தேசிய விளையாட்டு விழா மரதனில் கிழக்கு மாகாண வீரருக்கு தங்கம்

National Sports Games 2022

239

தேசிய விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் ஆண்கள் பிரிவில் கிழக்கு மாகாணத்தின் டி.டபிள்யூ ரத்னபாலவும், பெண்கள் பிரிவில் மேல் மாகாணத்தைச் சேர்ந்த எம். பெரேராவும் தங்கப் பதக்கங்களை வென்று அசத்தினர்.

இதனிடையே, கடந்த ஆண்டு தேசிய விளையாட்டு விழாவின் பெண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மத்திய மாகாணத்தைச் சேர்ந்த வேலு கிருஷாந்தினிக்கு இம்முறை 5ஆவது இடத்தையே பெற்றுக் கொள்ள முடிந்தது.

விளையாட்டுத்துறை அமைச்சும், விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள 47ஆவது தேசிய விளையாட்டு விழாவுக்கான சைக்கிளோட்டம், மரதன் ஓட்டம் மற்றும் வேகநடை உள்ளிட்ட மூன்று போட்டிகள் கடந்த 7ஆம், 8ஆம் திகதிகளில் கம்பஹாவில் நடைபெற்றன.

இந்த நிலையில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டி கம்பஹா உடுகம்பொல மேம்பாலத்திற்கு அருகில் உள்ள பௌத்த விகாரை வளாகத்தில் கடந்த 7ஆம் திகதி நடைபெற்றது.

>> 47ஆவது தேசிய விளையாட்டு விழாவின் 3 போட்டிகள் இவ்வாரம் ஆரம்பம்

மொத்தமாக 42.195 கிலோ மீட்டர் தூரத்தைக் கொண்டதாக நடைபெற்ற இந்தப் போட்டியின் ஆண்கள் பிரிவில் முதலிடத்தை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த டி.டபிள்யூ ரத்னபால பெற்றுக்கொண்டார். போட்டித் தூரத்தை அவர் 2 மணித்தியாலம் 25.49 செக்கன்களில் பூர்த்தி செய்தார்.

இதேநேரம், வடமத்திய மாகாணத்தைச் சேர்ந்த அருணசிறி (2 மணி. 26:08 செக்.) வெள்ளிப் பதக்கத்தையும், வடமேல் மாகாணத்தைச் சேர்ந்த எஸ். குமார (2:26:58) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

இதனிடையே, பெண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டியில் மேல் மாகாணத்தைச் சேர்ந்த எம். பெரேரா தங்கப் பதக்கம் வென்றார். போட்டித் தூரத்தை 2 மணித்தியாலங்கள் 49.14 செக்கன்களில் அவர் நிறைவு செய்தார். மத்திய மாகாணத்தின் எம்.ஹேரத் வெள்ளிப் பதக்கத்தையும், சப்ரகமுவ மாகாணத்தின் டில்ஹானி லியனகே வெண்கலப் பதக்கத்தையும் சுவீகரித்தனர்.

இது இவ்வாறிருக்க, இம்முறை தேசிய விளையாட்டு விழா மரதன் ஓட்டத்தில் தமிழ் பேசுகின்ற வீரர்கள் எதிர்பார்த்தளவு திறமைகளை வெளிப்படுத்தவில்லை.

எவ்வாறாயினும், மத்திய மாகாணத்தைச் சேர்ந்த வேலு கிருஷாந்தினி 5ஆவது இடத்தையும், வட மாகாணத்தைச் சேர்ந்த எஸ். ஹேமப்பிரியா 12ஆவது இடத்தையும் பிடித்தனர்.

இதேவேளை, பெண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டியில் முதல் 10 இடங்களைப் பெற்றுக்கொண்ட வீராங்கனைகளில் ஐந்து பேர் சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பது மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதனிடையே, ஆண், பெண் இருபாலாருக்குமான 20 கிலோ மீட்டர் தூரம் கொண்ட வேகநடை போட்டி கம்பஹா உடுகம்பொல பௌத்த விகாரைக்கு அருகில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்றது.

இதன் ஆண்கள் பிரிவில் ஊவா மாகாணத்தைச் சேர்ந்த டி ருக்மால் தங்கப் பதக்கத்தையும், பெண்கள் பிரிவில் மேல் மாகாணத்தைச் சேர்ந்த கல்ஹாரி மதுரிகா தங்கப் பதக்கத்தையும் வெற்றி கொண்டனர்.

இதேநேரம், தேசிய விளையாட்டு விழாவின் மற்றொரு அம்சமான 82.5 கிலோ மீட்டர் தூரம் கொண்ட பெண்களுக்கான சைக்கிளோட்டப் போட்டி சனிக்கிழமையும் 165 கிலோ மீட்டர் தூரம் கொண்ட ஆண்களுக்கான சைக்கிளோட்டப் போட்டி ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற்றன.

இதில் ஆண்களுக்கான சைக்கிளோட்டப் போட்டியில் மேல் மாகாணத்தைச் சேர்ந்த அவிஷ்க மெடொன்சா தங்கப் பதக்கத்தையும், பெண்களுக்கான சைக்கிளோட்டப் போட்டியில் மேல் மாகாணத்தைச் சேர்ந்த அன்னி ஷெனாலி பெரேராவும் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தனர்.

அது மாத்திரமின்றி, ஆண்களுக்கான சைக்கிளோட்டத்தில் முதல் ஐந்து இடங்களையும் மேல் மாகாணத்தைச் சேர்ந்த வீரர்கள் பெற்றுக் கொண்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

>> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<