இந்த வருட ஐ.பி.எல் கிரிக்கட் போட்டித் தொடரின் மற்றுமொரு போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் விராத் கொஹ்லி தலைமையிலான பெங்களூர் ரோயல் செலேன்ஜர்ஸ் அணி சஹீர் கான் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது.
பெங்களூர் சின்னஸ்வாமி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் தலைவர் சஹீர் கான் முதலில் பெங்களூர் ரோயல் செலேன்ஜர்ஸ் அணியைத் துடுப்பெடுத்தாட அழைப்புவிடுத்தார்.
இதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூர் ரோயல் செலேன்ஜர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கட்டுகளை இழந்து 191 ஓட்டங்களைக் குவித்தது. பெங்களூர் அணி சார்பாக விராத் கொஹ்லி 48 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கலாக 79 ஓட்டங்களையும், எ.பி டி விளியர்ஸ் 33 பந்துகளில் 55 ஓட்டங்களையும், ஷேன் வொட்சன் 19 பந்துகளில் 33 ஓட்டங்களையும் பெற்றனர். டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் சார்பாக பந்து வீச்சில் முஹமத் ஷமி 2 விக்கட்டுகளை வீழ்த்த சஹீர் கான் மற்றும் கார்லொஸ் பரத்வயிட் ஆகியோர் தலா ஒரு விக்கட் வீதம் வீழ்த்தினர்.
இதனை அடுத்து 192 என்ற பாரிய இலக்கை நோக்கி துடுப்பாடிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி 19.1 ஓவர்களில் 3 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. இதன் மூலம் டெல்லி டேர்டெவில்ஸ் அணி பெங்களூர் ரோயல் செலேன்ஜர்ஸ் அணியை 5 பந்துகள் மீதமிருக்க 7 விக்கட்டுகளால் வெற்றியீட்டியது.
டெல்லி டேர்டெவில்ஸ் அணி சார்பாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் குயின்டன் டி கொக் மிக அபாரமாகத் துடுப்பெடுத்தாடி 51 பந்துகளில் 15 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் அடங்கலாக 108 ஓட்டங்களையும், கருன் நயிர் 42 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 54 ஓட்டங்களையும் பெற்றனர். பெங்களூர் ரோயல் செலேன்ஜர்ஸ் அணியின் பந்து வீச்சில் ஷேன் வொட்சன் 2 விக்கட்டுகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் குயின்டன் டி கொக் தெரிவு செய்யப்பட்டார்.
நேற்றைய போட்டியில் குயின்டன் டி கொக்கினால் பெறப்பட்ட சதம் இவ்வருட ஐ.பி.எல் தொடரில் பெறப்பட்ட 1ஆவது சதமாகும். அதுமட்டுமின்றி 2010 ஏப்ரல் மாதத்திற்குப் பின் டெல்லி டேர்டெவில்ஸ் அணி பெங்களூர் ரோயல் செலேன்ஜர்ஸ் அணியை வெற்றியீட்டிய முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என்பது ஒரு முக்கிய விடயமாகும்.