சிடானின் இடத்திற்கு ஸ்பெயின் தேசிய அணியின் பயிற்சியாளரை இணைக்கும் ரியெல் மெட்ரிட்

244
Julen Lopetegui

ஸ்பெயின் தேசிய கால்பந்து அணியின் பயிற்சியாளர் ஜூலன் லோபெட்டிகுய் உலகக் கிண்ணத்திற்கு பின்னர் ஐரோப்பிய சம்பியன் ரியெல் மெட்ரிட் கால்பந்துக் கழகத்துடன் மூன்று ஆண்டு ஒப்பந்தத்தில் இணையவிருப்பதாக அந்த கழகம் அறிவித்துள்ளது.

ரியெல் மெட்ரிட்டுக்கு வெற்றிகள் தேடிக்கொடுத்த சிடான் திடீர் ராஜினாமா

ரியெல் மெட்ரிட் அணி தொடர்ந்து மூன்றாவது…

பிரான்ஸ் முன்னாள் வீரர் சினேடின் சிடான் இரண்டு வாரங்களுக்கு முன் அதிர்ச்சி அளிக்கும் வகையில் ரியெல் மெட்ரிட் கழக முகாமையாளர் பொறுப்பில் இருந்து அதிரடியாக விலகினார். அந்த கழகம் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் சம்பியன் பட்டத்தை வென்று ஒருசில தினங்களிலேயே சிடான் இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

1990 களில் ரியெல் மெட்ரிட் அணிக்காக ஒரு வீரராக மூன்று ஆண்டுகள் ஆடி இருக்கும் லோபெட்டிகுய் 2020 ஆம் ஆண்டு வரை ஸ்பெயின் அணிக்கு பயிற்சியாளராக செயற்பட ஒப்பந்தம் செய்திருந்தார்.

எனினும், தற்போதைய தேசிய அணி பயிற்சியாளருக்கு ரியெல் மெட்ரிட்டுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள முடியுமாக அவரை முழுமையாக விடுவிப்பதாக ஸ்பானிய கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.  

போர்த்துக்கல்லுக்கு எதிரான உலகக் கிண்ண முதல்போட்டியை ஒட்டிய அணியின் பயிற்சி முகாம் வழமைபோன்று இடம்பெற மதிப்பளிக்கும்படி ஸ்பானிய கால்பந்து சம்மேளனம் கேட்டுக்கொள்கிறது என்று அந்த சம்மேளனம் விடுத்த அறிவிப்பில் கோரப்பட்டுள்ளது.  

2018 உலகக் கிண்ணம்: ஸ்பெயின் அணியின் முன்னோட்டம்

பிஃபா உலகத் தரவரிசையில் 6 ஆவது இடத்தில் இருக்கும்…

2012 ஐரோப்பிய சம்பியன் கிண்ணம் மற்றும் உலகக் கிண்ணத்தை வெல்ல ஸ்பெயின் அணியை வழிநடாத்திய விசென்டே டெல் பொஸ்கின் ஓய்வுக்கு பின்னரே 2016 ஆம் ஆண்டு 51 வயதுடைய லோபெட்டிகுய் அந்த அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றார்.

லோபெட்டிகுயின் கீழ் ஸ்பெயின் 20 போட்டிகளில் தோல்வியுறாத அணியாக இருப்பதோடு அண்டை நாடான போர்த்துக்கல்லுடனான வரும் வெள்ளிக்கிழமை போட்டியுடன் B குழுவில் உலகக் கிண்ணத்தை ஆரம்பிக்கவுள்ளது. அதற்கு பின்னர் அந்த அணி ஈரான் மற்றும் மொரோக்கோ அணிகளுடன் மோதவுள்ளது.

முன்னாள் கோல்காப்பாளரான லோபெட்டிகுய் 2008/09 இல் ஒரே ஒரு பருவத்தில் ரியெல் மெட்ரிட் B அணிக்கு பயிற்சியாளராக செயற்பட்ட பின்னர், 2010இல் ஸ்பெயின் 19 வயதுக்கு உட்பட்ட அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றார்.

அவரது பயிற்சியின் கீழ் ஸ்பெயின் இளையோர் அணி 2012 இல் 19 வயதுக்கு உட்பட்ட ஐரோப்பிய சம்பியன் பட்டத்தை வென்றது. அடுத்த 12 மாதங்களில் 21 வயதுக்கு உட்பட்ட அணியிலும் அவர் இதே சாதனையை புரிந்தார்.   

உலகக் கிண்ணத்தில் எதிர்பார்க்கப்படும் 10 வீரர்கள்

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் (FIFA)…

எனினும், கழக முகாமையாளராக லோபெட்டிகுய் போதுமான பெறுபேறை பெற்றதில்லை. அவர் 2003இல் ஸ்பெயினின் இரண்டாம் நிலை கழகமான ரயோ வெல்லகானோவில் இருந்து நீக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து போர்த்துக்கல்லின் போர்டோ கழகத்திற்கு இணைந்தபோதும் 2014/16 காலத்தில் அந்த கழகம் எந்த கிண்ணத்தையும் வெல்லவில்லை.  

ஸ்பெயினின் முன்னணி கழகமான ரியெல் மெட்ரிட், கடைசி லா லிகா பருவத்தில் சம்பியனான பார்சிலோனாவை விடவும் 17 புள்ளிகள் பின்தங்கி மூன்றாவது இடத்தையே பிடித்தது.  

ரியெல் மெட்ரிட்டின் முன்கள வீரர் க்ரேத் பேல், கழகத்துடன் தனது எதிர்காலம் பற்றி பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக குறிப்பிட்டிருந்தார். அதேபோன்று, அந்த கழகத்தின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் தனது எதிர்காலம் பற்றிய அறிவிப்பை வெளியிடப்போவதாக கூறியிருந்தார்.  

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<