ஸ்பெயின் நடுவர்கள் சங்கத்தின் துணைத் தலைவருக்கு பணம் கொடுத்தது தொடர்பில் பார்சிலோன கழகம் முகம்கொடுக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ரியல் மெட்ரிட் கழகம் ஆதரவை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்படும்போது தமது நலன்களை பாதுகாப்பதற்கு ரியல் மெட்ரிட் தயாராகி உள்ளது.
‘உழல்’, ‘நம்பிக்கை மீறல்’ மற்றும் ‘தவறான வர்த்தகப் பதிவுகள்’ குறித்து குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் பார்சிலோனா மீதான விசாரணை கடந்த வெள்ளிக்கிழமை (10) நீதிமன்றம் ஒன்றில் முன்னெடுக்கப்பட்டது. நடுவர்களின் தீர்ப்புகளில் தமக்கு சாதகமான முடிவுகளை பெற நடுவர் சங்கத் தலைவர் ஜோஸ் மரியா என்ரிக்ஸ் நெக்ரைரா மற்றும் அவரது நிறுவனத்திற்கு பார்சிலோனா 8.4 மில்லியன் யூரோக்களை கொடுத்ததாக வழக்குத்தொடுநர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தாம் எந்தத் தவறையும் செய்யவில்லை என்று மறுத்திருக்கும் பார்சிலொனா, 2001 மற்றும் 2018க்கு இடையே நெக்ரைராவின் ‘டஸ்னில் 95 எஸ்.எல்’ நிறுவனத்திற்கு பயணம் செலுத்தப்பட்டதை உறுதி செய்தது.
எனினும் இந்த நிறுவனம் ஒரு தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனம் என்றும் தொழில்முறை நடுவர்கள் தொடர்பான வீடியோ அறிக்கைகளைத் தொகுக்க, பயிற்சியாளர்களுக்கு தேவையான தகவல்களைப் பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் இந்தப் பணம் செலுத்தப்பட்டதாக விளக்கியுள்ளது.
இது தொடர்பில் பார்சிலோனா கழகத்துடன் சேர்த்து நெக்ரைரா மற்றும் பார்சிலோனா கழக முன்னாள் தலைவர்களான ஜோசெப் மரியா பார்டோமியு மற்றும் சன்ட்ரோ ரொசெல் ஆகியோர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்குகள் பார்சிலோனா நகர அரச வழக்கறிஞர் அலுவலகத்தால் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (12) நிர்வாக சபை கூட்டத்தை நடத்திய ரியல் மெட்ரிட் கழகம் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ளது. இதில் இந்த கடுமையான குற்றச்சாட்டுகள் பற்றி ஆராய்ந்திருக்கும் அந்தக் கழகம் தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளது.
‘உண்மையின் தீவிரத்தன்மை குறித்து ஆழ்ந்த அக்கறையை செலுத்துவதோடு நீதிச் செயற்பாட்டின் மீதான நம்பிக்கையை வலியுறுத்துகிறது. அதனை பாதுகாப்பதற்காக பாதிக்கப்பட்ட தரப்புகள் மீதான நீதிபதியின் விசாரணை ஆரம்பிக்கப்பட்ட விரைவில் எமது சட்டபூர்வ நலனை பாதுகாக்க முன்தோன்றுவதற்கு இணக்கம் எட்டப்பட்டது’ என்று ரியல் மெட்ரிட் கழகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் இதற்கு பதிலளித்திருக்கும் பார்சிலோனா தலைவர் ஜோன் லபோர்மா, தமது கழகத்தின் மரியாதைக்கு தீங்கு ஏற்படுத்தும் பிரசாரம் ஒன்றில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ரசிகர்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<