ஞாயிற்றுக்கிழமை அதிகாலை (29) பாரிஸ் அரங்கில் இடம்பெற்ற சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில், வின்சியஸ் ஜூனியரின் (Vinícius Júnior) கோலின் உதவியோடு லிவர்பூல் அணியை 1 – 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்த பருவகால சம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை ரியல் மட்ரிட் கழகம் வெற்றி பெற்றது.
இந்த வெற்றி மூலம் சம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை 14 ஆவது தடவை வென்று, ஐரோப்பாவில் அதிக தடவை சம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை வெற்றி பெற்ற அணியாக லா-லிகா சம்பியனான ரியல் மட்ரிட் கழகம் சாதனை படைத்தது.
கடந்த 2018 ஆம் ஆண்டு சம்பியன்ஸ் லீக் இறுதி போட்டியிலும் ரியல் மட்ரிட் அணி லிவர்பூல் அணியை 3 – 1 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி கிண்ணத்தை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த வருட இறுதி போட்டிக்கு ரசிகர்களிடையே மேலும் எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது.
>> WATCH – PSG முகாமையாளரையே மாற்றும் அதிகாரம் MBAPPE இற்கு | FOOTBALL ULAGAM
அதிகாலை 12.30 மணிக்கு ஆரம்பமாக இருந்த இப்போட்டி 30 நிமிடம் தாமதமாகவே ஆரம்பித்தது. பல ரசிகர்கள் அரங்குக்கு வர தாமதித்ததால், இப்போட்டி ஆரம்பிக்கவும் தாமதமாகியது. இதில் பல்லாயிரம் ரசிகர்கள் அரங்குக்கு வர முயற்சித்த போதும் அவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை தாக்குதல் நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டன.
இவ்வாறான பிரச்சனைகளின் மத்தியில் காலதாமதமாக ஆரம்பித்த இப்போட்டியில் ஆரம்பம் முதலே லிவர்பூல் அணி போட்டியில் ஆதிக்கம் செலுத்தியது. எனினும் லிவர்பூல் அணி அடித்த பல கோலுக்கான உதைகளை ரியல் மட்ரிட் அணியின் கோல் காப்பாளரான திபோ கோர்ட்டுவா அபாரமாக தடுத்தார். இந்த நிலையில் போட்டியின் 59 ஆவது நிமிடத்தில் ரியல் மட்ரிட் அணியின் வல்வெர்டே வழங்கிய பந்தை கோல் கம்பத்துக்குள் செலுத்தி, வின்சியஸ் ஜூனியர் ரியல் மட்ரிட்டுக்கான வெற்றி கோலை அடித்தார்.
இந்த போட்டி முழுவதும் லிவர்பூல் அணி வீரர்கள் 24 உதைகளையும், 9 கோலுக்கான உதைகளையும் அடித்தனர். மறுமுனையில் ரியல் மட்ரிட் அணி வீரர்கள் 4 உதைகளையும், 2 கோலுக்கான உதைகளையும் அடித்தனர்.
ரியல் மட்ரிட் அணி இறுதிப் போட்டியை வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணகர்த்தாவாக இருந்த அவ்வணியின் கோல் காப்பாளர் கோர்ட்டுவா, இப்போட்டியில் 9 தடுப்புகளை மேற்கொண்டார். இதன் மூலம் சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் அதிக தடுப்புகளை மேற்கொண்ட கோல்காப்பாளராக கோர்ட்டுவா வரலாற்று சாதனை படைத்தார்.
>> U17 ஆசியக்கிண்ண தகுதிச் சுற்றுக்கான குழு Jயில் இலங்கை
ரியல் மட்ரிட் அணியின் முகாமையாளராக கடமையாற்றும் கார்லோ அன்சலோடி (Carlo Ancelotti) தனது முகாமைத்துவ வாழ்க்கையில் 4 ஆவது சம்பியன்ஸ் கிண்ணத்தை கைப்பற்றினார். இதன் மூலம் வரலாற்றில் இக்கிண்ணத்தை அதிக தடவை வெற்றி பெற்ற முகாமையாளராக சாதனை படைத்தார் அன்சலோடி.
ரியல் மட்ரிட் அணியின் 34 வயது வீரரான மார்செலோ தனது இறுதிப்போட்டியை ரியல் மட்ரிட் அணிக்காக ஆடியதாக, இவ்விறுதி போட்டி முடிந்தவுடன் அறிவித்தார். 15 வருடங்கள் ரியல் மட்ரிட்டுக்காக விளையாடி, ஒரு கழக ஜாம்பவானாக சம்பியன்ஸ் லீக் வெற்றியுடன் ரியல் மட்ரிட்டுக்கு விடைகொடுத்தார் மார்செலோ.
இந்த பருவகால சம்பியன்ஸ் லீக் தொடரில் 15 கோல்களை அடித்து இப்பருவகால தொடரில் அதிக கோலடித்த வீரராக ரியல் மட்ரிட் அணியின் கரீம் பெனிஸிமா தன்னை பதிவு செய்தார்.
இந்த சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியுடன் 2021-22 பருவகாலத்திற்கான அனைத்து கால்பந்து போட்டிகளும் நிறைவு பெற்றன.
>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<