இந்திய கிரிக்கெட் ரசிகர்கள், தன்மீது வைத்துள்ள ஆதரவு இன்றளவிலும் குறையவில்லை என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தெரிவுக்குழு தலைவருமான சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடைபெற்ற வீதி பாதுகாப்பு T20 தொடரில் கலந்துக்கொண்ட இலங்கை அணி, இறுதிப்போட்டியில் தோல்வியடைந்து, இரண்டாவது இடத்தை பிடித்துக்கொண்டது. எனினும், இலங்கை அணி விளையாடிய விதம் அனைவரையும் ஈர்த்திருந்தது.
BRC அணிக்காக 5 விக்கெட்டுக்களைச் சாய்த்த மொஹமட் சிராஸ்
அந்தவகையில், தொடரை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ள இலங்கை லெஜண்ட்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சனத் ஜயசூரிய, எமது இணையத்தளத்துக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில், இந்திய ரசிகர்கள் இலங்கை அணி மீதும், சனத் ஜயசூரிய மீதும் வைத்துள்ள ஆதரவு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.
“இந்திய ரசிரகள் கொண்டுள்ள ஆதரவு இன்றளவும் குறையவில்லை. கிரிக்கெட் தொடருக்காக சென்றாலும், தனிப்பட்ட ரீதியில் இந்தியாவுக்கு சென்றாலும், அவர்களது ஆதரவு உயர்மட்டத்தில் உள்ளது.
போட்டியின் போதும், என்னை ஜயசூரியா என கோஷமிடுவர். மிகப்பெரிய மைதானம் ஒன்றில் இருக்கும் 35 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் இப்படி, அழைத்து அவர்களுடைய ஆதரவை வழங்குவது மிக மகிழ்ச்சியை ஏற்படுத்தும்” என்றார்.
இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம், கிரிக்கெட் மீதான அதீத பற்றுள்ளது. அதுமாத்திரமின்றி தனக்கான ஆதரவும், அன்பும் இந்திய ரசிகர்களிடம் அதிகமாக உள்ளதுடன், தனக்கும் இந்திய ரசிகர்களின் மீது அதீத அன்பு இருப்பதாக சனத் ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.
“இந்திய ரசிகர்கள் முன்னிலையில் விளையாடும் போது, மிக அதீத ஆதரவை தருகின்றனர். அத்துடன், நாம் உயிரியல் பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் போதும், அங்குள்ள நபர்கள் மற்றும் ஹோட்டல் ஊழியர்கள் தனக்கு அதிகமாக உதவியதுடன், லெஜண்ட்ஸ் அணி வீரர்களுக்கும் அளப்பரிய உதவிகளை வழங்கினர்” என சுட்டிக்காட்டினார்.
அதேநேரம், முதல் போட்டிகளில் ஓட்டங்களை குவிக்க தவறிய போதும், அதன் பின்னர் மேற்கொண்ட பயிற்சிகளின் அடிப்படையில், கடைசி இரண்டு போட்டிகளிலும் ஓட்டங்களை பெறமுடிந்தது. அத்துடன், தனது கடந்த கால துடுப்பாட்ட முறைகளில் ஓட்டங்களை பெறமுடிந்தமை ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்துவதாக இருந்தாகவும் சனத் ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.
“ஓரிரண்டு பந்துகள் துடுப்பாட்ட மட்டையில் சரியாக படும் போது, மகிழ்ச்சி ஏற்படும். குறிப்பாக ரசிகர்கள் விரும்பும் வகையில் ஓட்டங்களை நான் பெறவேண்டும் என ரசிகர்கள் அன்புடன் எதிர்பார்ப்பர். அந்தவகையில், நான் இறுதிப்போட்டியில், பந்துவீசி, ஓட்டங்களை குவித்து ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தினேன் என்றால், அது எனக்கு கிடைத்த மிகப்பெரிய மகிழ்ச்சியாகும்.
இதேநேரம், நான் ரசிகர்களுக்கு எனது நன்றிகளை தெரிவிக்கவேண்டும். ஒருசில சமூகவலைளத்தளங்களில், வெளியிடப்பட்டிருந்த கருத்துகளை பார்த்து எனது கண்ணில் கண்ணீர் வந்தது. நான் கிரிக்கெட் விளையாடும் போது, சமூக வலைத்தளங்கள் இல்லை. தொலைக்காட்சியும், பத்திரிக்கை மாத்திரமே இருந்தது.
ஆனால், தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டிருந்த கருத்துகளை பார்த்து ஆனந்தத்தில், கண்ணீர் வந்தது. ஆனாலும், நாம் குறித்த மகிழ்ச்சியை ஏற்றுக்கொண்டு, தனக்குள் மகிழ்ந்துக்கொண்டு, எமது கிரிக்கெட்டையும், இலங்கையின் கிரிக்கெட்டையும் எவ்வாறு முன்னேற்றத்துக்கு அழைத்துச்செல்வது என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும்” என்றார்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<