வீதி பாதுகாப்பு தொடர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்று வரும், வீதி பாதுகாப்பு உலக T20 கிரிக்கெட் தொடருக்கான இன்றைய போட்டியில் இலங்கை லெஜன்ட்ஸ் அணியானது, மேற்கிந்திய தீவுகள் லெஜன்ட்ஸ் அணியை எதிர்கொண்டிருந்தது.
இந்தப் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் லெஜன்ட்ஸ் அணி நிர்ணயித்த 158 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை லெஜன்ட்ஸ் அணி உபுல் தரங்க மற்றும் திலகரட்ன டில்ஷானின் அதிரடி துடுப்பாட்டங்களின் உதவியுடன், 19 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
2019ம் ஆண்டுக்கு பின்னர் முதல் T20I வெற்றியை ருசித்த இலங்கை
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை லெஜன்ட்ஸ் அணியின் தலைவர் திலகரட்ன டில்ஷான் முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தார். அதன்படி, களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் லெஜன்ட்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 157 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
மேற்கிந்திய தீவுகள் லெஜன்ட்ஸ் அணியின் தலைவர் ப்ரைன் லாரா தன்னுடைய தனித்துவமான துடுப்பாட்டத்திறமையை வெளிப்படுத்தி 49 பந்துகளில் 8 பௌண்டரிகள் அடங்கலாக 53 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். லாரா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த அவரைச் சுற்றி ஏனைய வீரர்கள் வேகமாக ஓட்டங்களை குவிக்க முயற்சித்தனர்.
முயற்சியினை சிறப்பாக செயற்படுத்திய டுவைன் ஸ்மித் 27 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 47 ஓட்டங்களை குவிக்க, இறுதியாக களமிறங்கிய டீனோ பெஸ் 11 பந்துகளில் 3 பௌண்டரிகள் அடங்கலாக 18 ஓட்டங்களை விளாசினார். இலங்கை அணி சார்பாக சிந்தக ஜயசிங்க மற்றும் திலகரட்ன டில்ஷான் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை லெஜன்ட்ஸ் அணி சார்பாக உபுல் தரங்க அரைச்சதம் கடந்ததுடன், திலகரட்ன டில்ஷான் அதிரடியாக ஓட்டங்களை குவித்தார். இவர்களின் பங்களிப்புடன் இலங்கை லெஜன்ட்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இலங்கை கிரிக்கெட்டின் கடந்த காலத்தை நினைவுப்படுத்தும் வகையில் சனத் ஜயசூரிய மற்றும் திலகரட்ன டில்ஷான் ஆகியோர் ஆரம்ப ஜோடியாக களமிறங்கி வேகமாக ஓட்டங்களை குவித்தனர். முதல் விக்கெட்டுக்காக இவர்கள், 45 ஓட்டங்களை பகிர, சனத் ஜயசூரிய 12 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
பின்னர் உபுல் தரங்கவுடன் இணைந்த டில்ஷான், தனக்கே உரித்தான டில்ஸ்கூப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் போன்ற துடுப்பாட்ட முறைகளால் வேகமாக ஓட்டங்களை குவித்தார். இவர், 37 பந்துகளில் 8 பௌண்டரிகள் அடங்கலாக 47 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார். எனினும், அடுத்தடுத்த துடுப்பாட்ட வீரர்களுடன் இணைந்து, உபுல் தரங்க ஆட்டத்தை நகர்த்தினார்.
இதற்கிடையில் சாமர சில்வா 15 பந்துகளில் 22 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்ததுடன், சிந்தக ஜயசிங்க மற்றும் அஜந்த மெண்டிஸ் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். எனினும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் போட்டியை நிறைவுசெய்த உபுல் தரங்க 35 பந்துகளில் 8 பௌண்டரிகள் அடங்கலாக 53 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் டீனோ பெஸ் மற்றும் சுலைமான் பென் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இலங்கை லெஜன்ட்ஸ் அணி இன்றைய தினம் பெற்ற வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளதுடன், இந்திய அணி 12 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது. இலங்கை அணி தங்களுடைய அடுத்தப்போட்டியில், தென்னாபிரிக்க லெஜன்ட்ஸ் அணியை எதிர்வரும் 8ம் திகதி எதிர்கொள்ளவுள்ளது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<