ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் ஏற்பாட்டில் முதல் முறையாக இடம்பெறும் ஒற்றுமைக் கிண்ண கால்பந்து சுற்றுத் தொடர் இம்மாதம் 2ஆம் திகதி (நாளை) முதல் 15ஆம் திகதி வரையில் மலேசியாவின் குஷிங் நகரில் இடம்பெறவுள்ளது.
இதில் பங்கு கொள்ளும் இலங்கை அணியினர் தாய்நாட்டில் இருந்து வெளியேறி அங்கு சென்றுள்ளனர்.
Photos: Sri Lanka National Squad Practice Session | Solidarity Cup
Sri Lanka National Football Squad Practice Session | Solidarity Cup 2016
குறித்த பயணத்தை மேற்கொள்வதற்கு முன்னர் இலங்கை தேசிய கால்பந்து அணியின் பயிற்றுவிப்பாளர் டட்லி ஸ்டேன்வோல், மற்றும் அணியின் சிரேஷ்ட துணைத் தலைவர் ஆகியோர் ThePapare.com இற்கு பிரத்யேகமான பேட்டி ஒன்றினை வழங்கினார்.
இதன்போது, அண்மையில் இடம்பெற்ற கம்போடிய சுற்றுப்பயணம் மற்றும் அணியின் தற்போதைய தயார் நிலை குறித்து பயிற்றுவிப்பாளர் டட்லி ஸ்டேன்வோல் கருத்து தெரிவிக்கும்பொழுது,
”கடந்த 10 மாதங்களாக இலங்கை தேசிய அணி எந்தவித சர்வதேச போட்டியிலும் பங்கு கொள்ளவில்லை. எனவே அண்மைய கம்போடிய விஜயம் ஒற்றுமைக் கிண்ணத்திற்கான ஒரு சிறந்த அனுபவத்தை எமக்கு தந்தது. அதன்போது தனிநபர் விட்ட தவறுகளின் காரணமாகவே நாம் எதிரணிக்கு பல கோல்களை வழங்கினோம்.
எனினும் தற்பொழுது அந்த தவறுகளை சரிசெய்து, சிறந்த முறையில் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளோம். ஒற்றுமைக் கிண்ணத் தொடரில் அரையிறுதிப் போட்டிகளுக்கு வருவதே எமது முக்கிய இலக்காக உள்ளது. எனவே அதற்காக நாம் சிறந்த முறையில் தயாராகியுள்ளோம்” என்றார்.
இலங்கை அணியின் முக்கிய வீரர்கள் பலர் காயத்திற்கு உள்ளாகியுள்ளமையினால் அவர்கள் இத்தொடருக்கான குழாமில் இணைக்கப்படவில்லை. இது குறித்து ஸ்டேன்வோல் குறிப்பிடும்பொழுது,
“அணியின் இளம் வீரர்களான அபாம் அக்ரம், திலிப் பீரிஸ் மற்றும் ஞானரூபன் வினோத் ஆகியோர் காயம் காரணமாக இந்த சுற்றுத் தொடரில் அணியில் இடம்பெறவில்லை. அவர்கள் அனைவரும் சிறந்த வீரர்கள். குறிப்பாக ஞானரூபன் இலங்கை அணியில் உள்ள முன்னணி வீரர்களில் ஒருவர். அவர் இல்லாமை அணிக்கு பெரிய இழப்பாகும்.
எனினும் தற்பொழுது புதிதாக 6 பேர் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர். அவர்கள் தமது பணியை சிறப்பாக செய்வார்கள் என்று நம்புகின்றேன்” எனத் தெரிவித்தார்.
Photo Album: AFC Solidarity Cup (Malaysia 2016) – Press Conference
கம்போடியாவுடனான போட்டியின்போது இலங்கை அணிக்கு தலைவராக செயற்பட்ட சுஜான் பெரேராவே இந்த சுற்றிற்கும் அணிக்கு தலைமை தாங்குகின்றார். எனினும் தற்பொழுது அவர் மாலைதீவுகளில் இடம்பெறுகின்ற FA கிண்ணப் போட்டிகளில் விளையாடி வருகின்றார். எனினும் ஒற்றுமைக் கிண்ணப் போட்டியில் இலங்கை அணியுடன் அவர் இணைந்துகொள்வார்.
அதேபோன்று, அணியின் சிரேஷ்ட துணைத் தலைவராக நிபுன பன்டார செயற்படும் அதேவேளை, துணைத் தலைவராக மொஹமட் நிப்ராஸ் செயற்படுவார். இவர்களின் பங்களிப்பும் அணிக்கு மிகவும் வலு சேர்க்கும்.
இச்சுற்றுக்கான இலங்கைக் குழாமின் தயார் நிலை குறித்து அணியின் சிரேஷ்ட துணைத் தலைவர் நிபுன பன்டார ThePapare.com இடம் கூறும்பொழுது,
”கம்போடிய சுற்றுப் பயணத்தில் நாம் தோல்வியடைந்தமை குறித்து எந்த கவலையும் இல்லை. எமது குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான ஒரு சிறந்த சந்தர்ப்பமாக கம்போடியாவுடனான போட்டி அமைந்தது.
அணியில் சிரேஷ்ட மற்றும் திறமைமிக்க இளம் வீரர்கள் உள்ளனர். அதேபோன்று சுஜான் பெரேரா மாலை தீவுகளில் பெரிய ஒரு தொடரில் சிறப்பாக பிரகாசித்து வரும் ஒருவர். எனவே எமது அணி ஒரு வலுவான நிலையில் இருக்கின்றது. இந்த தொடரில் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” எனத் தெரிவித்தார்.