19 வயதுக்கு உட்பட்ட சிங்கர் கிண்ண மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்கள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் கொழும்பு தர்ஸ்டன் கல்லூரியை டக்வத் லூயிஸ் முறையின் மூலம் 8 விக்கெட்டுகளால் வென்று, தனது முதலாவது சிங்கர் மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்கள் கிரிக்கட் கிண்ணத்தை காலி ரிச்மண்ட் கல்லூரி சுவீகரித்தது.
அரையிறுதிப் போட்டியில் குருநாகல் மலியதேவ கல்லூரியை 8 விக்கெட்டுகளால் வென்று இறுதி போட்டிக்கு ரிச்மண்ட் கல்லூரி தகுதிபெற்றது. மறுமுனையில் நாலந்த கல்லூரியை 57 ஓட்டங்களால் வென்று தர்ஸ்டன் கல்லூரி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
வெஸ்லி கல்லூரி மைதானத்தில் ஞாயிற்று கிழமை (26) நடைபெற்ற இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தர்ஸ்டன் கல்லூரியானது முதலில் துடுப்பாட தீர்மானித்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தர்ஸ்டன் கல்லூரியானது சகல விக்கெட்டுகளையும் இழந்து 141 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. திருத்தப்பட்ட 140 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ரிச்மண்ட் கல்லூரியானது 25.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
போட்டியின் முதல் மூன்று பந்துகளின் பின்னர் துடுப்பாட்ட வீரர் பந்தை தெளிவாக காண்பதற்கு அமைக்கப்பட்ட திரை (sight screen) மீது புகார் கூறியமையின் காரணமாக, சீரமைக்கும் வரையில் போட்டி சுமார் 1 மணி நேரம் மறுபடி ஆரம்பிக்க காலதாமதம் ஆகியமையால், 43 ஓவர்களுக்கு போட்டி மட்டுப்படுத்தப்பட்டது.
முதலில் துடுப்பெடுத்தாடிய தர்ஸ்டன் கல்லூரியானது குறிப்பிட்ட இடைவெளிகளில் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தது. துடுப்பாட்ட வீரர்கள் தமக்கு சாதகமான மைதானத்தில் உச்ச பயனை பெற தவறினர். தர்ஸ்டன் கல்லூரி சார்பாக யேஷான் விக்ரமராச்சி 6 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 34 பந்துகளில் 37 ஓட்டங்களை பெற்றார்.
உபதலைவர் நிபுண் லக்ஷன் மற்றும் சரண நாணயக்கார முறையே 20 ,26 ஓட்டங்களை பெற்றதோடு 5ஆவது விக்கெட்டுக்காக 52 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர். ஒரு கட்டத்தில் தர்ஸ்டன் கல்லூரியானது 111 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து வலுவான நிலையில் காணப்பட்டது. எனினும் ஏனைய 6 விக்கெட்டுகளும் 30 ஓட்டங்களுக்கு தர்ஸ்டன் கல்லூரி இழந்தது.
வேகப் பந்துவீச்சாளர்களான திலங்க உதீஷான் மற்றும் விஜேசிறி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர் . மெண்டிஸ் சகோதரர்களான கமிந்து மற்றும் சந்துன் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றிக் கொண்டனர்.
140 எனும் இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய ரிச்மண்ட் கல்லூரியின் தலைவரான கமிந்து மெண்டிசை முதல் ஓவரிலேயே LBW முறை மூலம் ஆட்டமிழக்க செய்த சரண நாணயக்கார, தர்ஸ்டன் கல்லூரிக்கு நம்பிக்கை கொடுத்தார். ஆனாலும் இடதுகை துடுப்பாட்ட வீரரான தனஞ்சய லக்ஷான் 12 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 52 பந்துகளில் 61 ஓட்டங்களை பெற்றுக்கொண்டு ரிச்மண்ட் கல்லூரியின் வெற்றிக்கு வழியமைத்தார்.
ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஆதித்ய சிறிவர்தன பொறுமையாக துடுப்பெடுத்தாடி 66 பந்துகளில் 38 ஓட்டங்களை பெற்றுக்கொண்டு ரிச்மண்ட் கல்லூரியின் இன்னிங்ஸை வலுவாக்கினார். அவருடன் ஆட்டமிழக்காமல் காணப்பட்ட தவீஷ அபிஷேக் 24 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். சிறிவர்தன முறையே லக்ஷான் மற்றும் அபிஷேக்குடன் 88 மற்றும் 48 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொண்டார்.
போட்டியின் ஆட்ட நாயகனாக லக்ஷான்ன் தனஞ்ஜய தெரிவு செய்யப்பட்டார்.
போட்டியின் பின்னர் நம்மிடம் கருத்து தெரிவித்த ரிச்மண்ட் கல்லூரியின் பயிற்றுவிப்பாளரான தம்மிக்க சுதர்ஷன, இது ரிச்மண்ட் கல்லூரியின் முதலாவது அகில இலங்கை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிண்ணம் என உறுதி செய்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர் “ஓர் அணியாக இவ் இலக்கை முன்னரே திட்டமிட்டோம். கடந்த சில போட்டிகளில் இலக்கை துரத்தி செல்லும்போது நாம் ஒன்று அல்லது இரண்டு விக்கெட்டுகளையே இழந்தோம். இது நமது வீரர்களின் திறமையை வெளிக்காட்டுகிறது. ஒரு பயிற்றுவிப்பாளராக எனது நோக்கம் இலங்கைக்கு சிறந்த வீரர்களை உருவாக்குவது” என அவர் தெரிவித்தார்.
போட்டியின் சுருக்கம்
தர்ஸ்டன் கல்லூரி – 141 (38.1) – யேஷான் விக்ரமராச்சி 37, சரண நாணயக்கார 26, நிபுண் லக்ஷான் 20 , திலங்க உதிஷான் 3/29, ரவீஷ விஜேசிறி 3/21, கமிந்து மெண்டிஸ் 2/10, சந்துன் மெண்டிஸ் 2/19
ரிச்மண்ட் கல்லூரி – 140/2 (25.3) – தனஞ்ஜய லக்ஷான் 61, ஆதித்ய சிறிவர்தன 38* ,தவீஷ அபிஷேக் 24