கண்ணீர் மழையோடு வெளியேறினார் சானியா மிர்சா
ரியோ ஒலிம்பிக் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா- ரோகன் போபண்ணா ஜோடி வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் செக்குடியரசு ஜோடியிடம் தோற்று பதக்கத்தை கோட்டை விட்டது. தோல்வியின் வேதனையைத் தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுத சானியா மிர்சா, கண்ணீரை அடக்குவதற்கு பெரும்பாடு பட்டார்.
உணர்ச்சி வசப்பட்ட நிலையில் நிருபர்களிடம் பேசிய 29 வயதான சானியா, ”இது கடினமான தருணம். என்னால் அதிகம் பேச முடியவில்லை. ஆனாலும் தோல்வியை ஏற்றுக்கொண்டு அதில் இருந்து வெளியே வர வேண்டும். அடுத்த ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் 4 ஆண்டுகள் இருக்கிறது. எனவே 2020-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் என்னால் பங்கேற்க முடியுமா? என்பதை இப்போது சொல்ல முடியாது” என்றார்.
சுதந்திர தின பரிசாக பதக்கத்தை நாட்டுக்கு அளிக்க முடியாமல் போனதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
52 வருட சாதனை சாதனை முறியடிப்பு
ரியோ ஒலிம்பிக்கில் தடகள போட்டிகள் நடைபெற்று வருகின்றன. தடகளத்தில் ஒவ்வொரு நாட்டு வீரர்கள்- வீராங்கனைகள் தங்கப் பதக்கம் வாங்கியதுடன் புதிய சாதனைகளையும் படைத்து வருகிறார்கள். இந்த வரிசையில் கென்யாவின் 800 மீட்டர் ஓட்டப் பந்தய வீரர் டேவிட் ருடிசாவும் சாதனைப் படைத்துள்ளார்.
இவர் கடந்த 2012-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். இவர் தற்போது ரியோ ஒலிம்பிக்கிலும் இதே பிரிவில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். பந்தய தூரத்தை ஒரு நிமிடம் 42:15 வினாடிகளில் கடந்து முதல் இடம் பிடித்தார். இதன்மூலம் 52 வருட கால ஒலிம்பிக் சாதனையை முறியடித்தார்.
அல்ஜீரியா வீரர் ஒரு நிமிடம் 42:61 வினாடிகள் கடந்து 2-வது இடம் பிடித்தார். இது அந்நாட்டின் தேசிய சாதனையாகும். அமெரிக்க வீரர் கிளெய்டன் மர்பி ஒரு நிமிடம் 42:93 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றார். இது அவருடைய தனிப்பட்ட சிறந்த ஓட்டமாகும்.
இதற்கு முன் நியூசிலாந்து வீரர் பீட்டர் ஸ்னெல் 1964-ம் ஆண்டு தொடர்ந்து இரண்டு முறை ஒலிம்பிக்கில் 800 மீ்ட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். அதை கென்யா வீரர் முறியடித்துள்ளார்.
வித்தியாசமான முறையில் வெற்றியை பதித்த வீராங்கனை
ரியோ ஒலிம்பிக்கில் திங்கட்கிழமை பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. இதில் அமெரிக்காவின் தங்க மங்கை அல்லிசன் பெலிக்ஸ், பனாமா வீராங்கனை ஷயுனேயி மில்லர் உட்பட 8 வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
போட்டி தொடங்கியதும் அமெரிக்காவின் அல்லிசன் பெலிக்ஸ், ஷயுனேயி மில்லர் ஆகியோர் சிட்டாகப் பறந்தனர். இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் ஓடினார்கள்.
ஒரு கட்டத்தில் பனாமா வீராங்கனை முன்னணி வகித்தார். அதன்பின் அமெரிக்க வீராங்கனை பனாமா வீராங்கனையை நெருங்கினார். இருவரும் பந்தய தூரத்திற்கான இலக்கை ஒரே அளவில் நோக்கி வந்தனர். அப்போது அமெரிக்க வீராங்கனை பந்தய தூரத்தில் கால் வைக்கவும், பனாமா வீராங்கனை ‘டைவ்’ அடித்து தனது கையால் பந்தய தூரத்தைத் தொட்டார்.
இதனால் பனமா மங்கை 0.07 வினாடி வித்தியாசத்தில் அமெரிக்க வீராங்கனையை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். பனாமா வீராங்கனை பந்தய தூரத்தை 49.44 வினாடிகளிலும், அமெரிக்க வீராங்கனை 49.51 வினாடிகளிலும் கடந்தனர்.
பனாமா வீராங்கனை ‘டைவ்’ அடித்ததால் பெலிக்ஸின் ஐந்தாவது தங்கப் பதக்கம் பறிபோனது.
ஒலிம்பிக் மைதானத்தில் 7 பேர் காயம்
ஒலிம்பிக் பார்க் மைதானத்தில் பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஸ்பைடர் கேமிராக்கள் மூலம் போட்டிகள் டெலிவிஷனில் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.
இந்நிலையில், பார்க் மைதானத்தில் அந்தரத்தில் தொங்கும் இந்த ஸ்பைடர் கேமிராவின் வயர் அறுந்தது விபத்து ஏற்பட்டது. இதனால் கேமிரா மைதானத்தில் விழுந்தது. இதில் 7 பேர் காயம் அடைந்தனர்.
இந்த விபத்தில் அதிகபடியான காயம் யாருக்கும் ஏற்படவில்லை. விபத்தில் காயமடைந்தவர்களில் இரண்டு சிறுவர்களும் அடங்குவர்.
ஏற்கனவே விளையாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு மைதானத்தின் அருகே பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இந்நிலையில் தற்போது மைதானத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.