இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரத்னவின் துடுப்பாட்த்தை ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அபாரமாக ஆடிய திமுத் கருணாரத்ன 107 ஓட்டங்களை விளாசியிருந்ததுடன், டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் 5வது இடத்துக்கும் முன்னேறியிருந்தார்.
இலங்கை உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் 26 வருடங்கள்
இந்தநிலையில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் குறித்து தன்னுடைய யூடுப் பக்கத்தில் அஸ்வின் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டார்.
இதன்போது, “நாம் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றிபெற்றோம். இரண்டாவது டெஸ்டில் திமுத் கருணாரத்ன அற்புதமாக ஆடினர். இதுவொரு அதிசிறந்த துடுப்பாட்டம். எதிரணியாக இருந்தாலும், அவர் விளையாடும் போது, அந்த அழகினை பார்க்க முடிகின்றது. அவர் ஐசிசி டெஸ்ட் அணியிலும் இருந்துள்ளார். தற்போது, இலங்கை அணியின் தலைவராக உள்ளார். மிக அற்புதமாக விளையாடினார்”
அதேநேரம், இலங்கை கிரிக்கெட்டில் உள்ள திறமைகள் மற்றும் இலங்கை பாடசாலை கிரிக்கெட் கட்டமைப்பு தொடர்பிலும் அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.
“நான் மீண்டும் கூறுகிறேன். இலங்கை அணியில் சிறப்பான திறமைகள் உள்ளன. இலங்கை கிரிக்கெட் தொடர்பில் எமக்கு அதிகமாக தெரியாததன் காரணமாக கூறுகிறேன். இந்திய கிரிக்கெட் மற்றும் இலங்கை கிரிக்கெட்டுகளுக்கு இடையிலான கட்டமைப்பு வித்தியாசமாக இருக்கும்.
அவர்களுடைய பாடசாலை கிரிக்கெட் மிகவும் பலம் வாய்ந்தது. கடந்த காலங்களில் வருகைத்தந்த அனைத்து சிறந்த வீரர்களும் பாடசாலை கிரிக்கெட்டிலிருந்து வந்துள்ளனர். அதே பாடசாலை கிரிக்கெட்டிலிருந்து புதிய வீரர்களும் வருகின்றனர். திறமைகள் உள்ளன.
இலங்கை சிறிய நாடு என்பதால், பாடசாலை கிரிக்கெட்டிலிருந்து வீரர்களை சர்வதேச மட்டத்துக்கு அழைத்துச்சென்று அவர்களுக்கு நீண்ட நாட்களுக்கு வாய்ப்பை கொடுப்பர். அவ்வாறுதான் கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்கின்றனர். எனவே இலங்கை கிரிக்கெட் மீண்டும் முன்னேறும் என நினைக்கிறேன். இலங்கை கிரிக்கெட்டின் ஆயுள் சர்வதேச கிரிக்கெட்டுக்கு ஒரு முக்கியமான ஒரு விடயம். எனவே திமுத் கருணாரத்னவுக்கு வாழ்த்துக்கள். அதேநேரம், லசித் எம்புல்தெனியவும் சிறப்பாக பந்துவீசினார்”
இதேவேளை, இந்திய டெஸ்ட் தொடருடன் ஓய்வுபெற்ற இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் சுரங்க லக்மாலுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை அஸ்வின் பகிர்ந்துக்கொண்டார்.
“சுரங்க லக்மாலின் விக்கெட்டினை கைப்பற்றி பும்ரா அவரிடம் வேகமாக ஓடிச்சென்றார். நான் அவரை கடுமையாக வழியனுப்ப போகிறார் என எண்ணினேன். ஆனால், லக்மால் கடைசிப்போட்டியில் விளையாடுவதால் அவருக்கான வாழ்த்தை பும்ரா கைகொடுத்து தெரிவித்தார். நான் இந்தப்போட்டியில் மிகவும் மகிழ்ந்த ஒரு விடயமாக இது இருந்தது.
சுரங்க லக்மால் சர்வதேச கிரிக்கெட்டை நிறைவுசெய்துள்ளார். அடுத்ததாக இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு கௌண்டி போட்டிகளில் விளையாடுவார் என நினைக்கிறேன். கௌண்டி கிரிக்கெட்டானது தொழில்முறையானது. முழுமையாக விளையாடவேண்டும். குறித்த விடயம் நன்றாக அமையவேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி மூன்று T20I போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்த நிலையில், அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<