ரியோ ஒலிம்பிக் 2016 – ஆகஸ்ட் 21

351

கென்யா வீராங்கனை ஒலிம்பிக் சாதனை

நேற்று பெண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயம் நடந்தது. இதில் கென்ய வீராங்கனை விவியன் சருயியூட் ஒலிம்பிக் சாதனையுடன் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். அவர் 14 நிமிடம் 26.17 வினாடிகளில் கடந்தார்.

வெள்ளிப் பதக்கத்தை கென்யாவின் ஹெலன் ஒனசன்டுவும், வெண்கலத்தை எத்தியோப் பியாவின் அயனா அல்மஸ் வென்றனர்.

வெள்ளிப் பதக்கம் வென்ற சிந்துவுக்கு ரூ.2 கோடி பரிசு

ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சிந்துவுக்கு டெல்லி அரசு ரூ.2 கோடி பரிசும், தெலுங்கானா அரசு ரூ1 கோடி பரிசுத் தொகையும் அறிவித்துள்ளது.

வெள்ளிப் பதக்கம் வென்றதும் பி.வி.சிந்துக்கு நாடு முழுவதும் வாழ்த்து பரிசுகள் குவிந்தன. ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, தி.மு.க. தலைவர் கருணாநிதி, தெலுங்கானா முதல்-மந்திரி சந்திர சேகரராவ், மேற்கு வங்காள முதல்வர் மம்தாபானர்ஜி அரசியல் கட்சித் தலைவர்கள், மற்றும் நடிகர்- நடிகைகள், விளையாட்டு வீரர்கள் என பலர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

சிந்துவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். மேலும் ரசிகர்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

சிந்துவுக்கு பரிசுகளும் குவிகிறது. ஐதராபாத்தைச் சேர்ந்த அவருக்கு தெலுங்கானா மாநில அரசு ரூ.1 கோடி வழங்குகிறது. இந்திய பேட்மிண்டன் சங்கத் தலைவர் அகிலேஷ் தாஸ் குப்தா ரூ.50 லட்சம் பரிசுத் தொகை அறிவித்து உள்ளார்.

டெல்லி மாநில அரசு இன்று பி.சி.சிந்துக்கு ரூ.2 கோடி பரிசுத் தொகை அறிவித்துள்ளது. மத்திய பிரதேச மாநில அரசும் ரூ.50 லட்சம் அளிப்பதாக தெரிவித்துள்ளது.  இந்திய கால்பந்து சங்கம் பி.வி.சிந்துக்கு ரூ.5 லட்சம் வழங்குகிறது. இதுவரை அவருக்கு 4½ கோடி பரிசுத் தொகை கிடைத்துள்ளது.

மல்யுத்தத்தில் வெண்கலம் வென்ற சாக்சிக்கு ரூ.1 கோடி பரிசு வழங்குவதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது.

அல்லிசன் பெலிக்ஸ் 5 தங்கப் பதக்கம் வென்று சாதனை

அமெரிக்காவின் முன்னணி ஓட்டப் பந்தய வீராங்கனை அல்லிசன் பெலிக்ஸ். இவர் 2012-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் 200 மீட்டர், 4X100 தொடர் ஓட்டம் மற்றும் 4X400 தொடர் ஓட்டம் ஆகியவற்றில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். 2008-ம் ஆண்டு பீஜிங்கில் நடைபெற்ற 4X400 தொடர் ஒட்டத்தில் தங்க பதக்கம் வென்றிருந்தார்.

ரியோவில் ஒரு தங்கப் பதக்கம் வென்று தனது எண்ணிக்கையை ஐந்தாக உயர்த்த எண்ணிய பெலிக்ஸ், அதற்கேற்றவாறு 400 மீட்டர் ஓட்டத்தில் முதல் நபராக வந்து கொண்டிருந்தார். ஆனால் பஹாமாஸ் வீராங்கனை டைவ் அடித்து தங்கப் பதக்கத்தைப் பறித்துச் சென்றார். பெலிக்ஸ் வெள்ளிப் பதக்கம் பெற்று ஏமாற்றம் அளித்தார்.

ஆனால் 4X100 மீ தொடர் ஓட்டத்தில் முதல் இடம்பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக் ஓட்டப்பந்தயத்தில் 5 தங்கப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். நாளை 4X400 மீ தொடர் ஓட்டத்தில் பங்கேற்க இருக்கிறார். இதில் தங்கப் பதக்கம் வென்றால் 6 பதக்கம் வென்று பெருமை சேர்ப்பார். இதுதவிர 3 வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார்.

அரையிறுதியில் வெற்றி பெற்றும் தகுதி இழந்த பிரிட்டன் அணி

ரியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 4×400 மீ தொடர் ஓட்டத்தின் 2-வது அரையிறுதி நடைபெற்றது. இதில் பிரிட்டன் அணி சார்பில் நிகெல் லெவின், டெலானோ வில்லியம்ஸ், மேத்யூ ஹட்சன்-ஸ்மித் மற்றும் மார்ட்டின் ரூனே பந்தய தூரத்தை 2 நிமிடம் 58.88 வினாடிகளில் கடந்து முதல் இடம் பிடித்தனர்.

ஆனால், பிரிட்டன் அணியை தடகள கூட்டமைப்புகளின் சர்வதேச சங்கம் (IAAF) தகுதி நீக்கம் செய்தது. பிரிட்டன் அணியினர் தங்கள் கையில் உள்ள பேட்டனை குறிப்பிட்ட எல்லைக்குள் பரிமாறிக் கொள்ளத் தவறியதால் இந்த தகுதி நீக்கம் என்று கூறப்படுகிறது.

இதை எதிர்த்து பிரிட்டன் அணி மேல்முறையீடு செய்தது. ஆனால், IAAF அதை நிராகரித்து விட்டது. முதல் மற்றும் இரண்டாவது அரையிறுதியைச் சேர்த்து ஒட்டுமொத்தமாக 3-வது இடம் பிடித்தும் பிரிட்டன் அணி ஏமாற்றம் அடைந்துள்ளது.

பிரிட்டன் அணி வெளியேறியதால் ஒட்டுமொத்தமாக 8-வது இடம் பிடித்த பிரேசில் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

இதே பிரிவில் ஓடிய இந்திய அணியும் (மொகமது கஞ்சு, மொகமது அனாஸ், அய்யாசாமி தருண், ராஜீவ் ஆரோக்கியா) தகுதி இழந்தது. 3 நிமிடம் 2.24 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்தபோதும், தருண் மற்றும் ராஜீவ் ஆகியோருக்கு இடையே பேட்டன் பரிமாற்றத்தில் தவறு நடந்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டது.

ட்ரினிடாட் அண்ட் டொபாக்கோ அணியும் தகுதி நீக்கம் செய்யப்பட்டது. இதன்மூலம் மொத்தமுள்ள 16 அணிகளில் 3 அணிகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சாய்னாவுக்கு முழங்கால் சத்திரசிகிச்சை – 4 மாதங்கள் விளையாட்டுக்கு ஓய்வு

ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் தொடக்க சுற்றுடன் அதிர்ச்சிகரமாக வெளியேறிய இந்திய வீராங்கனை சாய்னா நேவால், வலது கால்முட்டி காயத்தால் பாதிக்கப்பட்டார். முட்டியில் வீக்கம் ஏற்பட்டதால் தன்னால் இயல்பாக விளையாட முடியாமல் போனதாக சாய்னா வேதனையுடன் கூறினார்.

இந்த நிலையில் சாய்னா ஐதராபாத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். காயத்தால் அவதிப்பட்ட அவருக்கு நேற்று முழங்கால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனால், அடுத்த 4 மாதங்களுக்கு சய்னா நேவால் போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு இல்லை என்று அவரது தந்தை ஹர்வீர் சிங் தெரிவித்தார். மேலும், நேற்று அறுவை சிகிச்சை நடைபெற்றதால், பி.வி. சிந்து பங்கேற்று விளையாடிய இறுதி போட்டியை பார்க்க முடியாமல் போய்விட்டதாகவும், காலையில் செய்தித்தாள் மூலமே அறிந்ததாகவும் தெரிவித்தார்.

ஒரே நகரத்தைச் சேர்ந்த (ஐதராபாத்) இரண்டு பெண்கள் (சாய்னா, சிந்து) ஒரே அகாடமியில் பயிற்சி பெற்று ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றிருப்பது உண்மையில் அற்புதமான விஷயம் என்றும் அவர் கூறினார்.