அவுஸ்திரேலியாவுடனான இரண்டாவது ஒருநாள் போட்டியிலிருந்து ரிஷப் பண்ட் விலகல்

189
Image Courtesy : AFP

தலையில் பந்து தாக்கி மூளையில் சிறிய அதிர்ச்சி ஏற்பட்டதன் காரணமாக அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகியுள்ளார்.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்திய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. 

பிஞ்ச், வோர்னரின் சதங்களின் உதவியுடன் இந்தியாவை வீழ்த்திய அவுஸ்திரேலியா

அணித்தலைவர் ஆரோன் பிஞ்ச் மற்றும் டேவிட் வோர்னர்…..

இந்த தொடரின் முதல் போட்டி மும்பையின் வான்கடே மைதானத்தில் நேற்று (14) நடைபெற்றது. 

இந்த போட்டியின் துடுப்பாட்டத்தின் போது இந்திய அணியின் விக்கெட் காப்பாளரான ரிஷப் பண்ட்டின் தலையில் பந்து தாக்கியதால் அவர் போட்டியில் இருந்து இடைநடுவில் வெளியேறினார். இதனையடுத்து அவருக்குப் பதிலாக கே.எல் ராகுல் விக்கெட் காப்பாளராக செயல்பட்டார்.

இந்த நிலையில், அவுஸ்திரேலிய அணியுடனான இரண்டாவது ஒருநாள் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நாளை மறுதினம் நடைபெற உள்ள நிலையில், இதற்கான இந்திய அணி ராஜ்கோட் சென்றுள்ளது. 

ஆனால் ரிஷப் பண்ட் இந்திய அணியுடன் ராஜ்கோட் செல்லவில்லை என்றும் சிகிச்சை பெற்று மருத்துவமனையில் இருந்து திரும்பியுள்ள அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமிக்குச் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு அவருடைய செயல்பாட்டைப் பொறுத்தே 3ஆவது ஒருநாள் போட்டியில் அவர் பங்கேற்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் BCCI அறிவித்துள்ளது.

இதனையடுத்து ரிஷப் பண்ட் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இருந்து விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரிஷப் பண்ட் அணியில் இணைவாரா அல்லது ஒட்டுமொத்த தொடரில் இருந்தும் விலகுவாரா என்பது குறித்தான உத்தியோகபூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

இதேவேளை, விக்கெட் காப்பாளரான ரிஷப் பண்ட் விலகியுள்ளதால் கே.எல் ராகுலே இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் விக்கெட் காப்பாளராக செயல்பட வாய்ப்புகள் உள்ளது. 

ஆனால் கடந்த போட்டியில் விக்கெட் காப்பாளராக செயல்பட்ட கே.எல் ராகுல் அதிக தவறுகளை இழைத்ததால் அடுத்த போட்டிக்கு வேண்டாம் என்றும் சஞ்சு சம்சனை அணியில் இணைத்துக் கொள்வதற்கான வாய்ப்பு இருப்பதாக BCCI வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<