60 போட்டிகளைக் கொண்ட ஐ.பி.எல் கிரிக்கட் போட்டித் தொடரின் 39ஆவது போட்டி நேற்று மொஹாலி பஞ்சாப் கிரிக்கட் சங்க பிந்த்ரா மைதானத்தில் நடைபெற்றது.
இங்கிலாந்து மண்ணில் இலங்கை வெற்றி பெறுவதற்கான வழி
இபோட்டியில் முரளி விஜெய் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கொஹ்லி தலைமையிலான பெங்களூர் ரோயல் செலேன்ஜர்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைவர் முரளி விஜெய் முதலில் பெங்களூர் ரோயல் செலேன்ஜர்ஸ் அணியைத் துடுப்பெடுத்தாட அழைப்புவிடுத்தார்.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கட் இழப்பிற்கு 175 ஓட்டங்களைப் பெற்றது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய எ.பி..டி வில்லியர்ஸ் 35 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உட்பட 64 ஓட்டங்களையும், லோகேஷ் ராஹுல் 25 பந்துகளில் 42 ஓட்டங்களையும், சச்சின் பேபி 29 பந்துகளில் 33 ஓட்டங்களையும் பெற்றனர். பஞ்சாப் அணியின் பந்துவீச்சில் கரியப்பா மற்றும் சந்தீப் சர்மா ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுகளைக் கைப்பற்றினர்.
இதனையடுத்து, 176 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக முரளி விஜெயும், ஹசீம் அம்லாவும் களமிறங்கினர். அம்லா ஒரு முனையில் நிதானமாக விளையாட விஜெய் மறுமுனையில் அதிரடியாக விளையாடி ஓட்டங்களைப் பெற்று முதல் விக்கட்டுக்காக 45 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். பின் அம்லா 20 பந்துகளில் 21 ஓட்டங்களோடு ஆட்டமிழக்க, அடுத்து வந்த சாஹாவும் 16 ஓட்டங்களைப் பெற்று களத்தை விட்டு வெளியேறினார். தொடர்ந்து வந்த மில்லர் வந்த வேகத்தில் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இதனால் பஞ்சாப் அணி நெருக்கடிக்குத் தள்ளப்பட்டது. ஒரு புறம் விக்கட்டுகள் விழுந்தாலும், விஜெய் தனது அதிரடியான துடுப்பாட்டத்தால் எதிரணியை மிரட்டினார். இருப்பினும் 57 பந்துகளில் 12 பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் அடங்கலாக 89 ஓட்டங்களைக் குவித்திருந்த போது அவர் தனது விக்கட்டைப் பறிகொடுத்தார்.
இதனால் பெங்களூர் அணியின் கை மேலோங்கியது. பஞ்சாப் அணி 3 ஓவர்களில் 37 ஓட்டங்களை எடுக்க வேண்டியிருந்தது. ஜோர்டனால் வீசப்பட்ட 18வது ஓவரில் 13 ஓட்டங்கள் பெறப்பட்டது. ஆனால் வொட்சன் 19வது ஓவரை சிறப்பாக வீசி ஓட்டங்களைக் கட்டுப்படுத்தினார். இதனால் அந்த ஓவரில் 7 ஓட்டங்கள் மட்டுமே பெறப்பட்டது.
இதனால் கடைசி ஓவரில் பஞ்சாப் அணி வெற்றிபெற 17 ஓட்டங்கள் எடுக்க வேண்டியிருந்தது. கடைசி ஓவரை ஜோர்டன் வீசினார். அந்த ஓவரில் முதல் பந்தில் ஒரு ஓட்டம் பெறப்பட்டது. ஆனால் 2ஆவது பந்தில் பவுண்டரியும், 3ஆவது பந்தில் சிக்ஸரும் ஸ்டோனிக்ஸ்ஸினால் விளாசப்பட்டது. இதனால் கடைசி 3 பந்தில் 6 ஓட்டங்கள் என்ற நிலை ஏற்பட்டது. 4ஆவது பந்து சிறப்பாக வீசப்பட்டது. அதனால் அந்தப் பந்தில் ஓட்டங்கள் எதுவும் பெறப்படவில்லை. 5ஆவது பந்தில் 2 ஓட்டங்கள் எடுக்கப்பட்டது. இறுதியில் கடைசிப் பந்துக்கு 4 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற நிலை பஞ்சாப் அணிக்கு ஏற்பட்டது. ஆனால் அந்தப் பந்தில் இரண்டு ஓட்டங்கள் மட்டுமே பெறப்பட்டது. இதனால் பெங்களூர் ரோயல் செலேன்ஜர்ஸ் அணி ஒரு ஓட்டத்தால் வெற்றியை ருசித்தது. இறுதிவரை வெற்றிக்காக போராடிய பஞ்சாப் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கட் இழப்பிற்கு 174 ஓட்டங்களை மட்டுமே பெறமுடிந்தது. போட்டியின் ஆட்ட நாயகனாக பெங்களூர் அணியின் பந்துவீச்சில் 2 விக்கட்டுகளைக் கைப்பற்றிய வொட்சன் தெரிவுசெய்யப்பட்டார்.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்