இலங்கையில் இடம்பெறும் மிகப் பெரிய கால்பந்து தொடரான டயலொக் சம்பியன்ஸ் லீக்கின் இந்த பருவகாலத்திற்கான தொடரின் தீர்மானம் மிக்க ஆட்டத்தில் ரினௌன் விளையாட்டுக் கழகத்தை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய நடப்புச் சம்பியன் கொழும்பு கால்பந்துக் கழகம் தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் சம்பியன் பட்டத்தை வென்றது.

ஏற்கனவே இடம்பெற்று முடிந்த 16 போட்டிகளின் முடிவுகளின்படி ரினௌன் விளையாட்டுக் கழகம் 12 வெற்றிகள், 4 சமநிலையான முடிவுகளுடன் எந்தவித தோல்விகளையும் சந்திக்காத அணியாக 40 புள்ளிகளுடன் தரப்படுத்தலில் முதல் இடத்தில் நீடித்து வந்தது.  

இம்முறை டயலொக் சம்பியன்ஸ் கிண்ணம் யாருக்கு?

இலங்கையின் கால்பந்து ரசிகர்கள்…

அதே போன்று இறுதியாக இடம்பெற்ற இரண்டு DCL தொடர்களிலும் தொடர்ந்து சம்பியன் கிண்ணத்தை வென்ற அணியாக கருதப்படும் கொழும்பு கால்பந்து கழகம் இம்முறை விளையாடிய 16 போட்டிகளில் 11 வெற்றி, 4 சமநிலை மற்றும் ஒரு தோல்வி என்ற முடிவுகளுடன் 37 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தில் இருந்தது.

இவ்வாறான ஒரு நிலையில் இடம்பெற்ற தொடரின் இறுதி மோதலில், சம்பியனாகும் முனைப்புடன் இந்த இரண்டு அணிகளும் கொழும்பு குதிரைப் பந்தயத் திடல் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின.

இதில் ரினௌன் அணி சம்பியனாவதற்கு வெற்றி அல்லது ஒரு சமநிலையான முடிவே தேவையாக இருந்தது. எனினும் கொழும்பு அணி வீரர்கள் கட்டாயம் ஆட்டத்தை வெல்ல வேண்டிய நிலையில் இருந்தனர்.  

இந்நிலையில் ஆரம்பிக்கப்பட்ட போட்டியின் 5ஆவது நிமிடத்தில் ரினௌன் அணி கோலுக்கான முதல் முயற்சியைப் பெற்றது. ரினௌன் வீரர் மொஹமட் முஜீப் எதிர் தரப்பினரிடமிருந்து பந்தைப் பறித்து ட்வோரே மொஹமடுக்கு வழங்க, அவர் பந்தை ஜொப் மைக்கலுக்கு தட்டி விட்டார். மைக்கல் பந்தை வேகமாக கோல் நோக்கி உதைய, கொழும்பு கோல் காப்பாளர் கவீஷ் பந்தை தட்டி விட, பந்து பின்கள வீரர்களால் அங்கிருந்த வெளியேற்றப்பட்டது.

மீண்டும் 10ஆவது நிமிடத்தில் ரினௌன் வீரர் மொஹமட் அர்ஷாட் வேகமாக கோல் நோக்கி அடித்த பந்தும் கவீஷ் மூலம் தடுக்கப்பட்டது

அடுத்த இரண்டு நிமிடங்களில் கொழும்பு அணிக்கு, ரினௌன் அணியின் கோலுக்கு சற்று தொலைவில் வலது புறத்தில் ப்ரீ கிக்கிற்கான வாய்ப்பு கிடைத்தது. இதன்போது மொமாஸ் யாபோ உதைந்த பந்து கம்பங்களுக்கு மேலால் வெளியே சென்றது.  

ஆட்டத்தின் 15ஆவது நிமிடத்தில் கொழும்பு அணி வீரர் மொஹமட் பசால் மத்திய களத்தில் இருந்து ரினௌன் கோல் நோக்கி உயர்த்தி அடித்த பந்து வலதுபுற கம்பத்தின் மேல் பகுதியில்பட்டு வெளியேறியது.

அடுத்த மூன்று நிமிடங்களில் கொழும்பு அணியின் பெனால்டி பெட்டியினுள் இருந்து அணித் தலைவர் ரிப்னாஸ் வழங்கிய பந்தை ட்வோரே கோல் நோக்கி ஹெடர் செய்தார். பந்து இடதுபுற கம்பத்தில்பட்டவாறு வெளியேறியது.

மீண்டும் 27ஆவது நிமிடம் கொழும்பு அணியின் கோல் எல்லையில் வைத்து அவ்வணியின் பின்கள வீரர்களை சிறந்த முறையில் கடந்து பந்தை எடுத்துச் சென்ற ட்வோரெ மொஹமட் இறுதியாக அர்ஷாடுக்கு வழங்கிய பந்துப் பரிமாற்றத்தை அர்ஷாட் கம்பங்களுக்கு அருகில் இருந்து ஹெடர் செய்தார். எனினும், பந்து கம்பங்களை விட உயர்ந்து வெளியே செல்ல அடுத்த வாய்ப்பும் வீணானது

அதனைத் தொடர்ந்து தமது தரப்பின் எல்லையில் இருந்து பெறப்பட்ட பந்தை ஜொப் மைக்கல் சிறந்த முறையில் பெற்று, எதிரணி வீரர்களிடமிருந்து தன்னைத் தனிமைப்படுத்தி பந்தை கோல் நோக்கி வேகமாக உதைந்தார். அப்பந்து இடதுபுற கம்பத்தில்பட்டு திசை மாறியது.

எனினும் அடுத்த நிமிடம் ரினௌன் பின்களத்தில் தனது அபாரத்தைக் காண்பித்த இஸ்மயில் அபுமெரெ எதிரணியின் இறுதி எல்லை வரை சென்று பந்தை பரிமாற்றம் செய்ய, அதனைப் பெற்ற பசால் பந்தை கோலுக்குள் செலுத்தி கொழும்பு கால்பந்து கழகத்தை முன்னிலைப்படுத்தினார்.

அதன் பிறகும் இரு அணி வீரர்களும் பல முயற்சிகளை மேற்கொண்ட போதும் சிறந்த வாய்ப்புகள் எதனையும் உருவாக்க முடியாமல் போனது.

முதல் பாதியின் மேலதிக நேரத்தில் கொழும்பு தரப்பினரின் மத்திய களத்தில் இருந்து ட்வாரே உள்ளனுப்பிய பந்தை முஜீபினால் சிறந்த நிறைவைப் பெற்றுக்கொடுக்க முடியாமல் போனது. அந்த முயற்சியுடன் முதல் பாதி நிறைவுக்கு வந்தது.

முதல் பாதி: கொழும்பு கால்பந்து கழகம் 1 – 0 ரினௌன் விளையாட்டுக் கழகம்

இரண்டாவது பாதியின் முதல் முயற்சியாக கொழும்பு அணி வீரர்களுக்கு கிடைத்த கோணர் உதையின்போது உள்ளனுப்பப்பட்ட பந்து சகவீரரின் ஹெடர் மூலம் தன்னிடம் வர அபுமெரெ அதனை ஹெடர் மூலம் கோலுக்குள் செலுத்தினார். எனினும் இறுதித் தருவாயில் கோல் காப்பாளர் ராசிக் ரிஷாட் பந்தைப் பிடித்துக்கொண்டார்.

51ஆவது நிமிடத்தில் ரினௌன் வீரர்கள் எதிரணியின் கோல் திசைக்கு உள்ளனுப்பிய பந்து பின்களத்தில் இருந்த ஒரு வீரரின் உடம்பில்பட்டு அர்ஷாடிடம் வர, அவர் வேகமாக கோல் நோக்கி அதனை உதைந்தார். பந்து கம்பங்களை விட உயர்ந்தவாறு வெளியே சென்றது.  

ஆட்டத்தின் 60 நிமிடங்கள் கடந்த நிலையில் நீண்ட தூரப் பரிமாற்றத்தின் மூலம் பெற்ற பந்தை ஜொப் மைக்கல் எதிரணியின் கோல் நோக்கி எடுத்துச் சென்று பெனால்டி பெட்டிவரை சென்று கோலுக்குள் பந்தை செலுத்த முயற்சிக்கையில் மிக வேகமாக செயற்பட்ட கொழும்பு பின்கள வீரர் மூலம் பந்து மைக்கலிடம் இருந்து திசை திருப்பப்பட்டது.

ஆட்டத்தின் 75ஆவது நிமிடத்தில் கொழும்பு அணியின் கோல் எல்லையில் வைத்து கிடைத்த ப்ரீ கிக்கின்போது, ரிப்னாஸ் உள்ளனுப்பிய பந்தை ஜொப் மைக்கல் ஹெடர் செய்தார். எனினும் பந்து மைதானத்தில் இருந்து வெளியே சென்றது.

அடுத்த நிமிடம் மத்திய களத்தின் ஒரு திசையில் இருந்து பந்தைப் பெற்று கோலுக்கு நேராக மைதானத்தின் மத்திய பகுதிக்கு வந்து கோல் நோக்கி வேகமாக உதைந்தபோது, பந்தை கோல் காப்பாளர் கவீஷ் பாய்ந்து வெளியே தட்டிவிட்டார்.

இதனால் கிடைத்த கோணர் உதையின்போது உள்வந்த பந்தை ஜொப் மைக்கல் பெற்று கோல் நோக்கி எடுத்துச் செல்கையில் கவீஷ் மீண்டும் பாய்ந்து தடுத்தார்.

அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு அணி வீரர்களும் தொடர்ச்சியாக வாய்ப்புகளைப் பெற்று வந்தனர். குறிப்பாக ரினௌன் அணியின் ஜொப் மைக்கல் மற்றும் அர்ஷாட் ஆகியோர் தமக்கு கிடைத்த முயற்சிகளின்போது பந்தை வெளியே அடித்து வீணடித்தனர்.

இவ்வாறு இறுதி நிமிடங்களில் ரினௌன் அணி வீரர்கள் தமது ஆதிக்கத்தை செலுத்திய போதும் இறுதி விசில் ஊதப்படும்வரை அவர்களால் கோல் எதனையும் பெற முடியாமல் போனது.

எனவே, ரினௌன் அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய கொழும்பு அணி வீரருமான மொஹமட் பசால் முதல் பாதியில் பெற்ற கோல் மூலம் கொழும்பு கால்பந்து கழகம் வெற்றி பெற்று, இம்முறை சம்பியன் பட்டத்தை வென்றது.

இது அவர்கள் பெறும் தொடர்ச்சியான மூன்றாவது DCL சம்பியன் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு நேரம்: கொழும்பு கால்பந்து கழகம் 1 – 0 ரினௌன் விளையாட்டுக் கழகம்

ThePapare.com இன் ஆட்ட நாயகன் – ரௌமி மொஹிடீன் (கொழும்பு கால்பந்துக் கழகம்)

கோல் பெற்றவர்கள்  

கொழும்பு கால்பந்து கழகம் – மொஹமட் பசால் 37’