நாளை கொழும்பில் ஆரம்பமாகும் யாழ்ப்பாணத்தை நோக்கிய சைக்கிள் சவாரி

243

யாழ்ப்பாணம் மானிப்பாய் க்றீன் ஞாபகார்த்த வைத்தியசாலை அபிவிருத்திக்கான நன்கொடையைப் பெற்றுக் கொடுப்பதற்காக Ride4Ceylon அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ள யாழ்ப்பாணத்தை நோக்கிய சைக்கிள் சவாரியின் அறிமுக நிகழ்வு நேற்று (25) கொழும்பில் இடம்பெற்றது.   

கடந்த 1847ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மானிப்பாய் க்றீன் ஞாபகார்த்த வைத்தியசாலை இலங்கையின் பழைமையான வைத்தியசாலையாகக் கருதப்படுகின்றது. இதன் பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக Ride4Ceylon உடன் இணைந்து மானிப்பாய் வைத்தியசாலையின் நண்பர்கள் (Friends of Manipay Hospital)“ என்ற பெயரில் செயற்படும் அமைப்பினரே இந்த வைத்தியசாலைக்கான நன்கொடையைப் பெற்றுக் கொடுக்கும் நற்பணியில் ஈடுபடுகின்றனர்.

மூன்றாவது முறை இடம்பெறவுள்ள Ride4ceylon இன் வடக்கை நோக்கிய சைக்கிள் சவாரி

Ride4Ceylon அறக்கட்டளையினால் 2017ஆம் ஆண்டிலிருந்து நடாத்தப்பட்டு வரும் இந்த சைக்கிள் சவாரி கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரை இடம்பெறுவதோடு, கிட்டத்தட்ட 400 கிலோ மீட்டர் வரையிலான பயணப்பாதையினை கொண்டதாகவும் அமைந்துள்ளது.

Ride4Ceylon அமைப்பினால் 2017ஆம் ஆண்டில் முதற்தடவையாக இந்த சைக்கிளோட்டத் தொடர் ஆரம்பிக்கப்படும் பொழுது அதில் 5 பேர் கலந்து கொண்டிருந்ததோடு, 2018ஆம் ஆண்டில் அது 25 பேராக மாறியிருந்தது. எனினும், இம்முறை மூன்றாவது முறையாக இடம்பெறவுள்ள சைக்கிள் சவாரியில் மொத்தமாக 45 பேர் பங்கு கொள்ளவுள்ளனர்.

அதேபோன்று, இம்முறை சேகரிக்கப்படும் நன்கொடைகள் மூலம் குறித்த வைத்தியசாலைக்கு தற்பொழுது தேவையாக உள்ள அம்பியூலன்ஸ் வண்டியொன்றைப் பெற்றுக்கொடுப்பதை ஏற்பாட்டாளர்கள் முக்கிய இலக்ககாக் கொண்டுள்ளனர். இதற்கு மேலதிகமாக, வைத்தியசாலையின் ஏனைய அபிவிருத்தி மற்றும் மருத்துவத் தேவைகளுக்காகவும் நன்கொடை சேகரிக்கப்படுகின்றது.

இந்நிலையில், கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி இடம்பெறவுள்ள குறித்த சைக்கிள் சவாரியின் அறிமுக நிகழ்வு நேற்று (25) கொழும்பு ஜெட்வின் செவன் ஹோட்டலில் இடம்பெற்றது. இதில், நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள், சைக்கிள் சவாரியில் பங்கொள்ளும் வீரர்கள் மற்றும் ஏனைய நன்கொடையாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Photos: Ride for Ceylon Launch Party 2019

குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு மானிப்பாய் வைத்தியசாலையின் நண்பர்கள்” அமைப்பின் உறுப்பினர் மைக்கல் ஆர்னொல்ட் கருத்து தெரிவிக்கையில்,

”இந்த வைத்தியசாலை இலங்கையின் முதலாவது வைத்தியசாலையாகவும், தெற்காசியாவின் இரண்டாவது வைத்தியசாலையாகவும் இருக்கின்றது. இந்த வைத்தியசாலைக்கு தற்பொழுது அதிகம் தேவையாக உள்ள அம்பியூலன்ஸ் வண்டியொன்றைப் பெற்றுக் கொடுப்பதை நாம் இம்முறை இந்த சைக்கிள் சவாரியின் முக்கிய நோக்காகக் கொண்டுள்ளோம்.

எமது இந்த நட்பணிக்காக கடந்த இரண்டு வருடங்களாகவும், இம்முறையும் அயராது உழைத்த ஒருவராக இருந்த டேவிட் சுரேஷிற்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்றார்.

குறித்த நிகழ்வின்போது, அவுஸ்திரேலியாவின் சிடி டட்ஸ் கழகத்தினரால் 25,500 அவுஸ்திரேலிய டொலர்கள் மானிப்பாய் வைத்தியசாலைக்கான அம்பியூலன்ஸ் வண்டிக்கான நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டது.  

தொடர்ந்து சைக்கிள் சவாரியில் பங்கு கொள்ளும் வீரர்களுக்கான உத்தியோகபூர்வ ஆடை அறிமுகம் இடம்பெற்றது. அத்தோடு, சைக்கிள் சவாரியில் பங்கு கொள்ளும் வீரர்கள் அனைவரும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.   

எதிர்வரும் 27ஆம் திகதி காலை 5 மணிக்கு கொழும்பில் இருந்து ஆரம்பிக்கப்படும் இம்முறை சைக்கிள் சவாரியின் முதல் நாள் ஓட்டம் யாபவுஹ வரை சென்றடையும். தொடர்ந்து அடுத்த நாள் சவாரி அநுராதபுரம் வரையிலும், மூன்றாவது தினம் அநுராதபுரம் முதல் கிளிநொச்சி வரையிலும் இடம்பெறும்.

வரலாறு படைத்த டெஸ்ட் வீரர்கள் இலங்கை வருகை

இறுதியாக, மார்ச் மாதம் இரண்டாம் திகதி கிளிநொச்சியில் இருந்து ஆரம்பிக்கப்படும் இறுதி நாள் பயணம் யாழ்ப்பாணத்தை சென்றடையும். அதன் பின்னர், இந்த நற்பணியில் பங்காளர்களாக உள்ள அனைவரும் இணைந்து மானிப்பாய் க்றீன் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கான நன்கொடையைக் கையளிப்பர்.  

இந்த வருடத்திற்கான நன்கொடை சேகரிப்பில் இதுவரையில் மிகப் பெரிய தொகைப் பணம் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் சில தொகையை எமக்கு சேகரிக்கலாம் என்றும் Ride4Ceylon அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

இதேவேளை, குறித்த மனித நேயப் பணியில் ஏனையவர்களுக்கும் இணைந்துகொள்ளலாம் என நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

அதற்காக www.ride4ceylon.com என்ற இணையத்தளத்தினூடாக அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் ஊடாக தொடர்பினை ஏற்படுத்த முடியும். அல்லது கீழுள்ள வங்கிக் கணக்கிற்கு உங்கள் நிதி உதவிகளை வழங்க முடியும்.  

INSTITUTE OF MEDICAL SCIENCES TRUST

Commercial Bank of Ceylon PLC
Jaffna Branch,
Account number: 1060111500

மேலும் பல செய்திகளைப் படிக்க