ரியோ ஒலிம்பிக் 2016 – ஆகஸ்ட் 16

427

400மீ ஓட்டப் பந்தயத்தில் தென் ஆபிரிக்க வீரர் உலக சாதனை

ரியோ ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் தென் ஆபிரிக்க வீரர் புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.

இன்று காலை நடந்த 400 மீட்டர் ஓட்டத்தில் தென் ஆபிரிக்க வீரர் வேட் வான் நிகெர்க் புதிய உலக மற்றும் ஒலிம்பிக் சாதனை புரிந்தார். அவர் பந்தய தூரத்தை 43.03 வினாடிகளில் கடந்து தங்கப்பதக்கம் வென்றார்.

இதற்கு முன்பு 1999-ம் ஆண்டு அமெரிக்க வீரர் மைக்கேல் ஜான்சன் 43.18 வினாடிகளில் கடந்ததே சாதனையாக இருந்தது. 17 ஆண்டுகால 400 மீட்டர் உலக சாதனையை இன்று நிகெர்க் முறியடித்தார்.மேலும் ஒலிம்பிக் 400 மீட்டர் ஓட்டத்தில் பதக்கம் வென்ற முதல் தென் ஆபிரிக்க வீரர் என்ற வரலாற்றுப் பெருமையையும் அவர் பெற்றார்.

கிரீனிடா வீரர் ஜேம்ஸ் 43.76 வினாடிகளில் கடந்து வெள்ளியும், அமெரிக்க வீரர் மெரிட் 43.85 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.

பெண்களுக்கான டிரிபிள் ஜம்ப் பந்தயத்தில் கொலம்பிய வீராங்கனை கேட்ரின் 15.17 மீட்டர் தூரம் தாண்டி தங்கப்பதக்கமும், பெண்களுக்கான மரதனில் கென்யா வீராங்கனை சுமோங் தங்கப்பதக்கமும் வென்றனர்.

தங்கப்பதக்கம் வென்றார் என்டி முர்ரே

ரியோ ஒலிம்பிக் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் இங்கிலாந்து வீரர் என்டி முர்ரே தங்கப்பதக்கம் வென்றார்.

என்டி முர்ரே இறுதிப்போட்டியில் 7-5, 4-6, 6-2 என்ற கணக்கில் ஆர்ஜென்டினா வீரர் டெல் போட்ரோவை வீழ்த்தினார். கடந்த ஒலிம்பிக்கிலும் என்டி முர்ரே தங்கப்பதக்கம் வென்று இருந்தார். ஜோகோவிச், நடாலை வெளியேற்றிய டெல் போட்ராவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

ஜப்பான் வீரர் நிஷிகோரி 6-2, 6-7 (1-7), 6-3 என்ற கணக்கில் ரபெல் நடாலை (ஸ்பெயின்) வீழ்த்தி வெண்கலப்பதக்கம் வென்றார். பெண்கள் இரட்டையர் பிரிவில் ரஷியாவைச் சேர்ந்த மகரோவா வெசினா ஜோடியும், கலப்பு இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் மேதக் ஜேக் ஜோடியும் தங்கப்பதக்கம் வென்றது.

பதக்க மேடையில் திருமண விருப்பம்

ரியோ ஒலிம்பிக்கில் வெற்றி, தோல்வி மற்றும் உலக சாதனைகள் என்று விறுவிறுப்பாக இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், சுவாரஷ்யமான சம்பவங்களும் அவ்வப்போது இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.

அதே போன்ற சுவாரஷ்யமான சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது. ரியோ ஒலிம்பிக்கின் ஜிம்னாஷ்டிக் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்ற சீன வீராங்கனை ஷிவுக்கு, அதே நாட்டைச் சேர்ந்தடைவிங்வீரர் குயின் கை  பதக்க மேடையில் வைத்து திருமண விருப்பத்தினை தெரிவித்துள்ளார்.

இரத்தினத்திலான மோதிரம் ஒன்றை ஷிவுக்கு அணிவித்து தனது திருமண விருப்பத்தினை தெரிவித்துள்ளார். இதனை   ஷிவும் ஏற்றுக்கொண்டு தனது விருப்பத்தினையும் தெரிவித்துள்ளார்.

புதிய மைல்கல்லை எட்டி வரலாற்று சாதனை படைத்தது அமெரிக்கா

ஒலிம்பிக் அரங்கில் அமெரிக்கா 1000 தங்கப்பதக்கங்களை வென்று புதிய மைல்கல்லை எட்டி ஒலிம்பிக்கில் வரலாற்று சாதனை படைத்துள்ளது.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் 31வது ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. இதில் தொடர்ந்து அசத்தி வரும் அமெரிக்க வீரர்கள் பதக்க மழை பெய்து வருகின்றனர்.

பெண்களுக்கான 4×100 மீற்றர் மெட்லே தொடர் நீச்சலில் லில்லி கிங், கேத்லீன் பாகர், சிமோன் மானுல், டானா வால்மெர் ஆகியோர் அடங்கிய அமெரிக்க அணி தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றியது. ஒலிம்பிக் வரலாற்றில் அமெரிக்காவின் 1000வது தங்கப்பதக்கமாக இது அமைந்தது.

இது வரை 24 தங்கம், 18 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தமாக 61பதக்கங்களைக் குவித்துள்ள அமெரிக்க அணி, தொடர்ந்து பதக்கப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இதுவரை நடந்துள்ள 31 ஒலிம்பிக் போட்டிகளில், அமெரிக்க அணி மொத்தமாக 1000 தங்கம், 763 வெள்ளி, 674 வெண்கலம் என 2437 பதக்கங்களைக் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நான் அழிவற்றவன்: உசேன் போல்ட்

ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஜமைக்கா ஓட்டப்பந்தைய வீரரான உசைன் போல்ட் தான் ஒரு அழிவற்றவன் என ஆவேசமாக கூறியுள்ளார்.

ரியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான தடகள போட்டியில் 100 மீற்றர் ஓட்ட பந்தையத்தில் ஜமைக்காவை சேர்ந்த உசைன் போல்ட பந்தைய தூரத்தை 9.81 வினாடிகளில் கடந்து தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.

இது குறித்து போல்ட் கூறியதாவது, “இது ஒரு அற்புதமான நாள், நான் போட்டியில் வேகமாக செயல்படவில்லை சிந்தித்து செயல்பட்டேன் அதனால் வெற்றி அடைந்தேன். என்னுடைய வெற்றி தொடரும்.

மேலும் ரியோ ஒலிம்பிக் தொடங்குவதற்கு முன்னர் உசைபோல்ட் காயங்களால் அவதிப் பட்டு ஜேர்மனியில் சிகிச்சை பெற்று வந்தார்.

அப்போது அமெரிக்காவின் மற்றோரு ஓட்டப்பந்தைய வீரரான Justin Gatlin, போல்ட் ஒலிம்பிக்கிற்கு வரமாட்டார். அவரது உடல் நிலை அதற்கு ஒத்துழைப்பு தராது என கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் போல்ட் பதக்கத்தைக் கையில் வைத்துக்கொண்டு தான் ஒரு அழிவற்றவன், இன்னும் இரண்டு பதக்கங்கள் ரியோ ஒலிம்பிக்கில் உள்ளன. கடந்த முறையை விட இந்த முறை நான் சிறப்பாகவே செயற்பட்டுள்ளேன்.

நான் ரியோ ஒலிம்பிக் அரங்கத்திற்குள் வந்தவுடன் ரசிகர்கள் அனைவரும் பூம் என்று குரல் எழுப்பியது தனக்கு ஆச்சரியமாக இருந்தது என பூரிப்புடன்” கூறினார்.

ரியோ ஒலிம்பிக் பதக்கப்  பட்டியல்

ரியோ ஒலிம்பிக்கின்  பதக்கப்பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்தும்  முன்னிலை வகிக்கின்றது.

இரண்டாம் இடத்தை தக்கவைத்திருந்த சீனா 3 ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளதுடன், பிரித்தானியா 2ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.

பதக்கப்பட்டியலை பார்க்கும்போது, அமெரிக்கா 26 தங்கம், 23 வெள்ளி மற்றும் 26 வெண்கலம் அடங்கலாக 75 பதக்கங்களுடன் முதலிடத்திலும், பிரித்தானியா  16 தங்கம், 17 வெள்ளி மற்றும் 08 வெண்கலம் அடங்கலாக 41 பதக்கங்களுடன்  இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

இதேவேளை 15 தங்கங்களுடன் சீனா 3 ஆவது இடத்தையும்,  11 தங்கங்களுடன் ரஷ்யா  4 ஆவது இடத்தையும், 08 தங்கங்களுடன் இத்தாலி  5 ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.