இலங்கையின் முன்னிலை கால்பந்தாட்டக் கழகங்களான கொழும்பு கால்பந்தாட்டக் கழகம், ரினௌவ்ன் விளையாட்டுக் கழகம், சோண்டர்ஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் ஜாவா லேன் விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான ஜனாதிபதி கிண்ணத்திற்கான சிட்டி கால்பந்து சுற்றுத்தொடர் ஏப்ரல் மாதம் 3ம் திகதி ஆரம்பமானது.
இதுவரை நடந்து முடிந்த போட்டிகளின் அடிப்படையில் கொழும்பு கால்பந்தாட்டக் கழகம் தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளது. ரினௌவ்ன் விளையாட்டுக் கழகம் ஒரு வெற்றியுடன் இரண்டாவது இடத்திலும் ஜாவா லேன் மற்றும் சோண்டர்ஸ் விளையாட்டுக் கழகங்கள் தலா ஒரு சமநிலை முடிவுகளுடன் இறுதி இரு இடங்களிலும் காணப்படுகின்றன.
போட்டி 01 – கொழும்பு கால்பந்தாட்டக் கழகம் 3-0 ரினௌவ்ன் விளையாட்டுக் கழகம் , ஏப்ரல் 2
சுற்றுப்போட்டித்தொடரின் முதல் போட்டி கிவ் பொய்ண்ட்ஸ் வீதி மைதானத்தில் ஆரம்பமானது. ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கொழும்பு கால்பந்தாட்டக் கழகம் 3-0 என்ற ரீதியில் இலகு வெற்றியைப் பதிவு செய்தது.
ஆரம்ப நிமிடங்களில் ரினௌவ்ன் விளையாட்டுக் கழகம் போட்டியைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தாலும் கோல் போடும் முயற்சிகள் பலனளிக்கவில்லை. கொழும்பு கால்பந்தாட்டக் கழகத்தின் கோல் காப்பாளர் மொஹமட் இம்ரான் இரண்டு தடுப்புகளை மேற்கொண்டு போட்டியை சமநிலையில் வைத்திருந்தார்.
26வது நிமிடத்தில் கொழும்பு கால்பந்தாட்டக் கழகத்தின் தலைவர் போட்ரி டிமிட்ரி லாவகமான கோலொன்றைப் போட்டு தனதணியை முன்னிலைப் படுத்தினார். ரினௌவ்ன் விளையாட்டுக் கழகத்திற்கு இரண்டு இலகுவான வாய்ப்புகள் கிடைத்த போதிலும் அணி வீரர்கள் அதனை கோலாக மாற்றத் தவறினர். 3 மீட்டர் தூரத்திலிருந்து கோல் அடிப்பதற்கான யோகராஜாவின் முயற்சி கம்பத்தில் பட்டு வெளியேற மீண்டும் மொஹமட் ரப்னாஸ்ஸின் முயற்சியும் தடுப்பாட்டக்காரர்களால் தடுக்கப்பட்டது.
இரண்டாவது பாதியின் மத்தியில் ரினௌவ்ன் விளையாட்டுக் கழகத்தின் மொஹமட் ரிஸ்னி தவறான முறையில் தனுஷ்க மதுஷங்கவை வீழ்த்தியதால் சிவப்பு அட்டை வழங்கப் பெற்று மைதானத்திலிருந்து வெளியேறினார். ரினௌவ்ன் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஆரம்பத்திலிருந்து சிறப்பாக விளையாடிய போதிலும் அவரால் கோல் ஒன்றினைப் போட முடியவில்லை.
பத்து வீரர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட ரினௌவ்ன் விளையாட்டுக் கழகத்தால் கொழும்பு கால்பந்தாட்டக் கழகத்தின் தாக்குதல்களை சமாளிக்க முடியவில்லை.
போட்ரி டிமிட்ரியினால் உள்ளனுப்பப்பட்ட பந்தினை துவான் ரிஸ்னி தலையினால் கோலாக மாற்ற முற்பட்ட போதிலும் பந்து கோல் கம்பத்தை விலத்திச் சென்றது. தொடர்ந்து சர்வான் ஜோஹரினால் உள்ளனுப்பப்பட்ட பந்தும் ரினௌவ்ன் விளையாட்டுக் கழக தடுப்பாட்டக் காரர்களால் வெளியனுப்பப்பட்டது.
போட்டி முடிவடைவதற்கு ஒரு நிமிடம் இருக்கும் போது மதுஷங்கவினால் உள்ளனுப்பப்பட்ட பந்தை சர்வான் ஜோஹர் ஹெடர் மூலம் கோலாக்கி அணியின் வெற்றியை உறுதி செய்தார். மேலும் தொண்ணூற்றிரண்டாவது நிமிடத்தில் சர்வான் ஜோஹர் உள்ளனுப்பிய பந்தை ரவ்மி மொஹிடீன் கோலாக்கினார். போட்டி 3-0 என்ற ரீதியில் முடிவுக்கு வந்தது.
சிறப்பாட்டக்காரர் – சர்வான் ஜோஹர்.
போட்டி 02 – சோண்டர்ஸ் விளையாட்டுக் கழகம் 0-0 ஜாவா லேன் விளையாட்டுக் கழகம் , ஏப்ரல் 3
சோண்டர்ஸ் விளையாட்டுக் கழகம் கிவ் பொய்ண்ட்ஸ் வீதி, சிட்டி கால்பந்து லீக் மைதானத்தில் ஜாவா லேன் விளையாட்டுக் கழகத்தை எதிர்கொண்டது. பலம் பொருந்திய இரு அணிகளும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் விளையாடின. எனினும் இரு அணியினராலும் கோல் ஒன்றினைப் போட்டுக்கொள்ள முடியாததனால் போட்டி 0-0 என சமநிலையில் முடிவடைந்தது.
போட்டியின் ஆரம்பத்திலிருந்து இரு அணிகளும் பந்தினை தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கப் போராடினர். சரீர ரீதியிலான ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் ஈடுபட்டிருந்தனர். போட்டியின் முதலாவது வாய்ப்பு சோண்டர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் அலாபா நயன்கொரன் யூடாஸ்ஸிற்கு கிடைக்கப் பெற்றது. டிலான் கௌஷல்யவின் கோர்னர் பந்தினை ஹெடர் மூலம் அலாபா கோலாக்க முயன்ற போதிலும் பந்து கோல் கம்பத்திற்கு மேலாகச் சென்றது.
தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய சோண்டர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் 35 மீட்டர் தூரத்திலிருந்து அடித்த பந்தானது ஜாவா லேன் விளையாட்டுக் கழகத்தின் கோல் காப்பாளர் தம்மிக செனரத்தினால் தடுக்கப்பட்டது.
தொடர்ந்து போராடிய ஜாவா லேன் விளையாட்டுக் கழகம் கவுண்டர்-அட்டாக் முறை மூலம் வாய்ப்புகளை உருவாக்கத் தொடங்கினர். முதல் பாதியின் இறுதிக்கட்டத்தில் ஜாவா லேன் விளையாட்டுக் கழகத்திற்கு ப்ரீ-கிக் வாய்ப்பு கிடைத்த போதிலும் கோல் அடிக்க முடியவில்லை. இரு அணி வீரர்களுக்கும் பல வாய்ப்புகள் கிடைத்த போதிலும் அதனை கோலாக மாற்றத் தவறினர்.
இரண்டாவது பாதி ஆட்டம் ஆரம்பித்ததிலிருந்து இரு அணி வீரர்களும் கோல் போட்டு தம் அணியை முன்னிலைப்படுத்த முயற்சி செய்தனர். ஜாவா லேன் விளையாட்டுக் கழகத்தின் ரிஸ்கான் பாய்ஸரின் ப்ரீ-கிக் முயற்சி கோல் காப்பாளர் ராசிக் ரிஷாடினால் தடுக்கப் பட்டது. மேலும் ஜானக சம்பத் மற்றும் அக்ரமினால் அடித்த பந்துளும் தடுக்கப்பட்டன.
இரண்டாவது பாதியின் மத்தியில் சோண்டர்ஸ் விளையாட்டுக் கழகம் கோலொன்றைப் போட்ட போதிலும் ஓப் -சைட் நியதியின் மூலம் நிராகரிக்கப்பட்டது. மேலும் பல கவுண்டர்-அட்டாக் வாய்ப்புகளை ஜாவா லேன் அணியினர் உருவாக்கிய போதிலும் கோல் போடத் தவறினர்.
தொடர்ந்து உருவாக்கப்பட்ட வாய்ப்புகள் இரு அணியின் தடுப்பாட்டக்காரர்களாலும் தடுக்கப்பட்டது. ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் இரு அணி வீரர்களும் களைப்படையத் தொடங்கினர். மாற்று வீரர்கள் இரு அணிகளாலும் கொண்டுவரப்பட்ட போதிலும் கோல் அடிக்கும் முயற்சி வீணானது. போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
சிறப்பாட்டக்காரர் – அலாபா நயன்கொரன் யூடாஸ்.
போட்டி 03 – ரினௌவ்ன் விளையாட்டுக் கழகம் 3-1 ஜாவா லேன் விளையாட்டுக் கழகம், ஏப்ரல் 9
இரு அணிகளும் தமது முதல் வெற்றியை பதிவு செய்யும் முயற்சியுடன் களமிறங்கின. 84வது நிமிடம் வரை ஜாவா லேன் விளையாட்டுக் கழகம் முன்னிலையில் இருந்தாலும் இறுதி 6 நிமிடங்களில் 3 கோல்களைப் போட்டு அபாரமாக வெற்றி பெற்றது ரினௌவ்ன் விளையாட்டுக் கழகம்.
முதல் பத்து நிமிடங்களில் இரு அணிகளும் பெரிதாகச் சோபிக்கத் தவறின. இரு அணிகளும் பந்தினை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயற்சி செய்தன. அதன் பின்பு ரினௌவ்ன் விளையாட்டுக் கழகம் தமது ஆதிக்கத்தை செலுத்திய போதிலும் ஜாவா லேன் விளையாட்டுக் கழகம் தமது முதலாவது போட்டியைப் போன்று கவுண்டர்-அட்டாக் மூலம் கோல் போடும் முயற்சிகளில் ஈடுபட்டது.
ஜாவா லேன் விளையாட்டுக் கழக வீரர் யாபி யகோ அடித்த பந்து கோல் கம்பங்களை நழுவிச் சென்றது. மேலும் ரிஸ்கான் பாய்ஸரின் முயற்சியை கோல் காப்பாளர் மொஹமட் ரிஸ்கான் தடுத்தார். மேலும் ரினௌவ்ன் கழக தடுப்பாட்டக்காரரான பிரான்சிஸ் அக்பெடி, ஜானக சமிந்த அடித்த பந்தை லாவகமாக தடுத்து வெளியனுப்பினார்.
தமது வேகத்தால் ஆட்டத்தை கட்டுப்படுத்திய ஜாவா லேன் விளையாட்டுக் கழக அணியினர் முதலாவது பாதி நிறைவடைய 4 நிமிடங்கள் இருக்கும் போது கோலொன்றினைப் போட்டனர். பாய்ஸர் தனக்குக் கிடைத்த ப்ரீ-கிக் வாய்ப்பை கோலாக மாற்றி ஜாவா லேன் விளையாட்டுக் கழகத்தை முன்னிலை பெறச்செய்தார்.
இரண்டாவது பாதி ஆரம்பத்திலும் ஜாவா லேனிற்கு ப்ரீ-கிக் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இம்முறை பாய்ஸர் அடித்த பந்தை சரியாகக் கணித்துத் தடுத்தார் கோல் காப்பாளர் உஸ்மான். ரினௌவ்ன் விளையாட்டுக் கழகம் மீண்டும் தமது ஆதிக்கத்தை செலுத்தி எதிரணியின் எல்லையில் வாய்ப்புகளை உருவாக்கத் தொடங்கியது. ஜொப் மைக்கேல் மற்றும் பஸல் மொஹமட் இருவரும் போட்டியை சமநிலைக்கு கொண்டுவர முயற்சித்தபோதிலும் ஜாவா லேன் விளையாட்டுக் கழக கோல் காப்பாளர் செனரத்தைத் தாண்டி அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை.
எனினும் சளைக்காமல் விளையாடிய ரினௌவ்ன் விளையாட்டுக் கழக அணியினரின் முயற்சிக்குப் பலன் 85வது நிமிடத்தில் கிடைத்தது. புதிதாக கொண்டுவரப்பட்ட வீரர் மொஹமட் ஹுமைடை பெனால்டி பகுதியில் வைத்து பாஹிம் நிசாப்டீன் வீழ்த்த , கிடைத்த பெனால்டி வாய்ப்பை பஸல் கோலாக்கினார்.
தொடர்ந்து ரினௌவ்ன் விளையாட்டுக் கழகம் 89வது நிமிடத்தில் மீண்டுமொரு கோலைப் போட்டது. பஸல் மற்றும் மைக்கேலின் கோல் முயற்சிகளை தடுத்த கோல் காப்பாளரால் மொஹமட் ரிப்னாஸின் முயற்சியை தடுக்க முடியாமற் போனது. பந்தை உட்செலுத்தி ரினௌவ்ன் விளையாட்டுக் கழகத்தை முன்னிலைப் படுத்தினார் மொஹமட் ரிப்னாஸ்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரிப்னாஸ் கோல் காப்பாளர் செனரத்தின் தவறை கோலாக மாற்றி ரினௌவ்ன் கழகத்தை வெற்றி பெறச் செய்தார்.
சிறப்பாட்டக்காரர் – மொஹமட் ரிப்னாஸ்.
போட்டி 04 – கொழும்பு கால்பந்தாட்டக் கழகம் 2-0 சோண்டர்ஸ் விளையாட்டுக் கழகம், ஏப்ரல் 10
இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் நோக்கில் கொழும்பு கால்பந்தாட்டக் கழகமும் முதலாவது வெற்றியைப் பெரும் நோக்கில் சோண்டர்ஸ் விளையாட்டுக் கழகமும் பலப் பரீட்சை நடாத்தின. சோண்டர்ஸ் கழகம் போட்டி முழுவதிலும் சிறப்பாக விளையாடினாலும் 2 கோல்களைப் போட்ட கொழும்பு கால்பந்தாட்டக் கழகம் இறுதிப் போட்டியினுள் நுழைந்தது.
கொழும்பு கால்பந்தாட்டக் கழகத்தின் தலைவர் போட்ரி டிமிட்ரி போட்டி தொடங்கி மூன்றாவது நிமிடத்திலேயே கோலொன்றைப் போட்டு அணியை முன்னிலைப் படுத்தினார். அதன் பின்பு சற்றே தளர்வாக விளையாடிய கொழும்பு கால்பந்தாட்டக் கழகம் தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தியது. குறிப்பாக அனுபவ வீரர் மொஹமட் ரமீஸ் சிறப்பானதொரு ஆட்டத்தை வெளிக்காட்டினார்.
சோண்டர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் அணித்தலைவர் சனோஜ் சமீர மற்றும் அலாபா நயன்கொரன் ஆகியோர் சிறப்பாக விளையாடி பல வாய்ப்புகளை தோற்றுவித்தாலும் அவர்களது முயற்சிகளை கோலாக மாற்ற அணி வீரர்கள் தவறினர்.
பந்து, முழுவதுமாக கொழும்பு கால்பந்தாட்டக் கழகத்தின் எல்லையிலேயே காணப்பட்டாலும் அவர்களது சிறப்பான தடுப்பாட்டம் சோண்டர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் கோல் வாய்ப்புகளை முறியடித்தது. முதலாவது பாதி முடிவடையும் தறுவாயில் இரு அணி வீரர்களுக்கும் தவறான நடவடிக்கைகளுக்காக மஞ்சள் அட்டைகள் வழங்கப்பட்டன.
முதலாவது போட்டியைப் போன்றே இரண்டாவது பாதியின் ஆரம்பத்திலும் கொழும்பு கால்பந்தாட்டக் கழகம் கோலொன்றைப் போட்டு கோல் எண்ணிக்கையை இருமடங்காக்கியது. டுவான் ரிஸ்னி சாதூர்யமாக செயற்பட்டு கோலை அடித்தார். அதனைத் தொடர்ந்து மீண்டும் தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியது கொழும்பு கால்பந்தாட்டக் கழகம்.
சோண்டர்ஸ் விளையாட்டுக் கழக வீரர்கள் கொலோன்றை அடிக்கப் போராடினாலும் அவர்களால் பலமான கொழும்பு கால்பந்தாட்டக் கழகத்தின் தடுப்பாட்டத்தைத் தாண்டி கோல் அடிக்க முடியாமல் போனது. இரு அணியிலும் தலா ஒரு வீரர் வீதம் இருவர் சிவப்பு அட்டை பெற்று மைதானத்தை விட்டு வெளியேறினர். போட்டி கொழும்பு கால்பந்தாட்டக் கழகத்திற்கு சாதகமாக முடிவடைந்தது.
சிறப்பாட்டக்காரர் – சனோஜ் சமீர.
எதிர்வரும் போட்டி விபரங்கள்-
ஏப்ரல் 23ம் திகதி சோண்டர்ஸ் விளையாட்டுக் கழகம் ரினௌவ்ன் விளையாட்டுக் கழகத்தை எதிர்கொள்ளவுள்ளது. கொழும்பு கால்பந்தாட்டக் கழகம் ஜாவா லேன் கழகத்தை ஏப்ரல் 24ம் திகதி சந்திக்கவுள்ளது. இரு போட்டிகளும் கிவ் பொய்ண்ட்ஸ் வீதி, சிட்டி கால்பந்து லீக் மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன் அதே மைதானத்தில் ஏப்ரல் 30ம் திகதி இறுதிப்போட்டி நடைபெறும்.