இலங்கை பாடசாலை மெய்வல்லுனர் சங்கத்தின் ஏற்பாட்டில் சிலோன் பிஸ்கட் லிமிடெட் நிறுவனத்தின் முன்னணி சொக்லட் வர்த்தக நாமமான Ritzbury அனுசரணையில் நடைபெற்ற இந்த ஆண்டுக்கான சேர். ஜோன் டார்பட் அஞ்சலோட்ட களியாட்டம் நேற்று (26) வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தது.
கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற இம்முறை அஞ்சலோட்ட களியாட்டத்தில் ஆண்களுக்கான ஒட்டுமொத்த சம்பியன் பட்டத்தை 95 புள்ளிகளை எடுத்த நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியும், பெண்களுக்கான ஒட்டுமொத்த சம்பியன் பட்டத்தை 113 புள்ளிகளை எடுத்த வளல ஏ ரத்நாயக்க கல்லூரியும் சுவீகரித்தது.
இம்முறை சேர். ஜோன் டார்பட் அஞ்சலோட்ட களியாட்டத்தில் ஓட்டு மொத்த ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தை கண்டி திரித்துவக் கல்லூரியும் (60 புள்ளிகள்) மூன்றாம் இடத்தை கொட்டாஞ்சேனை புனித பெனடிக்ட் கல்லூரியும் (56 புள்ளிகள்) பெற்றன. அதேபோல, வத்தளை லைசியம் கல்லூரி (90 புள்ளிகள்) ஒட்டு மொத்த பெண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும், அம்பகமுவ மத்திய மகா வித்தியாலயம் (62 புள்ளிகள்) மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.
வயது பிரிவு சம்பியன்ஷிப் போட்டிகளில், 12 வயதின் கீழ் ஆண்களுக்கான சம்பியன் பட்டத்தை 17 புள்ளிகளை எடுத்த பம்பலப்பிட்டிய புனித பேதுரு கல்லூரியும், பெண்கள் பிரிவில் சம்பியன் பட்டத்தை 14 புள்ளிகளை எடுத்த கொழும்பு மியூசியஸ் கல்லூரியும் தனதாக்கிக் கொண்டது.
14 வயதின்கீழ் ஆண்களுக்கான சம்பியன் பட்டத்தை நீர்கொழும்பு லொயாலா கல்லூரியும் (27 புள்ளிகள்), பெண்கள் பிரிவு சம்பியன் பட்டத்தை பன்னிப்பிட்டிய தர்மபால உயர்தரப் பாடசாலையும் (25 புள்ளிகள்) பெற்றுக்கொள்ள, 16 வயதின்கீழ் ஆண்கள் பிரிவு சம்பியனாக நீர்கொழும்பு மாரிஸ் டெல்லா கல்லூரியும் (45 புள்ளிகள்), பெண்கள் பிரிவு சம்பியாக வத்தளை லைசியம் கல்லூரியும் (34 புள்ளிகள்) பெற்றுக் கொண்டன.
- ஜோன் டார்பட் அஞ்லோட்ட களியாட்டம் கொழும்பில்
- தருஷி முதல் தங்கம் வெல்ல; கலப்பு அஞ்சலோட்டத்தில் இலங்கை அணி சாதனை
- 2023இல் 100 மீட்டரையும் வெற்றியுடன் ஆரம்பித்த யுபுன்
இதனிடையே, 18 வயதின்கீழ் ஆண்கள் பிரிவு சம்பியனாக நீர்கொழும்பு மாரிஸ் டெல்லா கல்லூரி (35 புள்ளிகள்) தெரிவாக, பெண்கள் பிரிவு சம்பியனாக வத்தளை லைசியம் கல்லூரியும் (43 புள்ளிகள்) தெரிவாகியது. அதேபோல, 20 வயதின்கீழ் ஆண்களுக்கான சம்பியன் பட்டத்தை 38 புள்ளிகளை எடுத்த கொட்டாஞ்சேனை புனித பெனடிக்ட் கல்லூரியும், பெண்களுக்கான சம்பியன் பட்டத்தை 60 புள்ளிகளை எடுத்த வலள ஏ ரத்நாயக்க மகா வித்தியாலயமும் பெற்றுக்கொண்டன.
இதனிடையே, போட்டியின் மூன்றாம் நாளான நேற்று (26) அனைவரது கவனத்தையும் ஈர்த்த 4×100 மீட்டர் அஞ்சலோட்டப் போட்டியின் இறுதிப் போட்டிகள் இடம்பெற்றதுடன், 12 வயதின்கிழ் ஆண்களுக்கான 4×100 மீட்டர் அஞ்சலோட்டப் போட்டியை 55.5 செக்கன்களில் நிறைவு செய்த கொழும்பு புனித பேதுரு கல்லூரி அணி வெற்றி பெற்றது.
14 வயதின்கீழ் 4×100 மீட்டர் அஞ்சலோட்டப் போட்டியில் நீர்கொழும்பு லயோலா கல்லூரி (50.0 செக்.) வெற்றியீட்டியதுடன், 16 வயதின்கீழ் ஆண்களுக்கான 4×100 மீட்டர் அஞ்சலோட்டப் போட்டியில் நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி அணி (44.7 செக்.) முதலிடத்தைப் பிடித்தது.
அத்துடன், 18 வயதின்கீழ் ஆண்களுக்கான 4×100 மீட்டர் அஞ்சலோட்டப் போட்டியில் கண்டி திரித்துவக் கல்லூரி அணி, போட்டியை 44.6 செக்கன்களில் நிறைவு செய்து முதலிடத்தைப் பிடிக்க, 20 வயதின்கீழ் 4×100 மீட்டர் அஞ்சலோட்டப் போட்டியில் மாத்தறை ராகுல கல்லூரி வீரர்கள் (42.6 செக்.) முதலிடத்தைப் பிடித்தனர்.
இந்த நிலையில், பெண்களுக்கான 4×100 மீட்டர் அஞ்சலோட்டப் போட்டியில் காலி சவுத்லண்ட்ஸ் பெண்கள் கல்லூரி 12 வயதின்கீழ் பிரிவிலும், பன்னப்பிட்டிய தர்மபால பெண்கள் கல்லூரி 14 வயதின்கீழ் பிரிவிலும், வத்தளை லைசியம் கல்லூரி அணி 18 வயதின்கீழ் பிரிவிலும், வளல ஏ ரத்நாயக்க கல்லூரி அணி 29 வயதின்கீழ் பிரிவிலும் முதலிடங்களைப் பெற்றுக் கொண்டன.
இதேவேளை, இந்த ஆண்டு சேர். ஜோன் டாபர்ட் அஞ்சலோட்ட களியாட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வலள ஏ ரத்நாயக்க கல்லூரி, 20 வயதின்கீழ் பெண்களுக்கான 4×400 மீட்டர், 4×800 மீட்டர், 18 வயதின்கீழ் 4×800 மீட்டர், 16 வயதின்கீழ் 4×800 மீட்டர் ஆகிய அஞ்சலோட்டப் போட்டிகளிலும் ஆண்கள் பிரிவில் 20 வயதின்கீழ் கலவை அஞ்சலோட்டம், 4×800 மீட்டர், 18 வயதின்கீழ் 4×800 மீட்டர் ஆகிய அஞ்சலோட்டப் போட்டிகளிலும் வெற்றிபெற்று தங்கப் பதக்கங்களை சுவீகரித்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<