இந்த வெற்றியை உற்சாக மருந்தாக கொண்டு இலங்கை முன்னேற வேண்டும் – சங்கக்கார

5880

லீட்ஸ் நகரில் நேற்று (21) இடம்பெற்று முடிந்த கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 27 ஆவது லீக் போட்டியில் இலங்கை அணி, இங்கிலாந்து அணியினை 20 ஓட்டங்களால் வீழ்த்தி த்ரில் வெற்றி ஒன்றினை பதிவு செய்தது.

ஒருநாள் அணிகள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இங்கிலாந்து அணிக்கு எதிராக இலங்கை அணி பெற்றுக் கொண்ட இந்த வெற்றிக்கு சமூக வலைத்தளமான டிவிட்டரில் இலங்கை அணியின் முன்னாள் வீரர்கள் உட்பட கிரிக்கெட் பிரபலங்கள் அனைவரிடமும் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

அபாரப் பந்துவீச்சால் உலகக் கிண்ண அரையிறுதிக் கனவை தக்கவைத்த இலங்கை

இங்கிலாந்து மற்றும் இலங்கை…

இலங்கை, இங்கிலாந்து அணிகள் இடையிலான போட்டி இடம்பெற்ற லீட்ஸ் ஆடுகளம் துடுப்பாட்டத்திற்கு சாதகமான ஆடுகளம் எனக் கூறப்பட்ட போதிலும், குறித்த போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 9 விக்கெட்டுக்களை பறிகொடுத்து 232 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

மிகவும் பலமான துடுப்பாட்ட வரிசையை இங்கிலாந்து அணி, கொண்டிருந்த காரணத்தினால் போட்டியின் வெற்றி இலக்கான சவால் குறைந்த 233 ஓட்டங்கள், சில ஓவர்களிலேயே பெறப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

எனினும், லசித் மாலிங்கவின் அனுபவம், தனன்ஞய டி சில்வாவின் சுழலில் அடுத்தடுத்து பறிபோன விக்கெட்டுக்கள் என இலங்கை அணியின் அபார பந்துவீச்சு இங்கிலாந்தின் வெற்றியினை தடை செய்திருந்தது.


இலங்கையின் வெற்றிக்கு காரணமான இந்த இரண்டு வீரர்களினதும் பந்துவீச்சு குறித்து கருத்துக்களை தெரிவித்த இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரரும், 2011 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணியினை வழிநடாத்தியவருமான குமார் சங்கக்கார இப்படியான ஒரு வெற்றிக்கு, இரண்டு வீரர்களதும் பந்துவீச்சு மிக முக்கிய காரணமாக இருந்ததாக தெரிவித்திருந்ததார்.

அத்தோடு இலங்கை அணியின் வெற்றியினையும் பாராட்டிய சங்கக்கார இந்த வெற்றியினை ஒரு உற்சாக மருந்தாக எடுத்து இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களும் இனிவரும் போட்டிகளில் சாதிக்க வேண்டும் என்ற வகையிலும் கருத்துக்களை பதிவிட்டிருந்தார்.

தனது அதிரடி மூலம் ஒருநாள் போட்டிகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற இலங்கை அணியின் முன்னாள் அதிரடி துடுப்பாட்ட வீரரான சனத் ஜயசூரியவும் இலங்கை அணியின் வெற்றிக்கு வாழ்த்தியதோடு இலங்கை அணி மிகச் சிறந்த பந்துவீச்சினை வெளிக்காட்டி இருந்தது எனவும் குறிப்பிட்டார்.

இலங்கை அணியின் வெற்றி குறித்து கருத்து வெளியிட்டிருந்த இலங்கை அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜயவர்தன, இப்போட்டியில் கிடைத்தது மகத்தான ஒரு வெற்றி என குறிப்பிட்டதோடு, அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கை அணியினை வழிநடாத்திய திமுத் கருணாரத்னவினையும் பாராட்டியிருந்தார்.

மாலிங்க ஒரு வரலாற்று சாதனையாளர் – திமுத் கருணாரத்ன

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில்….

இதேநேரம் மஹேல ஜயவர்தன, இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணிக்காக அரைச்சதம் (85) ஒன்றுடன் போராடிய அஞ்செலோ மெதிவ்ஸினையும் வாழ்த்தினார்.

இதேவேளை புகழ்பெற்ற கிரிக்கெட் வர்ணனையாளரும், இலங்கை அணியின் முன்னாள் சகலதுறை வீரருமான ரசல் ஆர்னோல்ட் இந்த வெற்றி, ஒரு அணியாக ஒன்றிணைந்து செயற்பட்டமைக்கு கிடைத்த வெற்றி என்ற வகையில் கருத்துக்களை வெளியிட்டார். மேலும் ஆர்னோல்ட், அஞ்செலோ மெதிவ்ஸின் துடுப்பாட்ட இன்னிங்ஸையும் பாராட்டினார்.

இலங்கை அணியின் வெற்றி குறித்து இந்திய அணியின் துடுப்பாட்ட நட்சத்திரம் சச்சின் டென்டுல்கரும் கருத்துக்களை வெளியிட்டிருந்தார். டென்டுல்கர், இலங்கை அணி சிறந்த விடயம் ஒன்றை செய்து விட்டதாகவும் இலங்கை அணி துடுப்பாட்டத்தில் செய்த தவறினை பந்துவீச்சு மூலம் சரிப்படுத்தி விட்டதாகவும் தெரிவித்தார். மேலும் மாலிங்கவின் பந்துவீச்சினையும் பாராட்டிய டென்டுல்கர், இங்கிலாந்து அணி தமது எஞ்சிய லீக் போட்டிகளை சவால்மிக்க அணிகளுடன் விளையாடவிருப்பதால் ஆச்சரியங்கள் சில நடக்க வாய்ப்பிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

டென்டுல்கர் ஒருபுறமிருக்க இந்திய அணியின் மற்றுமொரு நட்சத்திர துடுப்பாட்ட வீரரான வி.வி.எஸ். லக்ஷ்மனும் இலங்கை அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். அத்தோடு லக்ஷ்மன் அனுபவம் எப்படி உதவும் என்பதற்கு இந்த போட்டியில் லசித் மாலிங்க, அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோர் முன்னுதாரணமாக இருந்தனர் எனவும் குறிப்பிட்டார்.

இவர்களோடு பாகிஸ்தான் அணியின் வேகப்புயலான சொஹைப் அக்தர், இங்கிலாந்தின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் மைக்கல் வோகன், இந்தியாவின் முன்னாள் துடுப்பாட்ட வீரர்களான மொஹமட் கைப் மற்றும் விரேந்தர் சேவாக், மேற்கிந்திய தீவுகளின் தொலைக்காட்சி வர்ணனையாளர் இயன் பிசொப் ஆகியோரும் வாழ்த்துக்களை பகிர்ந்திருந்தனர்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<