இந்திய அணியின் விக்கெட் காப்பாளரான ரிஷாப் பண்ட் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய மண்ணில் முதலும் இறுதியுமான சதமடித்த இந்திய விக்கெட் காப்பாளர் என்ற சாதனையுடன், இன்னும் பல சாதனைகளை தற்போது நடைபெற்றுவரும் அவுஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரில் நிகழ்த்தியுள்ளார்.
சுற்றுலா இந்திய அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்குமிடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி நேற்று (03) ஆரம்பமாகி தற்சமயம் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
>> சிடில், கவாஜாவின் வருகையுடன் புதிய ஆஸி. ஒருநாள் குழாம் அறிவிப்பு
தொடரில் 2-1 என்ற அடிப்படையில் இந்திய அணி முன்னணியில் உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலோ அல்லது போட்டியை சமன் செய்தாலோ, அவுஸ்திரேலிய மண்ணில் முதல் டெஸ்ட் தொடரை வெற்றி கொண்ட சரித்திரம் படைக்கும்.
இந்நிலையில் இறுதி டெஸ்ட் போட்டியின் இரண்டு நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் இமாலய ஓட்ட எண்ணிக்கையை குவித்துள்ளது. அவ்வணி மொத்தமாக 622 ஓட்டங்களை பெற்று, 7 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டுள்ளது.
இதன் போது இந்திய அணி சார்பாக துடுப்பாட்டத்தில் சடீஸ்வர் புஜாரா 7 ஓட்டங்களினால் இரட்டை சதத்தினை துரதிஷ்டவசமாக தவறவிட்டிருந்தார். மறுமுனையில் ஒருநாள் ஆட்டம் போன்று 84.12 சதவீத ஓட்ட விகிதத்தில் துடுப்பெடுத்தாடி விக்கெட் காப்பாளர் ரிஷாப் பண்ட் ஆட்டமிழக்காது 159 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
ரிஷாப் பண்ட் ஒரு பேபி சிட்டர் என்று கூறிய அவுஸ்திரேலிய அணியின் தலைவர் டிம் பெய்னுக்கு தான் யார் என்பதை சதத்துடனும், அதன் மூலம் பெற்ற சாதனையையும் வைத்து நிரூபித்துள்ளார்.
இவ்வாறு ரிஷாப் பண்ட் என்ன சாதனைகள் படைத்துள்ளார் என்பது தொடர்பில் அவதானம் செலுத்தலாம்.
21 வயதுடைய விக்கெட் காப்பாளர் ரிஷாப் பண்ட் இதற்கு முன்னதாக இங்கிலாந்து அணியுடன் இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியிலும் அந்த மண்ணில் சதமடித்த முதல் இந்திய விக்கெட் காப்பாளர் என்ற சாதனையை பெற்றிருந்த வேளையில் இன்று (04) பெற்ற சதத்தின் மூலம் அவுஸ்திரேலிய மண்ணில் இந்திய விக்கெட் காப்பாளர்களில் முதல் சதமடித்தவர் என்ற அதேபோன்ற தனியானதொரு பெருமையையும் தன்வசப்படுத்தியுள்ளார்.
அத்துடன் குறித்த டெஸ்ட் தொடரில் அதிக ஓட்டங்கள் பெற்றவர்கள் பட்டியலில் விராட் கோஹ்லியை பின்தள்ளி இரண்டாமிடத்திற்கு முன்னேறியுள்ளார். முதலிடத்தில் புஜாரா 521 ஓட்டங்களை பெற்று அவுஸ்திரேலிய அணிக்கெதிரான தொடரில் 500 டெஸ்ட் ஓட்டங்களுக்கு மேல் பெற்ற மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
மேலும் ரிஷாப் பண்ட் இன்று (04) பெற்ற 159 ஓட்டங்களின் மூலம் அவுஸ்திரேலிய மண்ணில் விக்கெட் காப்பாளர் ஒருவர் பெற்ற அதிகூடிய ஓட்டங்கள் என்ற வரிசையில் 2ஆவது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் தென்னாபிரிக்க வீரர் ஏ.பி.டிவில்லியஸ் 2012ஆம் ஆண்டு பெற்ற 169 ஓட்டங்கள் காணப்படுகின்றது.
இதற்கு மேலதிகமாக 21 வயதில் இன்னும் ஏராளமான சாதனைகளை ரிஷாப் பண்ட் நிகழ்த்தியுள்ளார். தனியொரு டெஸ்ட் போட்டியில் விக்கெட் காப்பாளராக 11 பிடியெடுப்புக்களையும், ஒரு தொடரில் 20 பிடியெடுப்புக்களையும் (இதுவரையில்) நிகழ்த்திய முதல் இந்திய விக்கெட் காப்பாளர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
அத்துடன் இதே தொடரில் இந்திய விக்கெட் காப்பாளர்களில் 200 ஓட்டங்களையும், 20 பிடியெடுப்புக்களையும் நிகழ்த்திய முதல் விக்கெட் காப்பாளர் என்ற பெருமையும் இந்த தொடரில் பெற்றுள்ளார்.
ஆசியாவுக்கு வெளியில் சதம் குவித்த 5 விக்கெட் காப்பாளர்களில் இரண்டு இடங்களை ரிஷாப் பண்ட் பிடித்துள்ளார். மேலும் ரிஷாப் பண்ட் – ரவீந்திர ஜடேஜா ஜோடி பெற்ற 204 ஓட்டங்கள் அவுஸ்திரேலிய மண்ணில் 7ஆவது விக்கெட்டுக்காக பெற்ற அதிகூடிய இணைப்பாட்டமுமாகும்.
>> சர்வதேச கிரிக்கெட்டின் சாதனைகளும், சம்பவங்களும் – 2018 மீள் பார்வை
அவுஸ்திரேலிய அணிக்கெதிராக டெஸ்ட் போட்டியில் தொடர்ச்சியாக மூன்று முறை (443/7 106/8 622/7) இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்திகக் கொண்ட ஒரே அணியாக இந்திய அணி திகழ்கின்றது.
இவ்வாறு இருக்க தற்சமயம் பதிலுக்கு முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் அவுஸ்திரேலிய அணி இன்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவின் போது விக்கெட் இழப்பின்றி 24 ஓட்டங்களை பெற்று 598 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<