ரெட்புல் கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு மற்றுமொரு இலகு வெற்றி

1745

கிரிக்கெட் விளையாட்டின் 08 முன்னணி நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ரெட்புல் கிரிக்கெட் தொடர் தற்போது இலங்கையில் இடம்பெற்று வருகின்றது. இப் போட்டித் தொடரின் இரண்டாம் தினத்திற்கான நான்கு போட்டிகள் இன்று இடம்பெற்றதுடன், அதில் அதிரடித் துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணியானது ஐக்கிய அரபு இராட்சியத்தை 08 விக்கெட்டுகளினால் வீழ்த்தி இலகு வெற்றியை சுவீகரித்துக் கொண்டது.

ரெட்புல் பல்கலைக்கழக தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது இலங்கை

ரெட்புல் பல்கலைக்கழக கிரிக்கெட் தொடர் இம்மாதம் 10ஆம் திகதி தொடக்கம் 16ஆம் திகதி வரை ,…

பி. சரவணமுத்து மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நடப்புச் சம்பியனான இலங்கையை பிரதிநிதித்துவப்படும் வியாபார முகாமைத்துவக் கல்லூரி (BMS) நாணயச் சுழற்சியை வென்று முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய ஐக்கிய அரபு இராட்சியம் சார்பில் மொஹமட் நேல் 31 ஓட்டங்களையும் ரோஹித் ஜம்வால் ஆட்டமிழக்காது 30 ஓட்டங்களையும் குவித்தனர். அவ்வணி நான்கு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்த போதிலும், மந்தமான ஓட்ட வேகம் காரணமாக 20 ஓவர்கள் நிறைவில் 133 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

அவ்வணி சார்பில் வேகமாக ஓட்டங்கள் குவித்த ஒரே வீரரான இமாத் முஷ்தாக் 16 பந்துகளில் 3 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உள்ளடங்கலாக 26 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். பந்து வீச்சில் இலங்கை அணியின் அக்தாப் காதர், விக்கும் சஞ்சய மற்றும் அமில அபொன்சோ ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் வீழ்த்தியிருந்தனர்.

134 என்ற ஓட்ட இலக்கை நோக்கி ஆடுகளம் பிரவேசித்த இலங்கை அணி ஆரம்பம் முதலே வேகமான கதியில் துடுப்பெடுத்தாடியது. கேஷான் விமலதர்ம ஐந்து பந்துகளில் ஒரு பௌண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உள்ளடங்கலாக 11 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

எனினும் மறுமுனையில் துடுப்பெடுத்தாடி வந்த ஹஷான் துமிந்து 30 பந்துகளை எதிர்கொண்டு இரண்டு பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் ஆட்டமிழக்காது 40 ஓட்டங்களைக் குவித்தார். அவருக்கு சிறந்த பங்களிப்பை வழங்கிய லஹிரு மிலந்த தனது வழமையான அதிரடியை வெளிப்படுத்தி 30 பந்துகளில் ஆறு பௌண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களை விளாசி 47 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய மனோஜ் சரத்சந்திர, அணியின் சிறப்பான ஓட்ட வேகத்தை மேலும் அதிகரித்து 23 ஓட்டங்களை விளாசி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அவர் 16 பந்துகளில் இரண்டு பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸரை பெற்றுக்கொண்டார். அதன்படி இலங்கை அணி 13.3 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து இலகு வெற்றியை சுவீகரித்துக் கொண்டது.

இரண்டு சிறப்பான பிடியெடுப்புக்கள் மற்றும் அதிரடியான துடுப்பாட்டம் காரணமாக போட்டியின் ஆட்ட நாயகனாக மனோஜ் சரத்சந்திர தெரிவு செய்யப்பட்டார். இலங்கை அணியானது தமது முதலிரண்டு போட்டிகளிலும் இலகு வெற்றிகளை பதிவு செய்துள்ள நிலையில் நாளை (12) ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்ளவுள்ளது.

இதேவேளை, இன்று இடம்பெற்ற ஏனைய போட்டிகளில் பங்களாதேஷ் மற்றும் தென்னாபிரிக்க அணிகள் முறையே ஜிம்பாப்வே மற்றும் இந்திய அணிகளை படுதோல்வியடையச் செய்ததுடன், விறுவிறுப்பான போட்டியொன்றில் பாகிஸ்தான் அணியை தோற்கடித்த அவுஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளினால் வெற்றியை தனதாக்கியது.

போட்டியின் சுருக்கம்

ஐக்கிய அரபு இராட்சியம்: 133/4 (20) – மொஹமட் நேல் 31, ரோஹித் ஜம்வால் 30*, இமாத் முஷ்தாக் 26, அக்தாப் காதர் 1/13, அமில அபொன்சோ 1/17, விக்கும் சஞ்சய 1/27,

இலங்கை: 134/2 (13.3) – லஹிரு மிலந்த 47, ஹஷான் துமிந்து 40*, மனோஜ் சரத்சந்திர 23*

 முடிவு: இலங்கை (BMS) அணி 8 விக்கெட்டுகளினால் வெற்றி