தம்புள்ளையில் சனிக்கிழமை (13) இடம்பெற்ற இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடரின் இரண்டாவது போட்டி மழையின் இடையூறு காரணமாக நிறுத்தப்பட்டதனை அடுத்து, இப்போட்டியில் டக்வத் லூயிஸ் முறையில் இங்கிலாந்து அணி 31 ஓட்டங்களால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த புதன்கிழமை (10) இடம்பெற்ற இந்த ஒரு நாள் தொடரின் முதலாவது போட்டியும் மழை காரணமாக 15 ஓவர்கள் மட்டுமே வீசியிருந்த நிலையில் முடிவுகள் ஏதுமின்றி முழுமையாக கைவிடப்பட்டிருந்ததுடன், இரண்டாவது ஒரு நாள் போட்டியில் 79 ஓவர்கள் மட்டும் வீசுவதற்கு காலநிலை இடம் கொடுத்திருந்தது.
மாலிங்கவின் அபார பந்துவீச்சு வீண்: துடுப்பாட்டத்தின் தவறுகளால் இலங்கைக்கு மீண்டும் தோல்வி
காலநிலையின் சீற்றத்தினால் மீண்டும் தடைப்பட்ட இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் வைக்கப்பட்டிருந்த சிறப்பு பதிவுகளை நோக்குவோம்.
- மாலிங்கவுக்கு 500 சர்வதேச விக்கெட்டுக்கள்
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டியில், மொயின் அலியின் விக்கெட்டினை கைப்பற்றிய மாலிங்க சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மொத்தமாக 500 விக்கெட்டுக்களை கைப்பற்றியவராக புதிய மைல்கல் ஒன்றினை எட்டினார்.
இதேநேரம், மாலிங்க இந்த மைல்கல்லை எட்டிய நான்காவது இலங்கை பந்துவீச்சாளராகவும் பதிவாகியிருந்தார். மாலிங்கவிற்கு முன்னர் இலங்கை அணி சார்பில் 500 சர்வதேச விக்கெட்டுக்களை கைப்பற்றிய ஏனைய பந்துவீச்சாளர்களாக முத்தையா முரளிதரன், சமிந்த வாஸ் மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோர் அமைந்திருந்தனர்.
- மாலிங்கவின் மற்றுமொரு சாதனை
லசித் மாலிங்க இங்கிலாந்து அணியுடனான இரண்டாவது ஒரு நாள் போட்டியில், 44 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து மொத்தமாக 5 விக்கெட்டுக்களை கைப்பற்றி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்தார்.
இதன் மூலம், மாலிங்க ஒரு நாள் போட்டிகளில் 8ஆவது தடவையாக 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்ததோடு, ஒரு நாள் போட்டிகள் வரலாற்றில் இப்படியான ஒரு அடைவை மேற்கொண்ட நான்காவது பந்துவீச்சாளராகவும் மாறியிருந்தார்.
ஆசியக் கிண்ணப் போட்டிகளோடு இலங்கை அணிக்கு மீண்டும் திரும்பியுள்ள மாலிங்க ஒரு நாள் போட்டிகள் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணிக்கெதிராக இவ்வாறாக சிறந்த பந்துவீச்சினை வெளிப்படுத்தியது அவரது மீள்வருகையின் பெறுமதியை தேசிய அணியின் தேர்வாளர்களுக்கு உணர்த்தியிருக்கின்றது.
முத்தரப்பு T20 தொடரின் சம்பியனாக இந்திய கட்புலனற்றோர் கிரிக்கெட் அணி
- அதிஷ்டமற்ற இடமாக மாறியுள்ள தம்புள்ளை மைதானம்
இலங்கையின் விருப்பத்திற்குரிய மைதானங்களில் ஒன்றான தம்புள்ளை சர்வதேச மைதானம் கடந்த மூன்று ஆண்டுகளாக இலங்கையின் வெறுப்புக்குரிய ஒரு இடமாக இங்கிலாந்து அணியுடனான இரண்டாவது போட்டியுடன் மாறியிருக்கின்றது.
தம்புள்ளையில் கடைசியாக 2014 ஆம் ஆண்டே ஒரு நாள் போட்டியொன்றில் வென்ற இலங்கை அணியினர், சனிக்கிழமை நிறைவடைந்த இங்கிலாந்து அணியுடனான இரண்டாவது ஒரு நாள் போட்டியுடன் சேர்த்து 10 போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளனர். இதேநேரம், 2 போட்டிகள் சமநிலையில் முடிந்திருக்கின்றது.
இதற்கு முன்னதாக, தம்புள்ளையில் 13 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியிருந்த இலங்கை அணி 11 போட்டிகளில் வெற்றியை சுவைத்திருந்தது.
- ஆயிரம் ஓட்டங்களை எட்டிய முதல் வீரர்
குறித்த போட்டியில் 26 ஓட்டங்களை பெற்றுக் கொண்ட இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஜோனி பெயர்ஸ்டோவ், ஒரு நாள் போட்டிகளில் இந்த ஆண்டில் 1,000 ஓட்டங்களை கடந்த முதல் வீரராக பதிவாகினார்.
இப்போட்டியில் பெற்ற 26 ஓட்டங்களோடு 2018 ஆம் ஆண்டில் மொத்தமாக 1,026 ஓட்டங்களை குவித்திருக்கும் ஜோனி பெயர்ஸ்டோவ் குறித்த ஆண்டு ஒன்றில் ஆயிரம் ஓட்டங்களுக்கு மேல் பெற்ற இங்கிலாந்தின் ஆறாவது துடுப்பாட்ட வீரர் என்ற ஒரு சாதனைக்கும் சொந்தக்காரராக மாறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறாக பல சிறப்பு பதிவுகளுடன் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி நிறைவடைந்துள்ள நிலையில், கண்டியில் நடைபெறவுள்ள தொடரின் மூன்றாவது போட்டியில் எதிர்வரும் புதன்கிழமை (16) மீண்டும் இரண்டு அணிகளும் மோதவுள்ளன.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க