“சம்பியன்ஸ் லீக்கில் ரியல் மட்ரிட் சிறந்த அணியில்லை” – மெஸ்ஸி

Champions League

419

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை 14ஆவது தடவையாக வெற்றி கொண்டு  வரலாற்று சாதனையை ரியல் மட்ரிட் அணி படைத்துள்ள நிலையில், நடந்து முடிந்த சம்பியன்ஸ் லீக் தொடரில் ரியல் மட்ரிட் சிறந்த அணியில்லை என நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாற்றுக்கிழமை பிரான்சின் பரிஸ் நகரில் நடைபெற்ற இந்த பருவகாலத்திற்கான சம்பியன்ஸ் லீக் இறுதி போட்டியில் ஸ்பெயினின் லாலிக வெற்றியாளர்களான ரியல் மட்ரிட் அணி பிரீமியர் லீக் அணியான லிவர்பூலை 1க்கு 0 என வீழ்த்தி 14ஆவது தடவையாக சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது. இதன் மூலம் இக்கிண்ணத்தை அதிக தடவை வெற்றி பெற்ற அணியாகவும் மட்ரிட் மாறியது.

இந்த நிலையில் அர்ஜென்டினாவின் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அர்ஜென்டினாவின் கால்பந்து நட்சத்திரமான மெஸ்ஸி, “ரியல் மட்ரிட் இந்த தொடரில் சிறந்த அணியில்லை” என கூறினார்.

முன்னாள் பார்சிலோனா அணியின் வீரரும் தற்போதைய பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG) அணியின் வீரருமான மெஸ்ஸி மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“நாங்கள் (பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன்), ரியல் மட்ரிட் அணிக்கு எதிராக விளையாடிய போட்டி எங்களை துவம்சம் செய்து விட்டது. சிறந்த அணி எப்பொழுதுமே போட்டியை வெல்வதில்லை. எனினும் நான் ரியல் மட்ரிட் அணிக்கு எதிராக ஒன்றும் கூறவில்லை. ஏனெனில் அவர்கள் தான் ஐரோப்பாவின் சம்பியன்கள். எப்பொழுதும் அதை நோக்கியே செல்பவர்கள். எனினும், இந்த தொடரில் அவர்கள் சிறந்த அணியில்லை. சம்பியன்ஸ் லீக் தொடர் சூழ்நிலைகளை அடிப்படையாக கொண்டு விளையாடப்படுவது. சிறு சிறு தவறுகள் ஒரு அணியை தொடரில் இருந்து வெளியேற்றிவிடும். அதேபோல அதை சிறந்த தயார்படுத்தலோடு அணுகுபவர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவார்கள் அல்லது கிண்ணத்தை வெல்வார்கள்” என குறிப்பிட்டார்.

இம்முறை சம்பியன்ஸ் லீக் தொடரில் கரீம் பெனிஸிமா 17 நிமிடங்களில் அடித்த ஹட்ரிக் கோல்கள் மூலம் PSG  அணியை  16 அணிகள் சுற்றில் வெற்றி பெற்ற ரியல் மட்ரிட், தொடர்ந்து செல்சி அணியை காலிறுதியிலும், இங்கிலாந்தின் பிரீமியர் லீக் சம்பியன்களான மன்செஸ்டர் சிட்டி அணியை அரையிறுதியிலும் வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

                                >> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<