ஒலிம்பிக் செல்ல முன் வீரர்கள் ஜனாதிபதியை சந்திப்பு

283
Rio 2016 Olympic contingent meets President
Photo: Sunday Times

பிரேஸில் நாட்டில் நடைபெறும் 2016 றியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொள்ளும் இலங்கை வீரர்களும் வீராங்கனைகளும் இன்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவைச் சந்தித்தனர்.

விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுடன் சுமுகமாகக் கலந்துரையாடிய ஜனாதிபதி, தாய்நாட்டுக்கு வெற்றியைப் பெற்றுத் தருவதற்காக அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.

2016 ஆகஸ்ட் மாதம் 05ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை 17 நாட்கள் 206 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 10,500 விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் பங்குபற்றும் இவ்விளையாட்டு விழா பிரேஸிலின் றியோ டி ஜெனெய்ரா நகரில் நடைபெறுகிறது.

2016 ஒலிம்பிக் போட்டிகள் தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய 306 பதக்கங்கள் தொகுதியையும் 28 ஒலிம்பிக் விளையாட்டுக்களையும் கொண்டிருக்கும்.

அதேபோன்று 1924ஆம் ஆண்டிற்குப் பின்னர் ரக்பி விளையாட்டும் 1904ஆம் ஆண்டிற்குப் பின்னர் கோல்ப் விளையாட்டும் மீண்டும் இம்முறை ஒலிம்பிக் போட்டிகளில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இம்முறை ஒலிம்பிக் போட்டிகளுக்கு இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 09 போட்டியாளர்கள் 08 போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ளனர். இலங்கை வீரர்கள் மரதன் ஓட்டப் போட்டி (ஆண், பெண்) ஈட்டி எறிதல் (ஆண்), பூப்பந்து, ஜுடோ, பாரம் தூக்குதல், நீச்சல் மற்றும் குறிபார்த்துச் சுடுதல் ஆகிய போட்டிகளில் நாட்டுக்கு பெருமையைத் தேடித் தரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

2016 ஒலிம்பிக் விளையாட்டு விழாவை முன்னிட்டு 04 நினைவு முத்திரைகளும் ஒரு தபால் உறையும் தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளதுடன், அதன் முதலாவது முத்திரையும் தபால் உறையும் ஜனாதிபதியிடம் இன்று கையளிக்கப்பட்டது. இந்நினைவு முத்திரை ரூ.8.00, ரூ.10.00, ரூ.35.00 மற்றும் ரூ.50.00 பெறுமதியுடவையாகும்.

விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, தபால் சேவைகள் அமைச்சர் அப்துல் ஹலீம் மற்றும் தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவர் ஹேமசிறி பெர்னாந்து ஆகியோர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஆதாரம்வீரகேசரி