தவானின் உபாதையைத் தொடர்ந்து இங்கிலாந்து செல்கிறார் ரிஷப் பான்ட்

379
Getty

இந்திய கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷிகர் தவான் காயம் அடைந்துள்ளதை அடுத்து, இளம் வீரர் ரிஷாப் பான்ட் இங்கிலாந்து செல்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷிகர் தவான், உலகக் கிண்ணப் போட்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பந்து தாக்கியதில் இடது கை பெருவிரலில் காயம் அடைந்தார்.

உபாதைக்குள்ளான ஷிகர் தவான் அணியில் இருந்து விலக மாட்டார்

உபாதைக்குள்ளாகியுள்ள இந்திய கிரிக்கெட் ………

இதனிடையே அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் பெருவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. அவர் 3 வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதன்படி, அவர் இந்திய அணி விளையாடவுள்ள அடுத்த 4 லீக் போட்டிகளில் விளையாட முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் சபை, ஷிகர் தவான் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகத் தெரிவித்தது. இது தொடர்பில் இந்திய கிரிக்கெட் சபை வெளியிட்டிருந்த அறிக்கையில், தவான், BCCI இன் மருத்துவக் குழு கண்காணிப்பில் தற்போது உள்ளார். அவரை இங்கிலாந்தில் தொடர்ச்சியாக வைத்திருக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அவர் காயத்தின் தன்மை தொடர்ச்சியாக கண்காணிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

இதனால் இந்திய அணி, இன்று (13) விளையாடவுள்ள நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் மட்டுமே ஷிகர் தவான் விளையாட மாட்டார் என்றும் அதற்குள் காயம் குணமாகி விட்டால், அடுத்து நடைபெறும் போட்டியில் பங்கேற்பார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஷிகர் தவான் காயம் குறித்து இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் நேற்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில்,

”ஷிகர் தவானின் காயம் எந்த அளவுக்கு குணம் அடைகிறது என்பதை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். 10 முதல் 12 நாட்கள் கழித்து தான் இந்த விடயத்தில் இறுதி முடிவு எடுக்க முடியும். இந்திய அணியின் முக்கிய வீரரான தவானை இன்னும் அணியில் இருந்து நீக்கவில்லை. மாற்று வீரர் தேவை என்ற நிலை ஏற்படும் போது அது குறித்து அறிவிக்கப்படும். மாற்று வீரர் முன்னதாகவே அணியினருடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடுவது எப்பொழுதும் நல்ல விடயமாகும்” என்றார்.

இதற்கிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய அணியின் இளம் விக்கெட் காப்பாளரும், துடுப்பாட்ட வீரருமான ரிஷாப் பான்ட் இந்திய அணியுடன் இணைந்து கொள்வதற்கு இங்கிலாந்து நோக்கி புறப்பட்டு செல்கிறார். இந்திய அணி முகாமைத்துவம் கேட்டுக்கொண்டதன் பேரில் ரிஷாப் பான்ட் இங்கிலாந்து விரைகிறார். ஆனால் அவர் மாற்று வீரராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

அப்படி அறிவித்தால், தவான் விரைவில் குணம் அடைந்தாலும் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட முடியாது. அணியில் உள்ள மற்ற வீரர் யாராவது காயமாகி வெளியேறினால் தான் அவரை அணியில் மீண்டும் சேர்க்க முடியும் என்பதால், ரிஷாப் பாண்டை மாற்று வீரராக அறிவிக்கவில்லை.

Video- ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 80

ஆப்கானிஸ்தானை விழ்த்தி முதல் வெற்றியை ……

இதனால் போட்டி நடைபெறும் நாட்களில் அவர் இந்திய அணியினருடன் வீரர்கள் அறையை பகிர்ந்து கொள்ளவோ, அணியினருடன் ஒரே பஸ்சில் பயணிக்கவோ முடியாது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

21 வயதான ரிஷாப் பான்ட், கடந்த ஒரு வருடங்களாக இந்திய கிரிக்கெட் அணியில் முக்கிய வீரராக ஜொலித்துக் கொண்டிருக்கின்றார். இங்கிலாந்து, அவுஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் அதிரடியாக விளையாடி சதம் அடித்து அசத்தினார். அத்துடன், இம்முறை ஐ.பி.எல் தொடரில் அபாரமாக விளையாடியிருந்தார்.

எனினும், இம்முறை உலகக் கிண்ணத்தில் ரிஷாப் பான்ட்டை இந்திய அணியில் இணைத்துக் கொள்ளப்படாமை குறித்து அந்த அணியின் முன்னாள் மற்றும் இன்னாள் வீரர்கள் பலர் தமது அதிருப்தியினை வெளியிட்டிருந்தனர்.

இதற்கிடையே, இன்று நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள லீக் ஆட்டத்தில் ஷிகர் தவானுக்குப் பதிலாக கே.எல்.ராகுலை ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறக்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. நான்காவது இடத்தில் தினேஷ் கார்த்திக் அல்லது விஜய் சங்கர் களமிறக்கப்படலாம் என்று தெரிகிறது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<