இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சம்மேளனம் நடத்தும் இந்த ஆண்டிற்கான சேர் ஜோன் டாபர்ட் கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட மெய்நல்லுனர் போட்டிகள், அஞ்சலோட்ட திருவிழா மற்றும் நகர்வல ஓட்டப் போட்டி (அரை மரதன்) என எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் ஆரம்பமாகவுள்ளது.
இந்த நிலையில், இம்முறை போட்டித் தொடரில் 1300 பாடசாலைகளைச் சேர்ந்த 30,000 மாணவர்கள் கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட பிரிவுகளில் பங்குபற்றவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
சேர். ஜோன் டாபர்ட் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளானது இலங்கையின் விளையாட்டு வரலாற்றில் மிகவும் பழமையான பாடசாலை மெய்வல்லுனர் போட்டித் தொடராகும். மேலும், கல்வி அமைச்சின் மேற்பார்வையின் கீழ் ஒழுங்கு செய்யப்படுகின்ற இந்த போட்டித் தொடருக்கு இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சம்மேளனம் பூரண ஒத்துழைப்பு வழங்குகிறது. எனவே,இந்த ஆண்டு நடைபெறவுள்ள சேர். ஜோன் டாபர்ட் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் நாடளாவிய ரீதியில் உள்ள 1300 பாடசாலைகளைச் சேர்ந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.
அந்த வகையில், முந்தைய ஆண்டுகளின் மிகப்பெரிய வெற்றியின் அடிப்படையில், இந்த ஆண்டு நடைபெறவுள்ள முதலாவது நிகழ்ச்சியான ரிட்ஸ்பறி அஞ்சலோட்ட திருவிழா (Ritzbury Relay Carnival) தியகம விளையாட்டரங்கில் ஏப்ரல் 9, 10, 11ஆம் திகதிகளில் நடைபெறும்.
இம்முறை 12, 13, 14, 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான 54ஆவது சேர் ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகள் 6 கட்டங்களாக நடத்தப்படும். இதன் முதல் கட்டம் தென், சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் மொனராகலா மாவட்டங்களை உள்ளடக்கியதாக எதிர்வரும் மே 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் பெலியத்த மைதானத்தில் நடைபெறும். இந்தப் போட்டிகளானது 12, 13, 14 மற்றும் 15 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்காக நடைபெறவுள்ளது.
அதேபோல, கம்பஹா மாவட்டத்தில் அதிக மாணவர்கள் பங்கேற்பதைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு முதல் தடவையாக பிரத்யேகமாக ஒரு போட்டி சேர்க்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த போட்டியானது எதிர்வரும் ஜூன் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் வத்துபிட்டிவல மைதானத்தில் நடைபெறும்.
- சேர். ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனரில் சந்துன், டில்னி சிறந்த வீரர்களாக முடிசூடல்
- ஜோன் டார்பட் அஞ்லோட்ட களியாட்டம் கொழும்பில்
மத்திய, வடமேற்கு மாகாணங்கள் மற்றும் பதுளை மாவட்டத்திற்கான போட்டிகள் எதிர்வரும் ஜூன் 04 முதல் 06 வரை திகன மைதானத்தில் நடைபெறும். களுத்துறை மற்றும் கொழும்பு மாவட்ங்களுக்கான போட்டிகள் ஜூலை 02 முதல் 04 வரை பண்டாரகம பொது மைதானத்தில் நடைபெறும்.
அதேபோல, வட மாகாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்திற்கான போட்டிகள் ஜூலை 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தின் துரையப்பா மைதானத்திலும், கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவை மாவட்டத்திற்கான போட்டிகள் ஜூலை 19 முதல் 20 வரை மட்டக்களப்பு வெபர் மைதானத்திலும் நடைபெறும்.
அகில இலங்கை ரீதியிலான இறுதிக் கட்டப் போட்டிகள் அக்டோபர் 10, 11, 12, 13ஆம் திகதிகளில் நடைபெறும் எனவும், அதற்கான இடம் பின்னர் அறிவிக்கப்படும் என போட்டி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
இதேவேளை, 93ஆவது சேர். ஜோன் டாபர்ட் சிரேஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 21 முதல் 24 வரை சுகததாச விளையாட்டரங்கில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் போட்டித் தொடரில் 16, 18 மற்றும் 20 வயதுக்குட்பட்ட வீரர்கள் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும், சிரேஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகள் அட்டவணையில் நகர்வல ஓட்டப் போட்டியும் சேர்க்கப்பட்டுள்ளது, இது எதிர்வரும் அக்டோபர் 10 முதல் 13 வரை நடைபெறவுள்ளது.
நகர்வல தொடர் ஓட்டத்தில் முதல் 3 பேர் தலா 5 கிலோ மீற்றர் தூரத்தையும் நான்காவது வீரர் 6.0975 கிலோ மீற்றர் தூரத்தையும் ஓடவேண்டும்.
Photos – Press Conference – Ritzbury Sir John Tarbat Inter-School Athletic Championship 2025
இதனிடையே, இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் 93வது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சேர். ஜோன் டாபர்ட் (சிரேஷ்ட) மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கு, CBL குழுமத்தின் துணை நிறுவனமான சிலோன் பிஸ்கட் லிமிடெட் நிறுவனத்தின், முன்னணி சொக்லட் வர்த்தக நாமமான ரிட்ஸ்பறி தொடர்ச்சியாக 14ஆவது தடவையாக அனுசரணை வழங்கவுள்ளது.
இந்த நிலையில், இம்முறை சேர். ஜோன் டாபர்ட் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகள் தொடர்பில் ஊடகங்களை தெளிவுபடுத்தும் விசேட செய்தியாளர் மாநாடு அண்மையில் கொழும்பு தாஜ்சமுத்ரா ஹோட்டலில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட CBL Foods International Pvt Limited நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர் நிலுபுல் டி சில்வா கருத்து தெரிவிக்கையில்,
‘ரிட்ஸ்பறி, இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சம்மேளனத்துடன் இணைந்து, ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பாடசாலைகள் மெய்வல்லுனர் நிகழ்வான சேர். ஜோன் டாபர்ட் சிரேஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பின் தொடக்கத்தை மீண்டும் அறிவிப்பதில் பெருமை கொள்கிறது. நாட்டின் உள்ள இளம் வீரர்களின் விளையாட்டு திறமைகளை ஊக்குவிப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம், மேலும் இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சம்மேளனத்துடனான நீண்டகால கூட்டாண்மை இந்த நோக்கத்திற்கு முக்கியமானது. நாடு முழுவதிலுமிருந்து இலங்கை இளைஞர்களின் மெய்வல்லுனர் சாதனைகளைக் கொண்டாடும் இந்த தேசிய தளத்திற்கு முக்கிய பங்களிப்பாளராக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.’ ஏன தெரிவித்தார்.
இதனிடையே, இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சம்மேளனத்தின் தலைவர் திருமதி டி.ஏ.எஸ்.எஸ். விஜேசிங்க, சேர். ஜோன் டாபர்ட் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பிற்கு ரிட்ஸ்பரியின் தொடர்ச்சியான ஆதரவிற்கு பாராட்டு தெரிவித்தார். ‘ சேர். ஜோன் டாபர்ட் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பின் தொடர்ச்சியான வெற்றியனாது இளம் மெய்வல்லுனர் வீரர்களை உருவாக்குவதிலும், நாட்டில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உருவாக்குவதிலும் ரிட்ஸ்பரி வகிக்கும் முக்கிய பங்கை நிரூபிக்கிறது என தெரிவித்தார்.
>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<