ரெட்புல் கிரிக்கெட் தொடரின் சம்பியனாக வாகை சூடிய பி.எம்.எஸ் கல்வி நிலையம்

280
Red Bull Campus Cricket 2017

ரெட்புல் நிறுவனத்தின் அனுசரணையோடு, கல்வி நிலையங்களுக்கு இடையில் நடைபெற்றிருந்த T-20 கிரிக்கெட் தொடரின் (Red Bull Campus Cricket Tournament) 2017 ஆம் ஆண்டிற்கான சம்பியனாக, சேஜிஸ் பல்கலைக்கழகத்தினை (Saegis Campus) 9 விக்கெட்டுக்களால் வீழ்த்திய பி.எம்.எஸ் (BMS) கல்வி நிலையம் தெரிவாகியுள்ளது.

ஜூலை மாத ஆரம்பத்தில் தொடங்கியிருந்த இந்த கிரிக்கெட் தொடரில், நாட்டில் கல்விச்சேவை வழங்குவதில் முன்னோடிகளாக திகழும் பல கல்வி நிறுவனங்கள் கலந்துகொண்டிருந்தன.

நேற்று (21), இடம்பெற்றிருந்த தொடரின் அரையிறுதிப்போட்டியொன்றில்  கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தினை (KDU) 104 ஓட்டங்களால் வீழ்த்திய சேஜிஸ் பல்கலைக்கழகம், மற்றைய அரையிறுதி ஆட்டத்தில் தர்ஸ்ட்டன் கல்லூரி அணியினரை 6 விக்கெட்டுக்களால் தோல்வியடையச் செய்த பி.எம்.எஸ் கல்வி நிலையத்தினை தீர்மானமிக்க தொடரின் இறுதிப் போட்டியில் எதிர்கொண்டிருந்தது.

இறுதிப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றிருந்த பி.எம்.எஸ் அணியின் தலைவர் தினுக் விக்கிரமநாயக்க முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை சேஜிஸ் பல்கலைக்கழக அணிக்கு வழங்கியிருந்தார்.

முதலில் துடுப்பாடிய சேஜிஸ் பல்கலைக்கழக வீரர்களுக்கு அதிரடியான ஆரம்பத்தினை வெளிக்காட்ட முடியுமாக காணப்பட்டிருப்பினும்,தேசிய அணி வீரர்களுடன் காணப்பட்ட பி.எம்.எஸ் அணியின் பந்து வீச்சாளர்களினை எதிர்கொள்வதில் தடுமாற்றத்தினை எதிர்கொண்டிருந்தனர்.

முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக ஆடியிருந்த அனுஷ பெரேரா 13 பந்துகளில் 2 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 20 ஓட்டங்களினை சேஜிஸ் அணிக்கு பெற்றுத்தந்தார். இவரைத் தவிர வேறு எந்த துடுப்பாட்ட வீரராலும் எதிரணியின் பந்து வீச்சினை சமாளித்து 20 ஓட்டங்களையேனும் பெற முடியவில்லை.

முடிவில், 17 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த சேஜிஸ் பல்கலைக்கழகம் 100 ஓட்டங்களினை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

பி.எம்.எஸ் அணியின் சார்பான பந்து வீச்சில், ஒரு ஓவரினை மாத்திரமே வீசிய ஜனித் லியனகே வெறும் 7 ஓட்டங்களிற்கு மூன்று விக்கெட்டுக்களை அபாரமாக கைப்பற்றியிருந்தார். அதேபோன்று, வனிது ஹஸரங்க மற்றும் கேஷான் விமலதர்ம ஆகிய வீரர்களும் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதம் தம்மிடையே பங்கிட்டுக்கொண்டனர்.

இதனையடுத்து, இலகு வெற்றியிலக்கான 101 ஓட்டங்களினை 20 ஓவர்களில் பெறுவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய பி.எம்.எஸ் கல்வி நிலைய அணியானது, முன்னர் பந்து வீச்சில் அசத்தியிருந்த விமலதர்மவின் அதிரடி ஆட்டத்துடன் 10.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் பறிகொடுத்து 105 ஓட்டங்களைப் பெற்று போட்டியின் வெற்றியாளராக மாறியது.  

பி.எம்.எஸ் அணியின் துடுப்பாட்டத்தில் கேஷான் விமலதர்ம 25 பந்துகளில் நான்கு சிக்ஸர்கள் மற்றும் நான்கு பெளண்டரிகள் அடங்கலாக 46 ஓட்டங்களினைப் பெற்று அரைச் சதத்தினை தவறவிட்டிருந்தார். அதோடு இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்த ஹஷான் துமிந்து 26 பந்துகளில் 29 ஓட்டங்களுடன் நின்றிருந்தார்.  

போட்டியின் சுருக்கம்

சேஜிஸ் பல்கலைக்கழகம் (Saegis Campus) – 100 (17) அனுஷ பெரேரா 20(13), நிப்புன கமகே 19(19), ஜனித் லியனகே 7/3(1), வனிது ஹஸரங்க 10/2(4), கேஷான் விமலதர்ம 12/2(3)

பி.எம்.எஸ் கல்வி நிலையம் (BMS) – 105/1 (10.4) கேஷான் விமலதர்ம 46(25), ஹஷான் துமிந்து 29(26)*

போட்டி முடிவுபி.எம்.எஸ் கல்வி நிலைய அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி