ரெட்புல் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் 3ஆம் நாள் போட்டிகள் இன்று நடைபெற்றன. தமது 3ஆவது போட்டியில் ஜிம்பாப்வே அணியை எதிர் கொண்ட இலங்கை அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றதன் மூலம் முதல் சுற்றில் சகல போட்டிகளையும் வெற்றி கொண்டு அரை இறுதிச் சுற்றுக்கு தெரிவாகியுள்ளது.
பி. சரா மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அதன்படி களம் இறங்கிய ஜிம்பாப்வே அணி இலங்கை அணியின் சிறப்பான பந்து வீச்சு மற்றும் களத்தடுப்பு மூலம் 14 ஓட்டங்களைப் பெறுவதற்குள் ஒரு ரன் அவுட் உள்ளடங்களாக 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாற ஆரம்பித்தது.
அடுத்து களம் இறங்கிய ஜொனதன் பெட்ரிக்ஸ் உடன் தச்சட்சவா இணைந்து இணைப்பாட்டமாக 13 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை 8 ஓட்டங்களுடன் ஜொனதன், கேஷான் விமலதர்மவின் பந்து வீச்சில் ஆட்டமிழக்க ஜிம்பாப்வே அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 31 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இக்கட்டான நிலையில் இருந்த ஜிம்பாப்வே அணிக்கு சற்று நம்பிக்கை தரும் விதத்தில் ஆடிய மிசிங்கேயா மடிலோன்கவா மற்றும் செட்ரிக் ஜோடி 6ஆவது விக்கெட்டுக்காக 37 ஓட்டங்களைப் பெற்றது. இதன் போது செட்ரிக் 27 பந்துகளுக்கு முகம்கொடுத்து 4 பவுண்டரிகள் உள்ளடங்களாக 23 ஓட்டங்களைப் பெற்றார். இவருடன் இணைந்து ஆடிய மிசிங்கேயா 23 பந்துகளுக்கு முகம்கொடுத்து 4 பவுண்டரிகள் உள்ளடங்களாக 20 ஓட்டங்களைப் பெற்றார். இறுதியில் ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 108 ஓட்டங்களைப் பெற்றது.
இலங்கை அணி சார்பில் மனோஜ் சரத்சந்திர மற்றும் கேஷான் விமலதர்ம ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றினர்.
இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 109 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட தமது வழமையான ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களில் மாற்றங்களை மேற்கொண்டவாராக களம் இறங்கியது. பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்ட கேஷான் 2 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை தெதெட்சந்ஸேவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். எனினும் மிகச்சிறப்பான இணைப்பாட்டத்தினை வழங்கிய தினுத் விக்ரமநாயக மற்றும் திலக்ஷ சுமணசிறி ஜோடி ஜிம்பாப்வே அணிக்கு இடைவிடாத அழுத்தத்தை பிரயோகித்தது.
திலக்ஷ அதிரடியாக ஆடி 11 பந்துகளுக்கு முகம்கொடுத்து 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உள்ளடங்களாக 30 ஓட்டங்களைப் பெற்றார். பங்களாதேஷ் அணியுடனான போட்டியில் சிறப்பாக விளையாடிய ஜனித் லியனகே இப்போட்டியில் 6 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். சுபெஷல ஜயதிலக்க மற்றும் தினுத் விக்ரமநாயக்க ஜோடி இலங்கை அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் ஓர் திருப்பம்
தினுத் 25 பந்துகளுக்கு முகம்கொடுத்து 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உள்ளடங்களாக ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்க சுபெஷல ஆட்டமிழக்காமல் 15 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.
பந்து வீச்சில் டபட்வன்ஷி மக்வேனா (Tafadzwanashe Makwena) 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். போட்டியின் சிறப்பாட்டகாரராக தினுத் விக்கிரமநாயக்க தெரிவு செய்யப்பட்டார்.
போட்டியின் சுருக்கம்
ஜிம்பாப்வே – 108 (20) – செட்ரேக் தபிவா 23, மிசிங்கேயா மடிலங்கோவா 20, மனோஜ் சரத்சந்திர 2/04, கேஷான் விமலதர்ம 2/15, கோஷான் ஜயவிக்கிரம 2/19
இலங்கை – 109/3 (10.5) – தினுத் விக்கிரமநாயக்க 31*, திலக்ஷ சுமணசிறி 30, சுபெஷல ஜயதிலக்க 15*, டபட்வன்ஷி மக்வேனா 2/19
B குழுவில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ள இலங்கை அணி, அரையிறுதியில் குழு A இல் இரண்டாம் இடத்தைப் பிடித்த அவுஸ்திரேலிய அணியுடன் எதிர்வரும் 15ம் திகதி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இதேவேளை ரெட்புல் பல்கலைக்கழக கிரிக்கெட் தொடரின் குழு நிலைப் போட்டிகள் யாவும் முடிவடைந்துள்ள நிலையில் இன்று நடைபெற்ற பங்களாதேஷ் மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய அணிகளுக்கிடையிலான போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் பங்களாதேஷ் அணியும், அவுஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் அவுஸ்திரேலிய அணியும், தென்னாபிரிக்க மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் தென்னாபிரிக்க அணியும் அரையிறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளன.
இதன்படி பாகிஸ்தான், இந்தியா, ஜிம்பாப்வே மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய அணிகள் குழுநிலை சுற்றுடனேயே தொடரிலிருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.