மனதை தயார் நிலைப்படுத்தி பாகிஸ்தானை எதிர்கொள்ளத் தயார் – குசல் பெரேரா

3258

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மனதை தயார்படுத்திக் கொண்டு தமக்கு தெரிந்த விடயத்தை சிறப்பாக செயற்படுத்துவதையே மேற்கொள்ள வேண்டி இருப்பதாக இலங்கை அணியின் விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான குசல் ஜனித் பெரேரா தெரிவித்தார்.

உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணி வெள்ளிக்கிழமை (07) பிரிஸ்டல் மைதானத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இரு அணிகளும் இதுவரை ஒரு போட்டியில் வென்று ஒன்றில் தோற்ற நிலையிலேயே பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இந்த போட்டிக்கான தயார்படுத்தல்கள் குறித்து குசல் பெரேரா thepapare.com இற்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் கூறியதாவது,

பாகிஸ்தானிடம் பெற்ற தோல்விகளுக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை?

“போட்டிக்காக சிறந்த முறையில் பயிற்சி செய்கிறோம். மனதைத் தான் தயார் செய்ய வேண்டி உள்ளது. ஏனென்றால் ஒருநாளில் அதிகம் பயிற்சி செய்து எதுவும் சாதிக்க முடியாது. மனதைத் தான் தயார்படுத்த வேண்டும்.

அவர்களின் (பாகிஸ்தான்) பந்துவீச்சாளர்களை எமது வீரர்கள் பார்த்திருக்கின்றனர். தயார்பாடுத்தல்கள் சிறந்த முறையில் உள்ளன. பயமின்றி தமக்கு தெரிந்ததை உச்சபட்சமாக செய்யவேண்டியதே உள்ளது” என்று தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கடந்த போட்டியில் இலங்கை அணி கடும் போராட்டத்திற்குப் பின்னரே வெற்றி பெற்றது. ஆரம்பத்தில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் மத்திய வரிசையில் ஒரு ஓட்டத்தை பெறுவதற்குள் 4 விக்கெட்டுகள் பறிபோயின. எனினும் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக வந்த குசல் பெரேரா 81 பந்துகளில் பெற்ற 78 ஓட்டங்களே இலங்கை அணி சவாலான இலக்கொன்றை நிர்ணயிக்க உதவியது.

“முதல் விக்கெட் வீழ்த்தப்படும்போது நல்ல நிலையில் இருந்தோம். நினைக்காத நேரத்தில் பல விடயங்களும் நடப்பதுதான் கிரிக்கெட்டின் சுபாவம். அதிக ஓவர்கள் துடுப்பாடுவதன் மூலம் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தவே அந்த நேரத்தில் நான் முயற்சித்தேன். ஓட்டங்களை உயர்த்தாமல் இருந்தால் நாம் எவ்வளவு நேரம் மைதானத்தில் இருந்தும் பயனில்லை” என்று குசல் பெரேரா தெரிவித்தார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<