யாழ்ப்பாணம் மானிப்பாய் க்றீன் ஞாபகார்த்த வைத்தியசாலை அபிவிருத்திக்கான பொருளாதாரத்தைப் பெற்றுக்கொடுக்க Ride4Ceylon அறக்கட்டளை நிறுவனம் ஏற்பாடு செய்த, சைக்கிள் சவாரி மிகவும் வெற்றிகரமாக இடம்பெற்று முடிந்திருக்கின்றது.
நல்ல காரியம் ஒன்றுக்காக இடம்பெற்ற இந்த சைக்கிள் சவாரி நான்கு நாட்களை கொண்டது என்பதோடு, யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வரையிலான 400 கிலோமீட்டர் வரையிலான பயணப்பாதையினையும் கொண்டதாகும்.
நாளை கொழும்பில் ஆரம்பமாகும் யாழ்ப்பாணத்தை நோக்கிய சைக்கிள் சவாரி
யாழ்ப்பாணம் மானிப்பாய் க்றீன் ஞாபகார்த்த வைத்தியசாலை அபிவிருத்திக்கான…
இலங்கையின் முதலாவது மருத்துவ பாடசாலையாக (Medical School) கருதப்படும் யாழ்ப்பாணம் மானிப்பாய் வைத்தியசாலை 1847 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டதாகும். இந்த வைத்தியசாலை இலங்கையில் ஏற்பட்ட கோரயுத்தம் காரணமாக சேதமடைந்து பல ஆண்டுகள் செயற்பாடற்ற நிலையில் காணப்பட்டிருந்தது.
எனினும், வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற இலங்கையர்களின் மானிப்பாய் வைத்தியசாலை நண்பர்கள் (Friends of Manipay Hospital) அமைப்பு வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இந்த வைத்தியசாலையை மீண்டும் இயங்கும் நிலைக்கு கொண்டு வந்திருந்தது.
அந்தவகையில் இந்த வைத்தியசாலையை இன்னும் புனரமைப்பு செய்யும் நோக்குடன் Ride4Ceylon இனால் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிய இந்த சைக்கிள் சவாரி, இந்த ஆண்டு மூன்றாவது முறையாக நடைபெற்றிருக்கின்றது. அதேநேரம் இந்த சைக்கிள் சவாரியினை வெற்றிகரமாக நடாத்தி முடிக்க, மானிப்பாய் வைத்தியசாலை நண்பர்கள் அமைப்பும் மூன்றாவது முறையாக Ride4Ceylon அறக்கட்டளை உடன் கைகோர்த்திருந்தது.
Ride4Ceylon நிறுவனத்தினால் 2017 ஆம் ஆண்டு இந்த சைக்கிள் சவாரி முதல் தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட போது, அதில் 5 பேர் மாத்திரமே கலந்து கொண்டிருந்த போதிலும் இந்த ஆண்டுக்கான சைக்கிள் சவாரியில் 44 பேர் வரையில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டுக்கான சைக்கிள் சவாரி மூலம் சேகரிக்கப்பட்ட நிதி, மானிப்பாய் கிறீன் வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வண்டி ஒன்றினை கொள்வனவு செய்ய உபயோகம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேநேரம், இதற்கு முன்னதாக இடம்பெற்ற சைக்கிள் சவாரிகளின் மூலம் சேகரிக்கப்பட்ட நிதி மானிப்பாய் கிறீன் வைத்தியசாலையின் கட்டிட புனரமைப்பு பணிகளுக்காகவும், சிறுவர் – இதய நோயாளர் பிரிவு விருத்தி மற்றும் எக்ஸ்ரே (X-Ray) இயந்திரம் விருத்தி என்பவற்றிற்கு பயன்படுத்தப்பட்டிருந்தது.
இந்த ஆண்டுக்கான சைக்கிள் சவாரி பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 2 ஆம் திகதி வரையில் இடம்பெற்றிருந்தது. பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி அதிகாலை 4.30 மணியளவில் கொழும்பில் இருந்து ஆரம்பித்த இந்த சைக்கிள் சவாரி நிகழ்வில் பங்கெடுத்துக் கொண்ட குழுவினர், சைக்கிள் சவாரி நிகழ்வின் முதல் நாளினை நிறைவு செய்த பின்னர் யாப்பஹூவ நகரில் தரித்திருந்தனர்.
மூன்றாவது முறை இடம்பெறவுள்ள Ride4ceylon இன் வடக்கை நோக்கிய சைக்கிள் சவாரி
மூன்று தசாப்தகால கோர யுத்தம் இலங்கைத் தீவினை பல்வேறு வகைகளிலும்…
இதனை அடுத்து இரண்டாம் நாளில் யாப்பஹூவவில் இருந்து அனுராதபுரம் சென்ற சைக்கிள் சவாரிக் குழுவினர், அங்கே விகாரை ஒன்றில் தமது பயணத்தினை இடைநிறுத்திக் கொண்டனர். முதல் இரண்டு நாட்களிலும் சைக்கிள் சவாரிக்குழு, கிட்டத்தட்ட 200 கிலோமீட்டர் தூரம் வரையில் பயணம் செய்திருந்தது.
இதனை அடுத்து மூன்றாம் நாளில் சைக்கிள் சவாரிக் குழுவினர் எஞ்சியிருக்கும் பயணப்பாதையை பூர்த்தி செய்ய அனுராதபுரத்தில் இருந்து கிளிநொச்சியை சென்றடைந்தனர். கிளிநொச்சியை சென்றடைந்த சைக்கிள் சவாரிக் குழு, அங்கு இருந்த சிறுவர் இல்லம் ஒன்றை பார்வையிட்டதுடன் குறித்த சிறுவர் இல்லத்திற்கு நன்கொடையாக ரூபா. 80,000 பணத்தினை ரொக்கமாக வழங்கியதோடு, வங்கிக் கணக்கு மூலமாக ரூபா. 100,000 பணத்தினை அன்பளிப்புச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு மேலதிகமாக, சைக்கிள் சவாரி குழுவினர் குறித்த சிறுவர் இல்லத்தில் கிரிக்கெட் போட்டி ஒன்றில் விளையாடி சிறுவர்கள் அனைவரையும் மகிழ்வித்திருந்ததும் விஷேட அம்சமாகும். சைக்கிள் சவாரிக் குழுவினர் மூன்றாம் நாளில் கிளிநொச்சியில் தரித்திருந்தனர்.
இதனை அடுத்து சைக்கிள் சவாரி குழுவினர், நான்காவதும் இறுதியுமான நாளில் அதாவது மார்ச் மாதம் 02 ஆம் திகதி கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் பயணித்து தமது சைக்கிள் சவாரிப் பயணத்தினை மாணிப்பாய் கீறின் வைத்தியசாலையில் வைத்து மிக வெற்றிகரமாக நிறைவு செய்து கொண்டனர்.
இந்த சைக்கிள் சவாரியின் போது நிதி சேகரிக்கப்பட்டது மட்டுமல்லாது தேவையுடைய பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்களும் பகிர்ந்து கொடுக்கப்பட்டிருந்தது.
மிக வெற்றிகரமாக இடம்பெற்ற இந்த சைக்கிள் சவாரி தொடர்பில் பேசிய மானிப்பாய் வைத்தியசாலை நண்பர்கள் அமைப்பு உறுப்பினர் திரு. மைக்கல் ஆர்னோல்ட் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
“2019 ஆம் ஆண்டுக்கான Ride4Ceylon சைக்கிள் சவாரி மிக வெற்றிகரமாக நடைபெற்று முடிந்திருக்கின்றது. இந்த ஆண்டு நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக நன்கொடைகளை சேகரித்திருக்கின்றோம். இதேநேரம், மேலதிகமாக இந்த சைக்கிள் சவாரியின் போது நாம் பாடசாலைகளுக்கும் விளையாட்டு உபகரணங்களையும் அன்பளிப்புச் செய்திருக்கின்றோம். இதற்காக மகிழ்ச்சி அடைவதோடு, 2020 ஆம் ஆண்டுக்கான சைக்கிள் சவாரியினையும் எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்.“
இதேவேளை, மாணிப்பாய் கீறின் வைத்தியசாலையை மேம்படுத்தி மனிதநேயப் பணி ஒன்றினை மேற்கொள்ள ஏனையவர்களுக்கும் ஒரு வாய்ப்பு உருவாக்கி தரப்படுகின்றது.
அதற்காக www.ride4ceylon.com என்ற இணையத்தளத்தினூடாக அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் ஊடாக தொடர்பினை ஏற்படுத்த முடியும். அல்லது கீழுள்ள வங்கிக் கணக்கிற்கு உங்கள் நிதி உதவிகளை வழங்க முடியும்.
INSTITUTE OF MEDICAL SCIENCES TRUST
Commercial Bank of Ceylon PLC
Jaffna Branch,
Account number – 1060111500
>>மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க<<