RCB அணியில் வனிந்து ஹஸரங்கவுடன் இணையும் சமீர

473

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) T20 தொடரில் ஆடும் அணிகளில் ஒன்றான ரோயல் செலஞ்சர்ஸ், இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களான வனிந்து ஹஸரங்க மற்றும் துஷ்மன்த சமீர ஆகியோரினை ஒப்பந்தம் செய்திருக்கின்றது.

இலங்கை கிரிக்கெட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட 18 வீரர்கள்!

இந்த ஆண்டுக்கான (2021) IPL தொடரின் எஞ்சிய போட்டிகள் அடுத்த மாதம் தொடக்கம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள நிலையில் குறித்த போட்டிகளுக்கு வீரர்கள் பிரதியீடாகவே இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சகலதுறை வீரரான வனிந்து ஹஸரங்க மற்றும் துஷ்மன்த சமீர ஆகியோர் இணைக்கப்பட்டிருக்கின்றனர். 

அதன்படி, விராட் கோலி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் அணியில் வனிந்து ஹஸரங்க சுழல் பந்துவீச்சாளரான அடம் ஷம்பாவினை பிரதியீடு செய்ய, துஷ்மன்த சமீர வேகப் பந்துவீச்சாளரான டேனியல் சேம்ஸினை பிரதியீடு செய்கின்றார். அதேநேரம், சிங்கப்பூரினைச் சேர்ந்த துடுப்பாட்ட சகலதுறைவீரர் டிம் டேவிட் ரோயல் செலஞ்சர்ஸ் அணியில் பின் அலனின் பிரதியீட்டு வீரராக பெயரிடப்பட்டுள்ளார். 

அண்மையில் நிறைவுக்கு வந்த இலங்கை – இந்திய அணிகள் இடையிலான T20 தொடரில் 7 விக்கெட்டுக்களை சாய்த்திருந்த வனிந்து ஹஸரங்க, குறித்த தொடரின் நாயகனாக தெரிவாகியிருந்ததோடு, தொடர்ச்சியான திறமை வெளிப்படுத்தலின் காரணமாக IPL போட்டிகளில் விளையாடும் சந்தர்ப்பத்தினையும் முதல்முறையாகப் பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. அதேநேரம், துஷ்மன்த சமீர இதற்கு முன்னர் IPL போட்டிகளில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியினை பிரதிநிதித்துவம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

ஓமான் அணியுடன் T20 போட்டிகளில் ஆடவுள்ள இலங்கை 

மறுமுனையில், வீரர்கள் பிரதியீட்டுக்கு மேலதிகமாக ரோயல் செலஞ்சர்ஸ் அணியினர் இந்த ஆண்டுக்கான IPL தொடரில் தமது தலைமைப் பயிற்சியாளரான சைமன் கேடிச்சிற்குப் பதிலாக, மைக் ஹேஸனினை நியமனம் செய்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.  

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<