கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் கடந்த வாரம் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலஙகை சாதனையுடன் முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட டில்ஷி குமாரசிங்க, ஆசிய தரப்படுத்தலில் மீண்டும் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.
கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறித்த போட்டியை 2 நிமிடங்கள் 02.52 செக்கன்களில் நிறைவு செய்த அவர், புதிய இலங்கை சாதனை படைத்தார்.
பெண்களுக்கான 800 மீற்றரில் இலங்கை சாதனை படைத்தார் டில்ஷி குமாரசிங்க
இதன்படி, கடந்த 2017இல் கயன்திகா அபேரட்னவினால் நிலைநாட்டிய (2 நிமிடங்கள் 02.55 செக்.) சாதனையை முறியடித்த அவர், குறித்த போட்டியில் தனது அதிசிறந்த நேரப் பெறுமதியையும் பதிவு செய்தார்.
இறுதியாக கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் தங்கப் பதக்த்தை வென்ற டில்ஷி, ஆசிய தரப்படுத்திலில் முதல் ஆறு இடங்களில் இடம்பெற்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இதனிடையே, டில்ஷியுடன் போட்டியிட்டு முறையே இரண்டாவது, மூன்றாவது இடங்களைப் பெற்றுக்கொண்ட நிமாலி லியனாரச்சி மற்றும் கயன்திகா அபேரட்ன ஆகிய இருவரும் ஆசிய தரப்படுத்தலில் மூன்றாவது மற்றும் ஆறாவது இடங்களைப் பெற்றுக்கொண்டனர்.
அதேபோல, மற்றுமொரு இலங்கை வீராங்கனையான டில்ருக்ஷி சம்பிகா, ஆசிய தரப்படுத்தலில் எட்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
பெண்களுக்கான 800 மீற்றரில் ஆசியாவின் ஆதிக்கத்தை கைப்பற்றிய இலங்கை
உலக மெய்வல்லுனர் சங்கம், ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதிகளைப் பெறுவதற்கான தரவரிசை அடிப்படையிலான முறையை அறிமுகப்படுத்திய பின்னர் அந்த தரவரிசையில் வீரர்கள் முன்னேறுவது மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகின்றது.
இதன்படி, டோக்கியோ ஒலிம்பிக்கைப் பொறுத்தவரை, பெண்களுக்கான 800 மீற்றருக்கான அடைவுமட்டமாக 1 நிமிடம் 59.50 செக்கன்கள் என்ற கடினமான தூரம் நிர்ணயித்துள்ளது. இதில் நேரடி தகுதியின் மூலம் 23 வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள், மேலும் 25 பேர் உலக தரவரிசைப்படி தேர்வு செய்யப்படுவார்கள்.
எதுஎவ்வாறாயினும், டில்ஷி குமாரசிங்வின் பயிற்சியாளர் சுசந்த பெர்னாண்டோ அடுத்த இரண்டு மாதங்களில் ஒலிம்பிக் போட்டிகளுக்கான அடைவுமட்டத்தை டில்ஷி பூர்த்தி செய்வார் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, இம்முறை தேசிள மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டியில் திறமைகளை வெளிப்படுத்திய ஒருசில வீரர்கள் ஆசிய தரப்படுத்தலில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளனர்.
தேசிய தகுதிகாண் மெய்வல்லுனரில் தங்கம் வென்றார் சண்முகேஸ்வரன்
இதில் ஒலிம்பிக் அடைவுமட்டத்தை நெருங்கியுள்ள பெண்களுக்கான 3 ஆயிரம் மீற்றர் தடை தாண்டலில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட நிலானி ரத்னாயக்க, ஆசிய தரப்படுத்தலில் இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
அதேபோல, பெண்களுக்கான 100 மீற்றரில் முதலிடத்தைப் பெற்றுக்கொண் அமாஷா டி சில்வா ஆசிய தரப்பத்தலில் 6ஆவது இடத்தையும், ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்ட சப்ரின் அஹமட் ஆசிய தரப்பத்தலில் 10ஆவது இடத்தையும், ஆண்களுக்கான 200 மீற்றரில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட மொஹமட் சபான் ஆசிய தரப்பத்தலில் 4ஆவது இடத்தையும், ஆண்களுக்கான 400 மீற்றரில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட காலிங்க குமாரகே ஆசிய தரப்பத்தலில் 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
இதேநேரம், அமெரிக்காவில் அண்மையில் உயரம் பாய்தலில் இலங்கை சாதனை படைத்த உஷான் திவங்க பெரேரா ஆசிய தரப்படுத்தலில் முதலிடத்தில் உள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<