இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டு விழாவை நோக்கிய பயணத்திற்கான பரீட்சார்த்த மெய்வல்லுனர் போட்டிகளின் 4ஆவது நாளான நேற்று(14) நடைபெற்ற 3,000 மீற்றர் தடைதாண்டல் போட்டியில் கலந்துகொண்ட இலங்கை வீரர்கள் இரு பிரிவுகளிலும் தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியிருந்தனர்.
ஜகார்த்தா மெய்வல்லுனர் தொடரில் இலங்கைக்கு 3 தங்கப் பதக்கங்கள்
இந்தோனேஷியாவில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம்..
இதன்படி, பெண்களுக்கான 3,000 மீற்றர் தடைதாண்டலில் கலந்துகொண்ட நிலானி ரத்னாயக்க, போட்டித் தூரத்தை 9 நிமிடங்களும் 55.59 செக்கன்களில் நிறைவுசெய்து தங்கப் பதக்கம் வென்றதுடன், புதிய தேசிய சாதனையும் படைத்தார். அத்துடன், குறித்த போட்டியை 10 நிமிடங்களுக்குள் நிறைவு செய்த முதலாவது இலங்கை வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றுக்கொண்டார்.
குறித்த போட்டியில் நிலானியுடன், சீன வீராங்கனையான ஸுவாங் ஸுவாங் மாத்திரம் போட்டியிட்டிருந்தமை இங்கு கவனிக்கத்தக்கது. இதன்படி, 10 நமிடங்களும் 04.22 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து அவர் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
முன்னதாக பெண்களுக்கான 1,500 மீற்றர் ஓட்டப்போட்டியில் கலந்துகொண்ட நிலானி ரத்னாயக்க வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஆண்களுக்கான 5,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் கலந்துகொண்டு வெண்கலப் பதக்கம் வென்ற ஆர்.எம்.எஸ் புஷ்பகுமார, நேற்று நடைபெற்ற 3,000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப்போட்டியில் கலந்துகொண்டு தங்கப் பதக்கம் வென்றார்.
குறித்த போட்டியை 8 நிமிடங்களும் 59.70 செக்கன்களில் நிறைவுசெய்து புஷ்பகுமார முதலிடத்தைப் பெற்றுக்கொள்ள, இந்தோனேஷிய வீரர்கள் முறையே 2ஆம் 3ஆம் இடங்களைப் பெற்றுக்கொண்டனர்.
இதேநேரம், இலங்கைக்கு மற்றுமொரு தங்கப் பதக்கத்தை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் ஆண்களுக்கான 4x100 அஞ்சலோட்டத்தில் கலந்துகொண்ட வினோஜ் சுரன்ஜய டி சில்வா தலைமையிலான இலங்கை அணி, வெள்ளிப் பதக்கத்தை வென்றது.
இதன்படி குறித்த போட்டியில் 39.07 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்த இந்தோனேஷியா தங்கப் பதக்கத்தையும், 39.71 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்த இலங்கை அணி வெள்ளிப்பதக்கத்தையும், மலேஷியா 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டது.
சுரன்ஜய டி சில்வா, ஹிமாஷ ஏஷான், மொஹமட் அஷ்ரப் மற்றும் ஷெஹான் அம்பேப்பிட்டிய ஆகியோர் இடம்பெற்றிருந்த இதே அணிதான், கடந்த 2016ஆம் ஆண்டு இந்தியாவின் குவஹாட்டியில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் 4x100 அஞ்சலோட்டப் போட்டியில் இலங்கைக்கு தங்கப் பதக்கம் வென்று கொடுத்திருந்தமை நினைவுகூறத்தக்கது.
அத்துடன், ஆண்களுக்கான 4x400 மீற்றர் அஞ்சலோட்டத்தில் கலந்துகொண்ட இலங்கை அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது. தரூஷ லக்ஷான், காலிங்க குமாரகே, திலிப் ருவன் மற்றும் என்.ராஜகருணா ஆகியோர் பங்குபற்றியிருந்த இப்போட்டியை 3 நிமிடங்களும் 08.26 செக்கன்களில் இலங்கை அணி நிறைவுசெய்ய, இந்தியா மற்றும் சீன தாய்ப்பே ஆகிய நாடுகள் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றன.
எனினும், முன்னதாக நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீற்றர் இறுதிப் போட்டியில் கலந்துகொண்ட தரூஷ தனஞ்சய, தங்கப் பதக்கத்தையும், திலிப் ருவன், வெண்கலப் பதக்கதையும் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தென்கொரியாவில் இன்று கேலாகலமாக ஆரம்பம்
இந்தோனேஷிய தலைநகரம் ஜகார்த்தாவில் எதிர்வரும்….
அதேபோல 2017 தேசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் 16.39 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து புதிய தேசிய சாதனை படைத்த சன்ஞய சந்தருவன், இப்போட்டியில் 15.49 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து 4ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
இதன்படி, 10 நாடுகளின் பங்குபற்றலுடன் கடந்த 11ஆம் திகதி ஆரம்பமாகிய ஆசிய விளையாட்டு விழாவை நோக்கிய பயணத்திற்கான பரீட்சார்த்த மெய்வல்லுனர் போட்டிகளில் 24 வீரர்கள் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்டிருந்தனர். இதில் இலங்கை அணி, 5 தங்கம், 5 வெள்ளி மற்றும் 06 வெண்கலப் பதக்கங்களை வென்று மெய்வல்லுனர் போட்டிகளுக்கான பதக்கப்பட்டியலில் 2ஆவது இடத்தையும், ஒட்டுமொத்த பதக்கங்களின் அடிப்படையில் 5ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டது.
பதக்கப் பட்டியலில் முதல் மூன்று இடங்களையும் இந்தோனேஷியா(20 தங்கம்), இந்தியா(13 தங்கம்) மற்றும் சீனா(06 தங்கம்) ஆகிய நாடுகள் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்காக பதக்கம் வென்றவர்கள் விபரம்
தங்கம்
போட்டி | வீரர் / வீராங்கனை | அடைவு மட்டம் |
100 மீற்றர் | சுரன்ஜய டி சில்வா | 10.30 செக்கன்கள் |
400 மீற்றர் | தரூஷ லக்ஷான் | 46.83 செக்கன்கள் |
3000 மீற்றர் தடைதாண்டல் | ஆர்.எம்.எஸ் புஷ்பகுமார | 8.59.70 செக்கன்கள் |
3000 மீற்றர் தடைதாண்டல் | நிலானி ரத்னாயக்க | 9.55.59 செக்கன்கள் |
ஈட்டி எறிதல் | தில்ஹானி லேகம்கே | 55.13 மீற்றர் |
வெள்ளி
ஈட்டி எறிதல் | சம்பத் ரணசிங்க | 75.39 மீற்றர் |
10 அம்ச போட்டிகள் | அஜித் குமார | |
4x100 அஞ்சலோட்டம் | சுரன்ஜய டி சில்வா, ஹிமாஷ ஏஷான், மொஹமட் அஷ்ரப், ஷெஹான் அம்பேபிட்டிய | 39.71 செக்கன்கள் |
800 மீற்றர் | நிமாலி லியனாரச்சி | 2.07.95 செக்கன்கள் |
1500 மீற்றர் | நிலானி ரத்னாயக்க | 4.19.25 செக்கன்கள் |
முப்பாய்ச்சல் | விதூஷா லக்ஷானி | 13.28 மீற்றர் |
வெண்கலம்
400 மீற்றர் | திலிப் ருவன் | 46.97 செக்கன்கள் |
5000 மீற்றர் | ஆர்.எம்.எஸ் புஷ்பகுமார | 14.34.86 செக்கன்கள் |
நீளம் பாய்தல் | பிரதீப் விமலசிறி | 7.82 மீற்றர் |
400 மீற்றர் | உபமாலி ரத்னகுமாரி | 54.89 செக்கன்கள் |
800 மீற்றர் | கயன்திகா அபேரத்ன | 2.08.27 செக்கன்கள் |
முப்பாய்ச்சல் | ஹிசின் பிரபோதா | 12.98 செக்கன்கள் |
4x400 அஞ்சலோட்டம் | தரூஷ தனஞ்சய, திலிப் ருவன், நளின் ராஜகருணா, காலிங்க குமாரகே | 3.08.26 கெசக்கன்கள் |