ரவிந்து ரசந்த சதம் குவிக்க முதல் நாள் நிறைவில் வலுப்பெற்றுள்ள தர்மசோக கல்லூரி அணி

1311
u19 cricket

சுவாரசியமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் பாடசாலை அணிகளுக்கு இடையிலான 19 வயதுக்குட்பட்ட ‘சிங்கர்’ கிரிக்கெட் தொடரில், இன்று ஆரம்பமாகிய போட்டிகளில் முதல் நாள் ஆட்ட நேர நிறைவின் போது, சிறப்பான துடுப்பாட்ட வலிமையினை காண்பித்த தர்மசோக கல்லூரி அணி வலுவடைந்திருப்பதுடன் ஏனைய போட்டிகளில் மாரிஸ் ஸ்டெல்லா, மலியதேவ கல்லூரி அணிகள் வலுப்பெற்றிருக்கின்றன.

அநுராதபுரம் மத்திய மகா வித்தியாலயம் எதிர் அம்பலாங்கொடை தர்மசோக கல்லூரி

அநுராதபுர சமதி மைதானத்தில் ஆரம்பமாகிய குழு C இற்கான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றியடைந்திருந்த தர்மசோக கல்லூரி அணியின் தலைவர் உஷான் இமான்த முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்தார்.

முதல் துடுப்பாட்டத்தில், வலது கை துடுப்பாட்ட வீரர் ரவிந்து ரசன்த சதம் தாண்டி 116 ஓட்டங்களையும், அணித்தலைவர் உஷான் இமன்த ஆட்டமிழக்காமல் அரைச்சதம் கடந்து 65  ஓட்டங்களையும் பெற்றனர்.

அவர்களின் உதவியுடன் தர்மசோக கல்லூரி தமது முதல் இன்னிங்சிற்காக, 56.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 310 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பந்து வீச்சில், சிதும் நிலுமிந்த 95 ஓட்டங்களினை  கொடுத்து அநுராதபுர மத்திய மகா வித்தியாலயத்திற்காக 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

பின்னர், துடுப்பாடிய அநுராதபுர மத்திய மகா வித்தியாலய அணி, ஆரம்பம் முதல் சரிவுகளை சந்தித்து இன்றைய ஆட்ட நேர நிறைவு வரை, 8 விக்கெட்டுக்களை இழந்து 184 ஓட்டங்களை பெற்றுக்கொண்டிருந்தது. துடுப்பாட்டத்தில், தனித்து நின்று போராடிய தனன்ஜய தம்மித்த 70 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் நிமேஷ் மெண்டிஸ், ஹர்ஷஜித் ரோஷன் ஆகியோர் தர்மசோக கல்லூரிக்காக தலா இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

தர்மசோக கல்லூரி: 310 (56.5), ரவிந்து ரசன்த 116, உஷான் இமன்த 65*, சிதும் நிலுமிந்த 5/95, மதுரங்க சந்திரரத்ன 2/75

அநுராதபுர மத்திய கல்லூரி: 184/8 (35), தனன்ஜய தம்மித்த 70*, ஹர்ஷஜித் ரோஷன் 2/22, நிமேஷ் மெண்டிஸ் 2/44


ஜனாதிபதி கல்லூரி எதிர் மலியதேவ கல்லூரி, குருநாகல்

புளும்பீல்ட் மைதானத்தில் ஆரம்பமாகிய இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்றிருந்த ஜனாபதி கல்லூரி அணியினர் முதலில் துடுப்பெடுத்தாடி, எதிரணியான மலியதேவ கல்லூரியின் சுழல் பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் திண்டாடினர்.

அவர்கள் தமது முதல் இன்னிங்சிற்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 155 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டனர். அவ்வணி சார்பாக சலாக்க பண்டார மாத்திரம் அதிகளவாக 37 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில், பந்து வீச்சில் தனது முழுத்திறமையினையும் இன்று வெளிக்காட்டியிருந்த இடது கை சுழல் பந்து வீச்சாளர் சன்ஜீவன் பிரியதர்ஷன வெறும் 21 ஓட்டங்களிற்கு 6 விக்கெட்டுக்களை மலியதேவ கல்லூரிக்காக பதம்பார்த்தார்.

பின்னர், துடுப்பெடுத்தாடிய குருநாகல் மலியதேவ கல்லூரி அணியினர், 4 விக்கெட்டுக்களை இழந்து 184 ஓட்டங்களை தமது முதல் இன்னிங்ஸ் சார்பாக பெற்று வலுப்பெற்றிருந்த போது, இன்றைய ஆட்ட நேரம் நிறைவிற்கு வந்தது. இன்று துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயற்பட்ட துலாஜ் ரணதுங்க 84 ஓட்டங்களுடனும் தமித்த சில்வா 56 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் நின்நிருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

ஜனாதிபதி கல்லூரி: 155 (50), சலாக்க பண்டார 37, றிபாஸ் மஹரூப் 33, சஜித்த லியனகே 27, சன்ஜீவன் பிரியதர்ஷன 6/21

மலியதேவ கல்லூரி: 197/4 (43), துலாஜ் ரணதுங்க 84*, தமித்த சில்வா 56*, தனுல சாமோத் 2/28


இசிபதன கல்லூரி எதிர் லும்பினி கல்லூரி

BRC ஆடுகளத்தில் ஆரம்பமாகியிருந்த குழு B இற்கான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற லும்பினி கல்லூரியின் தலைவர் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இசிபதன கல்லூரிக்கு வழங்கினார்.

இதன்படி களமிறங்கிய அவர்கள், ஆரம்பம் முதல் சிறப்பாக ஆடினர். இலங்கை கனிஷ்ட குழாத்தின் வீரர்களின் ஒருவரான சஞ்சுல குணவர்தன பெற்றுக்கொண்ட 88 ஓட்டங்கள் மற்றும் அயான சிரிவர்தனவின் அரைச்சதம்(56) ஆகியவற்றின் உதவியினால் இசிபதன அணி தமது முதல் இன்னிங்சுக்காக 91.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 281 ஓட்டங்களை குவித்தனர்.

இதன் போது போட்டியின் இன்றைய ஆட்ட நேரமும் நிறைவிற்கு வந்தது. பந்து வீச்சில் தனது திறமையினை வெளிப்படுத்தியிருந்த வலது கை சுழல் பந்து வீச்சாளரான தனுக்க தாபரே லும்பினி கல்லூரிக்காக இன்று 56 ஓட்டங்களிற்கு 5 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார்.

போட்டியின் சுருக்கம்

இசிபதன கல்லூரி: 281 (91.3), சஞ்சுல அபயவிக்ரம 88, அயான சிறிவர்தன 56, ஹர்ஷ ரத்நாயக்க 39, கலன பெரேரா 35, தனுக்க தாபரே 5/56, விமுக்தி குலதுங்க 3/88

போட்டியின் இரண்டாவது நாள் நாளை தொடரும்


பண்டாரநாயக்க கல்லூரி எதிர் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி

குழு D இற்கான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி அணி, முதலில் கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியை துடுப்பெடுத்தாட பணித்தது.

இதன்படி களமிறங்கிய அவ்வணி, தமது முதல் இன்னிங்சிற்காக 134 ஓட்டங்களினை மாத்திரம் பெற்று சுருண்டு கொண்டது. மோசமான துடுப்பாட்டத்தினை வெளிக்காட்டிய பண்டாரநாயக்க கல்லூரியின் சார்பாக அதிகபட்சமாக, ஹசிந்த தமல் 30 ஓட்டங்களினை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில், மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியின் சச்சிந்து கொலம்பகே 4 விக்கெட்டுக்களையும், ரவிந்து பெர்னாந்து 3 விக்கெட்டுக்களையும் பெற்றுக்கொண்டனர்.

பின்னர், தமது முதல் இன்னிங்சினை ஆரம்பித்த மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி அணி, லசித் குருஸ்புல்ல ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்ட 98 ஓட்டங்களுடன், தமது முதல் இன்னிங்சிற்காக 4 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது போட்டியின் இன்றைய ஆட்ட நேரம் நிறைவிற்கு வந்தது.

போட்டியின் சுருக்கம்

பண்டாரநாயக்க கல்லூரி: 134 (50.3), ஹசிந்த திமல் 30, பசிந்து பண்டார 26, சச்சிந்து கொலம்பகே 4/13, ரவிந்து பெர்னாந்து 3/26

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி: 165/4 (42), லசித் குருஸ்புள்ளே 98*, சதுர அனுராத 25

இந்த அனைத்து போட்டிகளினதும் இரண்டாவது நாள் ஆட்டம் நாளை தொடரும்