இவ்வருட ஐ.பி.எல் தொடரில் புதிதாக இணைக்கப்பட்ட றைசிங் பூனே சுப்பர்ஜையன்ட்ஸ் அணியின் முக்கிய இரண்டு துடுப்பாட்ட வீரர்களான பெப் டுப்லசிஸ்
கைவிரலில் ஏற்பட்ட உபாதை காரணமாகவும் கெவின் பீட்டர்சன் காலின் பின் பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாகவும் அணியில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இதனால் இவர்கள் இருவருக்கும் பதிலாக இவ்வருட டி20 உலகக் கிண்ணக் கிரிக்கட் தொடரில் அவுஸ்திரேலியா அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய உஸ்மான் கவாஜாவை றைசிங் பூனே சுப்பர்ஜையன்ட்ஸ் அணியில் இணைக்க ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக றைசிங் பூனே சுப்பர்ஜையன்ட்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறுகையில் “உஸ்மான் கவாஜா அணியில் இணைவது ஒரு மகிழ்ச்சியான விடயம். அவர் அணியில் இணைவது நிச்சயமாக ஒரு அனுகூலமான விடயமாகும்” என்று கூறியுள்ளார்.
உஸ்மான் கவாஜா 2015/16 ஆண்டுகளில் 15 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 62.87 என்ற துடுப்பாட்ட சராசரியில் 1006 ஓட்டங்களைப் பெற்றிருந்ததோடு, நடந்து முடிந்த டி20 உலகக் கிண்ணக் கிரிக்கட் தொடரில் 4 போட்டிகளில் 143 ஓட்டங்களைப் பெற்று அவுஸ்திரேலியா அணி சார்பாக இவ்வருட டி20 உலகக் கிண்ணக் கிரிக்கட் தொடரில் அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரர் என்ற பெருமையைப் பெற்றிருந்தார். அத்தோடு 2015/16 ஆண்டுக்கான அவுஸ்திரேலிய பிக் பேஷ் கிரிக்கட் தொடரில் 4 போட்டிகளில் பங்குபற்றி 2 சதங்கள் அடங்கலாக 345 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை ஒரு முக்கிய அம்சமாகும்.
மேலும் கிரிக்கட் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்