் ஆகிய வீரர்களும் பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
இதேவேளை, ரொஹைல் நாசிரைப் போல பாகிஸ்தான் உள்ளூர் முதல்தரப் போட்டிகளில் அறிமுகமாகிய 18 வயதுடைய வலதுகை மித வேகப் பந்துவீச்சாளரான அப்பாஸ் அப்ரிடியும் பாகிஸ்தான் குழாத்தில் இடம்பெற்றுள்ளார். இதுவரை 2 முதல்தரப் போட்டிகளில் விளையாடியுள்ள அப்பாஸ், 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2007 உலகக் கிண்ணத்தில் தென்னாபிரிக்காவை ஆட்டம் காணவைத்த மாலிங்க
ப்ரொவிடென்ஸ் கிரிக்கெட் மைதானம். இதற்கு முன்னர் கிரிக்கெட் இரசிகர்களால்….
இலங்கை மற்றும் பாகிஸ்தான் 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி எதிர்வரும் மே மாதம் 3ஆம் திகதி காலியிலும், 2ஆவது டெஸ்ட் போட்டி 9ஆம் திகதி ஹம்பாந்தோட்டையிலும் நடைபெறவுள்ளது.
பாகிஸ்தான் 19 வயதுக்குட்பட்ட அணி விபரம்
ரொஹைல் நாசிர் (அணித் தலைவர்/ விக்கெட் காப்பாளர்), மொஹமட் தாஹா (உப தலைவர்), அப்பாஸ் அப்ரிடி, அக்தர் ஷாஹ், பாசித் அலி, ஹைதர் அலி, கய்யாம் கான் (விக்கெட் காப்பாளர்), மொஹமட் ஹாரிஸ், மொஹமட் ஜுனைட், மொஹமட் வசீம், நியாஸ் கான், சைம் அய்யுப், சிராஸ் கான், சுலேமான் சப்காத், காசிம் அக்ரம்
மேலதிக வீரர்கள்
அமீர் அலி, இர்பான் நியாஸி, மொஹமட் அமீர், நதீர் ஷாஹ், சைத் நாசிர்
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<