மீண்டும் பயிற்சியாளராக அவதாரம் எடுக்கும் ரங்கன ஹேரத்

105
Herath join New Zealand support staff

ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுடன் டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் குழுவில் இலங்கையின் முன்னாள் சுழல்பந்து வீச்சு ஜாம்பவான் ரங்கன ஹேரத் மற்றும் முன்னாள் இந்திய வீரரான விக்ரம் ரத்தோர் ஆகிய இருவரும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். 

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரிலும், அதனைத்தொடர்ந்து இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் நியூசிலாந்துஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது செப்டம்பர் 09ஆம் திகதி முதல் 13ஆம் திகதிவரை நொய்டாவில் நடைபெறவுள்ளது. 

அதனைத்தொடரில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணியானது செப்டம்பர் 18 முதல் 22ஆம் திகதி வரை முதல் டெஸ்ட் போட்டியிலும், செப்டம்பர் 26 முதல் 30ஆம் திகதிவரையிலும் விளையாடவுள்ளது. மேலும் இத்தொடரின் இரண்டு டெஸ்ட் போட்டிகளும் காலியில் நடைபெறவுள்ளது. 

இந்த நிலையில், இவ்விரெண்டு தொடர்களினதும் தங்களது அணியின் சுழல்பந்து வீச்சு பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் ரங்கன ஹேரத்தையும், துடுப்பாட்ட பயிர்சியாளராக இந்திய அணியின் முன்னாள் துடுப்பாட்ட பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் ஆகியோரையும் நியமிப்பதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இதில் விக்ரம் ரத்தோர் நொய்டாவில் நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தான் அணியுடனான ஒற்றை டெஸ்ட் போட்டியில் மாத்திரம் நியூசிலாந்து அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது 

நியூசிலாந்து அணியின் சுழல்பந்து வீச்சுப் பயிற்சியாளராக பாகிஸ்தானின் சக்லைன் முஷ்டாக் பணியாற்றியிருந்தார். எனினும், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் உள்ளூர் போட்டிகளுக்கான ஆலோசகராக சக்லைன் முஷ்டாக் நியமிக்கப்பட்டதையடுத்து ரங்கன ஹேரத்தின் சேவையைப் பெற்றுக்கொள்ள அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. 

46 வயதான ரங்கன ஹேரத், 93 டெஸ்ட் போட்டிகளில் 433 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு பங்களாதேஷ் அணியின் சுழல்பந்து வீச்சு பயிற்சியாளராக அவர் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை, ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக முன்னாள் சகலதுறை வீரர் ஜேக்கப் ஓரம் நியமிக்கப்பட்டார். தற்போது அவருடன் ரங்கன ஹேரத் மற்றும் விக்ரம் ரத்தோரும் நியூசிலாந்தின் பயிர்சியாளர் குழுவில் இணையவுள்ளமை அந்த அணிக்கு மிகப்பெரிய பலத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<