இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) தொடரில் டெல்லி கெபிடல்ஸ் அணியின் புதிய தலைவராக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிக்கப்பட்டுள்ளது.
டெல்லி கெபிடல்ஸ் அணியின் தலைவராக ஸ்ரேயாஸ் ஐயர், கடந்த பருவகாலங்களில் செயற்பட்டுவந்த நிலையில், அவருக்கு உபாதை ஏற்பட்ட காரணத்தால், புதிய தலைவராக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
சந்திமால், தனன்ஜயவின் இணைப்பாட்டத்துடன் முன்னேறும் இலங்கை
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி களத்தடுப்பில் ஈடுபட்டபோது, இந்திய அணி வீசிய 8வது ஓவரின் போது, பந்தினை தடுக்க முயன்ற ஸ்ரேயாஸ் ஐயரின் இடது தோற்பட்டையில் கடுமையான உபாதை ஏற்பட்டது. இதன்காரணமாக அவர் மைதானத்திலிருந்து வெளியேறினார்.
பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில், தோற்பட்டை சற்று விலகியிருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனால் அவர் ஒருநாள் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டதுடன், தற்போது ஐ.பி.எல் தொடரிலிருந்து முழுமையாக வெளியேறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லி கெபிடல்ஸ் அணியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து கருத்து வெளியிட்ட ரிஷப் பண்ட், “டெல்லி நான் வளர்ந்த இடம். ஆறு வருடங்களுக்கு முன்னர் இங்குதான் ஐ.பி.எல். வாழ்க்கையை ஆரம்பித்தேன். இந்த அணிக்கு தலைமை வகிப்பது எனது கனவு. இன்று அந்த கனவு நனவாகியுள்ளது.
இதனையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். எமது அணியின் உரிமையாளர்கள் நான் இந்த இடத்துக்கு தகுதியானவர் என தெரிவுசெய்துள்ளனர். மிகச்சிறந்த வீரர்களும், பயிற்றுவிப்பாளர்களும் உள்ளனர். எனவே என்னால் முடிந்ததை அணிக்கு சிறப்பாக செய்வேன்” என்றார்.
இதேவேளை, டெல்லி கெபிடல்ஸ் அணியின் தலைவராக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து கருத்து வெளியிட்ட ஸ்ரேயாஸ் ஐயர், “நான் தோள்பட்டை உபாதைக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், டெல்லி கெபிடல்ஸ் அணிக்கு புதிய தலைவர் ஒருவர் தேவை. அந்த இடத்துக்கு ரிஷப் பண்ட் சரியானவராக இருப்பார்.
மிக சிறந்த அணியுடன் இம்முறை சிறப்பாக பிரகாசிக்க ரிஷப் பண்ட்டுக்கு வாழ்த்துக்கள். அணியில் இணையமுடியாமை துரதிஷ்டமானது. எனினும், அணிக்கான ஆதரவை தொடர்ந்து வழங்குவேன்” என்றார்.
டெல்லி கெபிடல்ஸ் அணி தங்களுடைய முதல் போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை எதிர்வரும் 10ஆம் திகதி எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<